நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 01, 2011

தினம் ஒரு துணுக்கு - "நமது மாவட்டம் - விருதுநகர் (Virudhunagar) "

  

தலைநகரம் : விருதுநகர்
பரப்பு : 4,243.2 ச.கி.மீ
மக்கள் தொகை : 15,65,037
எழுத்தறிவு : 8,52,680 (55.14%)
ஆண்கள் : 7,84,912
பெண்கள் : 7,80,125
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 363



வரலாறு :

விருதுநகர் மாவட்டம் பல காலம் இராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. எனவே இராமநாதபுர மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் யாவும் விருதுநகர் மாவட்டத்திற்கும் பொருந்துபவனவாகும் (காண்க : இராமநாதபுர மாவட்டம்)

எல்லைகள் :

வடக்கில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களையும், கிழக்கில் இராமநாதபுர மாவட்டத்தையும், தெற்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களையும், மேற்கில் கேரளா மாநிலத்தையும் விருதுநகர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

வருவாய் நிர்வாகம் :

கோட்டங்கள்-2 (அரும்புக்கோட்டை, சிவகாசி); வட்டங்கள்-7 (திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி); வருவாய் கிராமங்கள்-608.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

நகராட்சிகள்-6, ஊராட்சி ஒன்றியங்கள்-11, பஞ்சாயத்துக்கள்-464, குக்கிராமங்கள்-1,447.

சட்டசபைத் தொகுதிகள் :

சட்டசபைத் தொகுதிகள்-6 (அருப்புக் கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம்).

பாராளுமன்றத் தொகுதி :

சிவகாசி.

கல்வி :

பள்ளிகள் : 1373 (அரசு மற்றும் தனியார்). கல்லூரிகள்-11 (வி.எச்.என்.எஸ். கல்லூரி, விருதுநகர்; வி.வி.வி. பெண்கள் கல்லூரி, விருதுநகர்; எஸ்.பி.கே.கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை; தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை; எஸ்.ஆர். நாயுடு நினைவு கலைக்கல்லூரி, சாத்தூர்; எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, சிவகாசி; அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி; ராஜூஸ் கல்லூரி, இராஜபாளையம், மெப்கோ பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோவில்; ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரி, இராஜபாளையம்); இராஜபாளையத்தில மணிமேகலை மன்றத்தின் ஆதரவில் தெலுங்கு வகுப்புகள் நடைபெறும் தெலுங்கு வித்தியாலயம் அமைக்கப் பட்டுள்ளது. மற்றும் பல்தொழில் கல்வி நிறுவனங்களில் ராஜபாளையத்தில் உள்ள இராமசாமிராஜா பாலிடெக்னிக்கும், விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கும் குறிப்பிடத்தக்கன.

மழையளவு :

சராசரி-811.7 மி.மீ.


ஆறுகள் :


அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு, மற்றும் கெளசிக ஆறு.

சுகாதாரம் :

அரசு மருத்துவமனைகள்-8, ஆரம்ப சுகாதார மையங்கள்-36

வங்கிகள் : 160

காவல் நிலையங்கள் : 43 (காவலர்கள்-1504)

தபால் நிலையங்கள் : 286

தொலைபேசிகள் : 23,924

திரையரங்குகள் : 80

பதிவுப்பெற்ற வாகனங்கள் : 34,570

சாலை நீளம் : 2,457கி.மீ

நியாயவிலைக் கடைகள் : 576

வழிபாட்டுத் தலங்கள் :

திருவில்லிப்புத்தூரிலுள்ள ஆண்டாள் ஆலயம், திருச்சுழியிலுள்ள ரமண மகரிஷி பிறந்த இடம், இருக்கன்குடியிலுள்ள மாரியம்மன் ஆலயம், இராஜபாளையத்திலுள்ள ஐயனார் கோவில் ஆகியன இம்மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும். ஆண்டாள் ஆலயத் தேர்த்திருவிழாவும், மாரியம்மன் கோவில் திருவிழாவும் முக்கியத் திருவிழா க்களாகும்.

மாரியம்மன் கோவில் :

இது விருது நகரில் உள்ளது. விருது நகர் மக்காளலும் சுற்றுவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றுர்களில் உள்ளவர்களாலும் பெரிதும் போற்றப்படும் கோவிலாகும். பங்குனியில் 21 நாள் விழா நடைபெறுகிறது தேர்த்திருவிழாவிற்கு முதல் நாள் தீச்சட்டி விழா நடைபெறுகிறது.

சிவகாசி கோவில்கள் :

சிவன் கோவில் திருவிழா வைகாசி ரோகணியில் நடைபெறும். பங்குனியில் மாரியம்மன் கோவில் திருவிழாவும், சித்ரா பெளர்ணமி அன்று பத்ரகாளியம்மன் விழாவும், சித்திரை விழாவையொட்டி பொருட்காட்சியும் நடைபெறும். சுப்ரமணியர் கோவிலின் தைப் பெருவிழா ஒன்பது நாள் உற்சவம் நடத்திக் கொண்டாடப்படுகிறது.

சாத்தூர் கோவில்கள் :

சாத்தூரின் கிழக்கிலுள்ள சாத்தூரப்பன் கோவில், சிவகாமசுந்தரி -சிதம்பரேஸ்வரர் கோவில், வைப்பாற்றின் கரையில் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட வெங்கடா சலபதி பெருமாள் கோவில் முதலியன சிறப்புமிக்க கோவில்களாகும்.

வேணுகோபால்சாமி கோவில் :

அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள பாளையப்பட்டியில் இக்கோவில் இருக்கிறது. வைகாசியில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் போது இங்கு மாட்டுத் தாவணிச் சந்தை கூடுகிறது.

வரதராசப் பெருமாள் கோவில் :

புதுப்பட்டிக் கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் புகழ்பெற்ற வைணவக் கோவிலாகும்.

திருமேனிநாதர் ஆலயம் :

திருச்சுழியில் உள்ள இக்கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு சேதுபதிகளால் விரிவாக்கப்பட்டது. மருதுபாண்டியர் கட்டிய மண்டபங்களும் உள்ளன. நகரத்தார்களும் இதற்கு திருப்பணி செய்துள்ளன. இக்கோவில் நடராசர் திருவுருவம் பச்சிலை மூலிகைகளால் ஆனது. அம்மன் சந்நதியில் தாசி மண்டபம் உள்ளது. ஆடியில் தபசு, மார்கழியில் மணிவாசகர் விழா, பங்குனியில் உத்திரம் ஆகிய திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இன்னும் பிரளய விடங்கர், பழனிக் குமாரசாமி ஆகிய கோவில்களும் இவ்வூரில் உள்ளன.

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் :

சேற்றுர் குறுநில மன்னர்களுக்கும் சொந்தமான இக்கோவில் தேவதானத்திற்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் தனித்துக் கட்டப் பட்டிருக்கிறது. பாண்டியனைக் கொல்ல சோழன் அனுப்பிய நச்சு கலந்த ஆடையின் மூலமாக நேரவிருந்த தீங்கை இவ்விறைவன் தவிர்த்தளியதால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். கோவிலருகே நாயக்கர் காலத்து மண்டமும், அரண்மனை மண்டமும் தேவர்கள் மண்டபமும், எதிரில் தெப்பக்குளமும் உள்ளன. வைகாசியில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

மகாலிங்கம் கோவில் :

இது சதுரகிரி மலையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. இவ்விறைவனின் மதுரை வாழ் செளராஷ்டிரர்களின் குலதெய்வம் ஆகும். இக்கோவிலுக்கு 3 கி.மீ தூரத்தில் சந்தன மகாலிங்கம் குகைக்கோவில் உள்ளது. தாணிப் பாறையில் அஷ்டலட்சுமி ஆசிரமம் உள்ளது.

வேங்கடாசலபதி கோவில் :

திருவில்லிப்புத்தூர் வட்டத்துள் திருவண்ணாமலை என்னும் தலத்தில வேங்கடாசலபதி கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் கோனேரி எனும் அழகிய குளம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. உலகிலேயே பெரிய விநாயகர் திருவுரு இதுவே.

நாச்சியார் கோவில் :

இக்கோவில் திருமலைநாயக்கரால் அழகிய சிற்பங்கள் அமையும் விதத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகும். திருப்பாவை முப்பதும் இக்கோவிலுக்குள் எழுதப்பட்டுள்ளன. 108 வைணவத் தலங்களில் உள்ள இறைவர்களின் பல்வேறு உருவங்களும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோவில் கி.பி.1850 வரை திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சியிலிருந்து திருக்கொட்டாரம் எனப்படும் கோவில் நெற்களஞ்சியம் உள்ளது. இங்குள்ள வடபத்திரசனர் உருவம் திருவனந்தபுரம் அனந்த பத்பநாபர் உருவத்தை ஒத்திருக்கிறது. தளபதி கான்சாகிப் இக்கோவிலை கொள்ளையிட முயன்ற போது, விலையுயர்ந்த விக்கிரங்கங்களை கி.பி.1800-இல் திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்குள்ள மாதவிப்பந்தல், கண்ணாடிக் கிணறு, திருப்பூர மண்டபம் ஆகியன காணத்தக்கவை. பங்குனி உத்திரத்தில ஆண்டாள் திருக்கல்யாணம் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் முப்பது நாளும் திருப்பாவை ஓதப்படுகிறது. புரட்டாசி கருடசேவையில் ஆண்டாளுக்குச் சூட்டிய மாலையை திருப்பதி ஏழு மலையானுக்கு அனுப்புவார்கள். திருப்பதியிலிருந்தும் ஆண்டாளுக்கு வரிசைகள் வருகின்றன. ஆடிப்பூரம் ஏழாம் திருநாளில் பெரியாழ் வாரைச் சிறப்பிக்கும் வண்ணம் நெல் அளக்கும் விழாவும் எண்ணெய் காப்பு விழாவும் நடைபெறும். வாரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் ஆண்டாளும் ரங்க மன்னாரும் ஊஞ்சல் ஆடுவர்.

வைத்தியநாத சுவாமி கோவில் :

திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது.

முக்கிய ஊர்கள் :

விருது நகர் :

விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைத்தெரு உள்ளது. தேங்காய் எண்ணெய்யும், காப்பித் தூளில் கலக்கப்படும் சிக்கரியும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏலக்காய் முக்கியச் சந்தைப் பொருளாக விளங்குகிறது. ஏலக்காயிலிருந்து பருப்பை எடுத்தபின் எஞ்சும் தோலை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பல பருத்தி அரைக்கும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள், உயர்நிலைப்பள்ளிகள், தொழிற்கல்லூரி, சுருட்டு மற்றும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்,பருப்பு உடைக்கும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், நெசவா லைகள், மருத்துவமனைகள் முதலியன அமைந்துள்ளன. இங்கிருந்து இரயில் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள இரயில் நிலையத்தில் மிக நீளமான பிளாட்பாரமும், சரக்கு ஏற்ற வசதியாக மார்ஷல் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டையும், அதனருகில் தொழிற்பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன.

சிவகாசி :

சிவகாசி நகரம் தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளதால் இவ்வூரை "குட்டி ஜப்பான்" என்று அழைக்கின்றனர். பட்டாசு உற்பத்தியால் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் சிவகாசி புகழ்பெற்று விளங்குகிறது. மேலும் தீக்குச்சித் தயாரித்தல் இங்கு பெரும்பான்மையாக நடைபெறுகிறது. பெண்களும் சிறுவர் சிறுமியரும் ஏராளமாக தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். நூற்றுக்கணக்கில் லித்தோ அச்சகங்கள் நடைபெறு கின்றன. ஆப்செட் அச்சகங்களும் ஏராளமாக உள்ளன. அச்சுத் தொழிலுக்குத் தேவையான அனைத்து காகித வகைகள் வியாபாரமும், அச்சுமை, அச்சுக்கருவிகளின் பகுதிகள் ஆகியவற்றின் மொத்த வியாபாரமும் இந்நகரில் பெருகியுள்ளது. ஆண்டு தோறும் காலண்டர் அச்சடிப்பது தமிழ்நாட்டிலேயே இங்குதான் பெருமளவில் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் அச்சுத் தொழிலின் பெரும்பான்மைத் தேவையை இந்நகரமே நிறைவு செய்கிறது. மேலும் இங்கு தகரப் புட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நகரம் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கி.பி.1420-1460 ஆண்டில் உருவாக்கப்படதாகக் கருதப்படுகிறது.

சாத்தூர் :

இதன் பழைய பெயர் சாத்தனுர் ஆகும். காட்டின் இடையே அமைந்துள்ள சாத்தனுர் கோவிலைச் சுற்றி உருவான நகரம் என்பதால் சாத்தூர் என்று பெயர் உண்டாயிற்று. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் சாத்தூரின் தெற்கெல்லையில் ஒரு பாலத்தையும், விநாயகர் கோவிலையும், ஒரு சத்திரத்தையும் கட்டினாள். பருத்தி அரைக்கும் ஆலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், நிப்பு தொழிற்சாலைகள் முதலியன வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே இங்கு இயங்கி வருகின்றன. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் சில இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், மற்றும் பல வியாபார நிறுவனங்களும் அமைந்துள்ளன. வெள்ளரிப் பிஞ்சுக்கும், சீனி மிட்டாய், கடலை மாவுச் சேவு இவற்றிற்கும் சாத்தூர் பெயர் பெற்ற ஊராகும்.

அருப்புக் கோட்டை :

விருதுநகர்-மானாமதுரை சந்திப்புக்களுக்கிடையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ஆகும். மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருச்சுழி போன்ற பெரிய நகரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளன. இங்கு மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் முதலியவற்றின் விற்பனை மொத்த வியாபாரமாக நடைபெறுகிறது. இங்கு நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், வேட்டிகள் இந்தியாவில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

ஆத்துப்பட்டி :

திருச்சுழி-அருப்புக்கோட்டைச் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு ஒரு நூலாலை இருக்கிறது. பருத்தி, வேர்க்கடலை முக்கிய பயிர்கள்.

பந்தல்குடி :

அருப்புக் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் எட்டயபுரம் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகள் உள்ளன. துவரை, உளுந்து, பருத்தி ஆகியன முக்கிய பயிர்கள்.

ஆமணக்கநத்தம் :

அவுரிச்செடி இங்கு நிறைய விளைகிறது. இச்செடி தூத்துக்குடிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

குல்லூர்ச் சந்தை :

இவ்வூர் விருதுநகருக்கு அருகிலிருப்பதால் வாணிகத்தில் சிறப்புற்றுத் திகழ்கிறது. தறி நெசவுத் தொழில் செய்யும் தேவாங்கர் அதிகமாக வாழும் ஊராகும். இங்கு உற்பத்தியாகும் துணிகள் பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன.

கஞ்சநாயக்கன்பட்டி :

அருப்புக்கோட்டை அருகே இவ்வூர் அமைந்துள்ளது. இது பல வகை தானிய வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது. கழிவுத்தாள், வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு அட்டை செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.

பாளையப்பட்டி :

அருப்புக்கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இவ்வூர் குறுநில மன்னர்களால் ஆளப்பெற்றது. மிளகாய், சீனிக்கிழங்கு, நெசவு முதலியவற்றுக்குப் பெயர் பெற்ற ஊர். இவ்வூரில் பல மல்லிகைப் பூந்தோட்டங்கள் செழிப்பாக உள்ளன. இங்கிருந்து பல ஊர்களுக்கும் மல்லிகைப்பூ அனுப்பப்படுகிறது.

அழகிய நல்லூர் :

காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மேற்குக் கோடியில் அமைந்துள்ள இவ்வூரின் பண்டைய பெயர் குட்டலோட்டி என்பதாகும். நெல், மிளகாய், பருத்தி ஆகியன இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. இவ்வூரில் நிறைய மயில்களும் காணப்படுகின்றன.

ஜோகில் பட்டி :

விஜயநகரப் பகுதியிலிருந்து குடியேறிய ரெட்டியார் சமூக மக்கள் இவ்வூரில் அதிகமாக வாழ்கின்றனர். கல்குறிச்சியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் பாறை, கல் உடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

கல்குறிச்சி :

மதுரை, விருதுநகர் ஆகிய பெரிய நகரங்கள் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளன. நெசவாளர் குடும்பங்கள் மிகுந்துள்ளதால் நெசவுத்தொழில் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது.

மல்லாங்கிணறு :

இவ்வூர் நாடக்கக் கலை வளர்ச்சிக்கு முக்கிய இடமாக விளங்கி வருகிறது. இதற்கருகில் உள்ள சூரம்பட்டியில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வரலொட்டி :

விருது நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் புதைந்து காணப்படுகிறது. அதனருகில் 15 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட ஐந்து கிணறுகள் உள்ளன. இவற்றைப் பாண்டியன் கிணறு என்பர். கிணற்றின் சுற்று மதிலில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் வழியே பாலவநத்தத்துக்குச் செல்லும் சாலை ராணிமங்கம்மாளால் அமைக்கப்பட்தாகச் சொல்லப்படுகிறது.

திருச்சுழியல் :

அரசு அலுவலகங்கள் பல உள்ள இவ்வூரைச் சுற்றிலும் மதுரை, விருதுநகர், அருப்புக் கோட்டை நகரங்கள் அமைந்துள்ன. தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். இக்கிராமம் குண்டாற்றின் கரையில் அமைந்து செழிப்பாக உள்ளது. ரமண மகரிஷி இவ்வூரில் பிறந்தவராவர். வணிகத் துறையில் நாடார்கள் சிறப்புற்று விளங்குகின்றனர். இங்குள்ள மண்வளப் பாதுகாப்பு அலுவலகம் வேளாண்மை வளர்ச்சிக்குரிய உதவிகளை ஆற்றி வருகிறது. இங்குள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயம் கிறித்துவர்களின் சிறந்த வழிபாட்டுத் தலமாக உள்ளது.

குலசேகர நல்லூர் :

குலசேகரப் பாண்டியன் பெயரால் ஏற்பட்ட இவ்வூரில், அவனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோவிலும், கல்வெட்டுகளும் உள்ளன.

பண்ணை மூன்றடைப்பு :

வேளாண்மைச் செழிப்புற நடைபெறும் இவ்வூரில் பல மன்னர்களின் பண்ணைகள் அமைந்துள்ளன. வாழை, கரும்பு, வெற்றிலைக் கொடிக்கால் விளைச்சல் அதிகமாக நடைபெறுகிறது.

பள்ளிமடம் :

திருச்சுழிக்கு எதிரே, குண்டாற்றின் மறுகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காட்டுக் காளையர் கோவில் என்பது இவ்வூரின் இன்னொரு பெயர். சமணர் பள்ளி ஒன்று இங்கு இருந்திருக்கிறது. ஆற்றங்கரையில் காளைநாதர், சொர்ணவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. கோட்டை ஒன்று இருந்ததிற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

நரிக்குடி :

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைநகரான இவ்வூரில் மருதுபாண்டியரால் கட்டப்பட்ட மருதுவிநாயகர் கோவிலும், மீனாம்பிகைக் கோவிலும், சத்திரமும் உள்ளன. மருது பாண்டியர்க்கு இவ்வூரில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் விழா எடுத்துச் சிறப்பிக்கப்படுகிறது. சத்திரத்திற்குள் தேவதைக்கு முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. சின்னச்சாமி முத்தழகு என்னும் மருதுபாண்டியர் அமைச்சர்களின் உருவச் சிலைகளும் இச்சத்திரத்தில் இருக்கின்றன.

மானுர் :

இவ்வூரில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

வீரசோழம் :

நரிக்குடியிலிருந்து 5 கி.மீ சுற்றியுள்ள காடுகளில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வூரிலுள்ள பள்ளிவாசலில் மயில்களுக்குத் தீனி போடுவார். பல ஊர்களுக்கும் இங்கிருந்து மயில்கள் அனுப்பப்படுகின்றன.

பிள்ளையார் தொட்டியங்குளம் :

பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு அவர் உருவத்தைப் பூமியில் புதைத்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வர். இதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும் இவ்வூர் திருவிடை நல்லூர் எனவும் திருவளர் நல்லூர் எனவும் வழங்கப்படுகிறது.

தளவாய்புரம் :

17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இவ்வூர் தளவாய் அரியநாத முதலியார் பெயரால் நிலவுகிறது. சேற்றுரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

அய்யனார் கோவில் :

இராஜப்பாளையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சாலை வசதி பெற்றுள்ளது. இங்கு நரகத்து அய்யனார் கோவிலும், சிறிய அருவியும் உள்ளன. அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்கிறது. பருவகாலத்தில் கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இதிலிருந்து குழாய் மூலமாக இராஜப்பாளையம் நகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு களிப்பூட்டும் இடமாகும்.

புனல்வேலி :

பொட்டல்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள இச்சிற்றுர் நெசவுத் தொழிலால் சிறப்புற்று விளங்குகிறது.

வற்றிராயிருப்பு :

இயற்கை எழில் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான டாக்டர். கே.எஸ். கிருஷ்ணன் இவ்வூரினர் ஆவார். இவ்வூரில் சிவன் கோவில், நல்லதங்காள் கோவில் முதலியன உள்ளன. நல்லத் தங்காள் கோவில் விழா மதுரைத் தையற்காரர்களால் கொண்டாடப் பெறுகிறது.

அத்தியூத்து :

காட்டுவளம், இயற்கை எழில், நீர்வளம் கொண்ட இவ்வூர் வற்றாயிருப்பிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு முகமதிய துறவி ஒருவரின் தர்கா உள்ளது. அதனருகில் ஏழு மரங்கள் உள்ளன. இவை பட்டுப் போவதே இல்லை.

குருவிப்பாறை :

மலை மீது அமைந்துள் இவ்வூரில் பளிஞர் என்ற மலைச் சாதியினர் மிகுதியா வாழ்கின்றனர். இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகம். நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாறைப் பகுதியின் கீழ் சுமார் 150 பேர் தங்குவதற்குரிய இடவசதி உள்ளது. இப்பாறைக்கு சற்று அருகில் உள்ள சிறிய அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.

கூமாப்பட்டி :

முஸ்லீம்கள் மிகுதியாக வாழும் இவ்வூரில் பெரிய கண்மாய் ஒன்றுள்ளது. மலைவடி வாரத்திற்கு நெருக்கமாக உள்ளதால் நீர்வளம் செழிப்பாக உள்ளது. மலைமீது காப்பியும் ஏலக்காயும் பயிரிடப் படுகின்றன. இவ்வூரருகே உள்ள பேச்சிக்கேணி பக்கம் யானைகளும், புலிகளும் காணப்படுகின்றன.

மூவரை வென்றான் :

இங்கு வாழைத் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இவ்வூர் அய்யனார் வற்றாயிருப்பு வாழ் மக்களின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப் படுகிறது. இவ்வூர் அரசர் மூவரை வென்ற ஒருவனால் சிறப்புறுகிறது என்பர். மூவறையன் என்ற சிற்றரசனை வற்றா யிருப்பு மக்கள் சூழ்ச்சியால் வென்றனர் என்றும் வரலாறு கூறுகிறது. இவ்வூருக்கு சற்றுத் தள்ளி உள்ள 400 அடி உயர மலையை மொட்டை மலை என்பர். இம்மலையில் சுனையும் குகைக் கோவிலும் உள்ளன. நந்தியின் வாய் வழியாக நீர் கொட்டுகிறது.

சதுரகிரி :

மேற்கு தொடர்ச்சி மலைமீது அமைந்த பெயர் பெற்ற தலமாகும். சிதறிய கிரி என்பதே சதுரகிரி என வழங்கப்படுகிறது என்பர். வற்றாயிருப்பிலிருந்து 8கி.மீ தொலைவில் தாணிப்பாறை உள்ளது. அங்கிருந்து மலைமீது ஒற்றையடிப் பாதை வழியே சுமார் 10கி.மீ நடந்துச் சென்று சதுரகிரியை அடைய வேண்டும். வழியில் வழுக்குப் பாறை மிகுந்துள்ளதால் இப்பயணம் சற்று வருத்தும் திறத்தது. இம்மலையில் ஜோதிவிருட்சம் என்னும் ஒளிகாட்டும் மரம் உள்ளது. ஏராளமான மூலிகைகள் நிறைந்தது. பல குன்றுகளும் குளங்களும் காணப்படுகின்றன. சோலைகள் தோப்புகள் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்து காணப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் இடமாக திகழ்கிறது.

சிறுமலை :

ஒரு சிறிய குன்றின் மீது இவ்வூர் உள்ளது. ஊரின் ஒரு பகுதி கிறிஸ்தியன் பேட்டை ஆகும். கத்தோலிக்கம் முதலில் பரவிய இடங்களுள் ஒன்றான இவ்வூரில் கிறிஸ்துவப் பெரியார் ஒருவரின் கல்லறை உள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் மே மாதம் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

மகாராஜபுரம் :

இந்திய விடுதலை வரலாற்றில் இவ்வூருக்கு சிறப்பான தனியிடம் உண்டு. சில காலம் இங்கு காந்தி ஆசிரமம் நடைபெற்றது. இங்கு கம்மவர்களால் கட்டப்பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது.

முதலியார் ஊற்று :

பொழுது போக்கவும், வேட்டையாடவும் வெள்ளையர் இவ்வூருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் உள்ள இவ்வூர் அழகர் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலிருந்து சின்னமனுர், தேனி முதலியவற்றின் எழில் மிகுத் தோற்றத்தைக் கண்டு இன்புறலாம்.

ஆலங்குளம் :

கீழராஜகுலராமனிலிருந்து இவ்வூர் 6 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள கரிசல் பூமியில் பருத்தி சிறப்பாக விளைகிறது. சுண்ணாம்புப் படிவங்கள் மிகுந்த பகுதியாதலால், அரசினரின் சிமெண்டு தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கிறது.

இராமச்சந்திரபுரம் :

சென்னங்குளம் இதன் மற்றொரு பெயர். இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்ற ஊர். உகாண்டா பருத்தி இங்கு அதிகமாய் விளையும் வேளாண் பயிராகும்.

மல்லி :

ஆண்டாள் பிறந்த ஊராகும். இதற்கு 'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்களும் சான்றாகின்றன. விழுப்பனுர் என்னுமிடத்தில் பெருமாள்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

மம்சாபுரம் :

சந்தாசாகிப் நினைவாக 'மகமது சாஹிப்புரம்' என்ற பெயரால் ஏற்பட்ட ஊர் மம்சாபுரம் என வழங்குகிறது. வில்லிப்புத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

இராஜபாளையம் :

தமிழ்நாட்டின் முன்னனி நகரங்களில் ஒன்றாகவும், விருதுநகர் மாவட்டத்தின் பெரிய நகரமாகவும் இராஜபாளையம் திகழ்கிறது. வரலாற்றுப் பெருமையாலும், வளமான இயற்கைச் சூழலாலும், தொழிற்வளர்ச்சியாலும் இந்நகர் சிறப்பு பெற்றுள்ளது. மக்கள் தொகை இந்நகரில் அதிகம். மிகப்பெரிய இரயில் நிலையம் இங்குள்ளது. நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில விஜயநகரப் பேரரசிலிருந்து தெலுங்கு பேசும் வீரர்கள் தமிழ்நாடெங்கும் பரவி வாழ்ந்தனர். ஆந்திரத்திலிருந்து புறப்பட்டு பல ஊர்களில் தங்கி, கடைசியில் ராஜூக்கள் நிலையூன்றிய இடமே இராஜபாளையம் என்னும் பெயர் பெற்றது. போர்த் தொழிலில் சிறந்து விளங்கிய ராஜூக்கள், பின்னாளில் ஏர்த்தொழிலிலும் திறம் படைத்தவர்களாக திகழ்ந்தனர்.

இராஜபாளையத்தில தெலுங்கு, தமிழ் இரு புத்தாண்டுகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பஞ்சு வணிகக் கேந்திரமாக இராஜ பாளையம் திகழ்கிறது. கரிசல் மண் பூமியாதலால் உயர்ரகப் பருத்தியான உகாண்டா பருத்தி இங்கு மிகுதியாக விளைகிறது. பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கி பஞ்சைப் பிரிக்கும் தொழிற்சாலைகள் பல இங்கு உள்ளன. நூலாலைகள், நெசவாலைகள் பலவும் இயங்கி வருகின்றன. மேலும் துத்தநாகத் தகடு தொழிற்சாலை, அநேக சாயத்தொழிற்சாலைகள், கலப்பை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஏராளமான மரவாடிகளும் உள்ளன. வியாழக்கிழமைகளில் பெரிய சந்தை கூடுகிறது. இராஜபாளையம் நாய், ஒரு காலத்தில் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கியது.

இராஜபாளையத்திற்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் அருவி என்ற இடம் மலையேறவும், பொழுது போக்கவும், வேட்டையாடவும் சிறந்த இடமாகும். இதன் உயரம் 5000 அடியாகும். நகரின் கிழக்கு எல்லையில் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை உள்ளது. மலை மீது அழகிய முருகன் கோவில் அமைந்துள்ளது. நெல்லும், கரும்பும், வேர்க்கடலையும் இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. டன் கணக்கில் வெல்லம் காய்ச்சி வட இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களும் அதிகம். உளுந்து. பாசிப்யிறு, தட்டைப்பயிறு முதலியனவும் மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. ஆவணி, புரட்டாசி மாதங்களில் பேரிக்காய், கொவ்வைப்பழம் மிகுதியாக கிடைக்கின்றன. சித்திரை, வைகாசி மாதங்களில் பலாப்பழங்களும் பலசாதி மாம்பழங்களும் கிடைக்கின்றன. தக்காளிப் பழங்களைப் பானையில் போட்டு பல ஊர்களுக்கும் அனுப்புகின்றனர். பழைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா இவ்வூரைச் சேர்ந்தவர்.

திருவில்லிப்புத்தூர் :

இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில அமைந்துள்ளது. பாசன ஏரிகள் நிறைந்த இயற்கைச் சூழல் கொண்ட திருவில்லிப்புத்தூர் தலச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடையது. சங்ககாலத்தில் வாழ்ந்த வில்லியர் தங்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். அந்தணரைக் குடியேற்றிய ஸ்ரீவல்லப பாண்டியன் பெயரை இப்பகுதிக்குச் சூட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் வாழ்ந்த ஊர். தமிழ்நாட்டில் திருவாரூருக்கு அடுத்தபடியாக இவ்வூர் திருத்தேரைக் குறிப்பிடலாம். சுமார் 3000 பேர் கூடி இழுத்தால்தான் தேர் ஓடும்.

இங்கு 1926இல் இரயில்பாதை போடப்பட்டது. கைத்தறித் தொழிலின் வளர்ச்சி இங்குச் சிறப்புற்றிருக்கிறது. பித்தளைப் பாத்திரத்தொழிலும், சமக்காளம், வேட்டி, சட்டைத் துணி நெசவும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கூட்டுறவு நூல் ஆலை ஒன்றுள்ளது. பருத்தி ஆராய்ச்சி நிறுவனமும், வேளாண்மைப் பண்ணைகளும் உள்ளன. நெல் அரைக்கும் ஆலைகள் நிறைய உள்ளன. சத்திரங்களும் அதிகம். வெயில் மழையைத் தாங்கக் கூடிய தாழங்குடைகள் இங்கு மிகுதியாக செய்யப்படுகின்றன. பால்கோவா அதிகமான அளவில் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

கத்தோலிக்க சமயத்தின் பெல்ஜிய கன்னிமார் நடத்தும் கல்வி நிலையங்களும், இலங்கை பெந்தகோஸ் கிறிஸ்துவர் கட்டியுள்ள புராட்டஸ்டன்டு தேவாலயமும் இவ்வூரில் உள்ளன. திருமலை நாயக்கர் தெற்கு ரதவீதியில் சிறிய மாளிகை ஒன்றையும், யானைக்கால் மண்டபத்தையும் திருவில்லிபுத்தூரில் கட்டினார். தற்போது இவற்றில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அய்யங்கார் வீடுகள் இவ்வூரிலுள்ளன. மக்கள் தொகையும் அதிகம். நகரம் கடல் மட்டத்தை விட 453 அடி உயரத்தில இருக்கிறது. அதைவிட 67 அடி உயரமான செண்பகத் தோப்பு எனுமிடத்தில் ஓடும் பேயனாற்றின் நீர், ஊற்று மூலம் இந்நகருக்கு குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்கிறது. பல குளங்களும் சூழ இருப்பதால் வேளாண்மை
செழித்துள்ளது.

முக்கனி மரங்கள், கழுகு மரங்கள் அடர்ந்த செண்பகத் தோப்பும், நீர்வளம் நிறைந்த வழுக்குப்பாறையும் முதலியார் ஊற்றும் காணத்தக்க இடங்களாகும்.

குகன் பாறை :

ராமன் வருகைக்காக குகன் காத்திருந்த குன்று எனக் கூறுவர். இது 50மீ உயரமுடையது. இது ஏழாயிரம் பண்ணைக்குத் தென் மேற்கே அமைந்துள்ளது. கருங்கல் தூண் வேலைக்கு இங்கு கல் உடைக்கின்றனர்.

சிப்பிப்பாறை :

ஏழாயிரம் பண்ணையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் சிறு குன்றுகள் நிறைந்தது. இவ்வூர் வேட்டை நாய்களுக்குப் புகழ் பெற்றது. பாறை மீது பெருமாள் கோவில் இருக்கிறது. நாயக்கர்களின் செல்வாக்கு மிகுந்த ஊர். பருத்தி அரைக்கும் ஆலை ஒன்றும் இயங்குகிறது.

பனையடிப்பட்டி :

இவ்வூரில் கொய்யாத் தோட்டங்களும், எலுமிச்சைத் தோட்டங்களும் ஏராளமாக உள்ளன.


ஏழாயிரம் பண்ணை :

தளவால் அரியநாதர் ஏற்படுத்திய பாளைப்பட்டுகளுள் ஏழாயிரம் பண்ணையும் ஒன்று. இதற்கு இளஞ்சிராப் பண்ணை என்ற பெயரும் உண்டு. வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் பெரிய ஊர்; மக்கள் தொகை மிகுந்தது. நெல், மிளகாய், வெங்காயம், கரும்பு, புகையிலை முதலியன பயிரிடப்படுகின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலை, தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மத்தாப்பு வெடி தொழிற்சாலைகள், உயர்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. சித்திரை மாதத்தில் 12 நாட்கள் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம், தென்னிந்தியத் திருச்சபையின் தேவாலயம், பிள்ளையார் கோவில் முதலியனவும் உள்ளன.

ஆலம்பட்டி :

சாத்தூரிலிருந்து 5கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. கூட்டுறவு முறையில் செங்கல் சூளைகள் பல நடைபெறுகின்றன.

இருக்கங்குடி :

இவ்வூர் சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. அர்ச்சுனா ஆறு, வைப்பாறு இவற்றால் வளமுறுகிறது. இவ்வூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் விழாவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். உப்பத்தூர் பகுதி வேளாண்மை வளத்தாலும், கொல்லம்பட்டி பகுதி கத்தரிக்காய் விளைச்சலாலும், மசூதியாலும், வைப்பற்றில் அழகர் இறங்கும் திருவிழாவாலும் சிறப்புற்று விளங்குகின்றன.

நென்மேனி :

இவ்வூரில் கைலாசநாதர் கோவிலும், கத்தோலிக்கத் தேவாலயமும் உள்ளன. இவ்வட்டத்திலேயே பெரிய கண்மாய் இங்குதான் உள்ளது. நத்தத்துப்பட்டி, கட்ட மொம்மன் வரலாற்றில் வரும் வெள்ளையத் தேவர் பிறந்த ஊராகும்.

திருத்தங்கல் :

இவ்வூர் சிவகாசிக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், வார்ப்படத் தொழிற்சாலையும், உரத்தயாரிப்புத் தொழிற்சாலையும், கூட்டுறவு எண்ணெய் உற்பத்தியாளர் சங்கமும் சிறப்பாக இங்குச் செயல்படுகின்றன.

ஆனைக்கூடம் :

சிவகாசி-திருத்தங்கல் ஊர்களுக்கு இடையில் அர்ச்சுனை ஆற்றின் வடகரையில் இச்சிற்றுர் அமைந்துள்ளது. முதலாம் பராந்தகனை விரட்ட, இராசசிம்ம பாண்டியன் ஈழநாட்டு மன்னனின் உதவியை வேண்டினான். ஈழநாட்டிலிருந்து வந்த யானைப்படை வீடு கொண்ட இடம் யானைக் கொட்டம் எனப்பட்டது. அதுவே ஆனைக்கூடம் என பெயர் பெற்றது.

காளையார் குறிச்சி :

சிவகாசியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் கடைமுடை அய்யானார் கோவிலில் காணப்படும் பெரிய ஆலமரங்கள் காண்பதற்குரியன. 1942-இல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தலைவர் காமராஜ் இக்கோவிலில் மறைந்திருந்தார் என்பர். இங்கு மறவர்கள் மிகுதியாக உள்ளனர். கரிசல் காடுகள் மிகுதி. நெல், கம்பு, கேழ்வரகு முதலியன முக்கிய விளைபொருட்கள். சாட்சியாபுரம் மா, கொய்யா, எலும்மிச்சைத் தோட்டங்களால் சிறப்புப் பெற்றுள்ளது. வாடியில் வெற்றிலை வாணிகம் மிகுதி.

ஆமத்தூர் :

இவ்வூரில் துவரை, உளுந்து, மொச்சை ஆகியன பயிரிடப்படுகின்றன.

கன்னிச்சேரி :

இவ்வூரில் ஆனி மாதம் முழுதும் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.

சேடப்பட்டி :

கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழும் ஊர்.

பவானி :

விருதுநகருக்கு வடமேற்கே உள்ள இச்சிற்றுரில் பழத் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன.

துலுக்கப்பட்டி :

விருதுநகருக்குத் தெற்கே 15 கி.மீ தொலைவில் திருநெல்வேலிச் சாலையில் இவ்வூர் உள்ளது. இதனருகே உள்ள எட்டூர் பகுதிகளில் சுண்ணாம்புக்கல் கிடைப்பதால் இங்கு பெரிய சிமெண்டு ஆலை நடைபெறுகிறது.

மருளுத்து :

செழிப்பான ஊர். நெல், வாழை, காய்கறிகளுக்குப் பெயர் பெற்ற சிற்றுர்.

வடமலைக்குறிச்சி :

இவ்வூரில் பயிர்தொழில், சாலைகள், பள்ளி, மருத்துவ நிலையம் ஆகிய பலவும் ஸ்காட்லாந்து நாட்டு மக்களின் உதவியுடன் சிறப்படைந்து வருகின்றன.

சூலக்கரை :

சாத்தூர்-சிவகாசி சாலைகளுக்கு இடையில் இத்தொழில் நகரம் அமைந்துள்ளது. விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் நெசவு ஆலையும், விருதுநகர் எஃகுக் கம்பித் தொழிற் சாலையும், பெரியதொரு தொழிற்பேட்டையும் இங்குச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சங்கரலிங்கபுரம் :

இங்கே தேவாங்கச்ச செட்டியார்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களால் நெசவுத் தொழில் சிறப்புற்றுத் திகழ்கிறது. சாத்துக்குடி அளவிலான வெங்காயம் இங்கு விளைவிக்கப்படுகிறது. கோடையில் தினையும் அவுரிச் செடியும் பயிரிடப்படுகின்றன. உரம் தயாரிக்கவும், வர்ணம் தயாரிக்கவும் உதவும் இந்த அவுரிச் செடிகளை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.


புகழ்பெற்றோர் :

பி.எஸ்.குமாரசாமிராஜா :

1898-இல் இவர் இராஜபாளையத்தில் பிறந்தார். அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், பிரம்ம ஞானசபை ஆகியவற்றில் பங்காற்றி சிறை சென்றார். 1948 முதல் 1952 வரை சென்னை மாநில முதல்வராக பணியாற்றினார். பிறகு நான்காண்டுகள் ஒரிசா மாநில ஆளுநராக பதவி வகித்தார்.

காமராசர் :

விருதுநகரில் 1903 இல் காமராசர் பிறந்தார். 1930-இல் இராஜாஜியுடன் உப்பு சத்தயாகிரகத்தில கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்தார். 1954 இல் தமிழ்நாட்டின் முதல்வரானார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-இல் காமராசர் மறைந்தார். அவரது தொண்டுள்ளத்தைப் பாராட்டி இந்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவித்தது.

ஜி. இராமானுஜம் :

தமிழ்நாட்டில் ஐ.என்.டி.யூ.சி எனும் தொழிற்சங்கத்தை நிறுவிய ஜி. இராமனுஜம் இம்மாவட்டத்துக் கீழராஜ குலராமன் ஊரினராவார்.

மு.கு. ஜகந்நாத ராஜா :

இராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் பன்மொழிப் புலவர். கற்பனைப் பொய்கை எனும் நூலை இயற்றியுள்ளார். பல தெலுங்குக் கவிதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது போல் குறிஞ்சிப்பாட்டு, முத்தொள்ளாயிர்ம் ஆகிய இரு தமிழ் இலக்கியங்களையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.

ரமண மகரிஷி :

திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆன்மிகம் பரப்பிய ரமண மகரிஷி இம்மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் பிறந்தார். இவர் பெயரால் மேலை நாடுகள் பலவற்றிலும் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டி முக்குல அழகராஜ சிங்கப்பராஜா :

இவர் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர். காங்கோ நாட்டின் சுதந்திரத்தை நிலைநிறுத்த 1961 இல் இந்தியா, ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளுக் கிணங்க 3000 வீரர்கள் அடங்கிய படையை இவர் தலைமையில் அனுப்பி வைத்தது. காங்கோவில் இவருடைய பணியை அறிந்த ஐ.நா.சபை, பின்னர் இவரை ஐ.நா. படைத்தளபதியாக நியமித்துச் சிறப்பித்தது.

தீபம் நா.பார்த்த சாரதி :

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நரிக்குடியைச் சேர்ந்தவர். தீபம் பத்திரிகைக்கு ஆசிரியர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர். சமுதாய வீதி என்ற இவருடைய நாவலுக்கு 1972 இல் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்துள்ளது. சில காலம் தினமணிக் கதிர் வார இதழின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தார்.

அ.லெ. நடராசன் :

லெனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி சோவியத் நாடு பரிசு பெற்ற எழுத்தாளர்.


புவிவளம் :

இம்மாவட்டத்தில் மண்ணுக்கடியில் பல்வகைக் கனிமங்கள் இருப்பது பற்றி ஆய்வில் வெளிவந்துள்ளன.

சுண்ணாம்புக்கல் :

 சிமெண்டுத் தொழிலுக்கு ஏற்ற இவ்வகை சுண்ணாம்புக்கல் அருப்புக்கோட்டை வட்டத்தில் பாலநத்தம், பாண்டங்குடி முதலிய இடங்களில் மிகுந்த அளவில் கிடைக்கிறது. பிளீச்சிங் பவுடர், கால்சியம் கார்பைடு ஆகியவை தயாரிக்கவும் சுண்ணாம்புக்கற்கள் உதவுகின்றன.

செந்நிறக் கற்பாறைகள் :

அருப்புக்கோட்டை அருகே இவ்வகைப் பாறைகள் மிகுதியாக உள்ளன.

பிளம்பாகோ :

திருச்சுழிக்கு அருகேயுள்ள பந்தல் குடியில் கிரிஸ்டலைன் லைன்ஸ்டோனில் பிளம்பாகோ எனும் அரிய பொருள் கிடைக்கிறது.

கல்தூண்கள் :

விக்கிரகங்கள் மற்றும் பெரிய கல்தூண்கள் செய்யத்தக்க ஒரு வகைக் கருங்கல் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. பல ஊர்களுக்கும் இவை லாரிகள் மூலம் அனுப்பபட்டு, கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜிப்சம் :

மிகக்குறைந்த அளவே இம்மாவட்டத்தில் ஜிப்சம் படிவங்கள் உள்ளன. இதுவும் சிமெண்டு தொழிலுக்குப் பயன்படுகிறது.

வேளாண்மை :

சாத்தூர் வட்டத்தில் அர்ச்சுனா ஆறு, வைப்பாறு ஆகிய ஆறுகளும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் சிற்றாறுகளும், இராஜபாளையம் வட்டத்தில் அர்ச்சுனா ஆறு, கல்லணை ஆறு ஆகிய ஆறுகளும், அருப்புக் கோட்டை வட்டத்தில் குண்டாறு, கிருதுமால் எனும் சிற்றாறுகளும் பாய்ந்து இம்மாவட்டத்தின் வேளாண்மையைச் செழிப்பாக்குகின்றன. வராகசமுத்திரம், பெரிய குளம், நத்தம்பட்டிக்கண்மாய் ஆகிய பெரிய ஏரிகள் இம்மாவட்டத்தில் இருக்கின்றன. வற்றாயிருப்பிலிருந்து 11கி.மீ தொலைவில் பிளவைக்கல் என்னுமிடத்திலுள்ள அணையால் 5000 ஏக்கருக்கு நிலையான பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2.13 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. நெல், பருத்தி, கரும்பு, மிளகாய், பருப்பு வகைகள் இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருட் களாகும்.

வாணிகம் :

விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகமாக உள்ளதால், பனை ஓலைகளுக்கு வர்ணம் தீட்டி பெட்டி, கூடை, விசிறி, பாய் போன்ற பொருட்கள் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இங்கு தென்னை அதிகமாக வளர்க்கப் படுவதையொட்டி பல உப தொழில்கள் பெருக வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. தேய்காய் பல ஊர்களுக்கும் ஏற்றுமதியாகிறது. மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகளுக்கு விருதுநகர் பெரிய கேந்திரமாக விளங்குகிறது. தோட்டப் பொருட்களுக்கும் காபிக்கும் இவ்வட்டமே சிறந்த மையமாக திகழ்கிறது. இராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் ஆகியவை பஞ்சு உற்பத்தியில் மிகுந்த ஏற்றம் பெற்றுள்ளன. மல்லி, மிளகாய் முதலியன தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அருப்புக் கோட்டைகளில் கடலை உடைக்கும் எந்திரங்கள் ஏராளம். இதனால் கடலை ஏற்றுமதியிலும், கடலை எண்ணெய், கடலைப் புண்ணாக்கு, கடலைப் பொட்டு ஆகியவற்றின் வாணிபத்திலும் அருப்புக் கோட்டை சிறந்துள்ளது. கைத்தறி சேலை, வேட்டிகளுக்கு அருப்புக்கோட்டை திருவில்லிப்புத்தூர் வட்டங்கள் புகழ் பெற்றவை. வெள்ளி, தங்கம், வைர வியாபாரங்களுக்கும் இம்மாவட்டம் பெயர் பெற்று விளங்குகிறது.

பட்டாசு தயாரிப்பு இம்மாவட்டத்தின் சிறப்பான பெருந்தொழிலாகத் திகழ்கிறது. பட்டாசு வாணிகம் இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வாணிகம் அகில இந்திய அளவில் நடக்கிறது. வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்நியச் செலாவணியையும் அதிக அளவில் ஈட்டித்தருகிறது.


தொழில் வளர்ச்சி :

விருதுநகர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் ஓரளவு முன்னேறியுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல சிறந்த தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் நன்கு செயல்பட்டு வருகின்றன.

இராஜபாளையம் மில்ஸ் :

இம்மாவட்டத்திலுள்ள நூலாலைகளில் இதுவே பெரியதாகும். இதைத் தொடங்கியவர் பி.ஏ.சி. இராமசாமி ராஜா என்பவர் ஆவார். முரட்டு நூல்கள் முதல் மிக மெல்லிய நூல்கள் வரை இங்கு தயாராகின்றன.

இராமசாஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் :

இது என்.கே. இராமராஜூ என்பரால் இராஜபாளையத்தில 1942 இல் தொடங்கப் பெற்று நடந்து வருகிறது. காயங்களுக்கு கட்டுவதற்கு உதவும் பேண்டேஜ் துணி முதலியன இங்கு தயாராகின்றன. தமிழ்நாடு, ஆந்திர அரசுகளும் இதில் பங்குகள் வாங்கியுள்ளன. மேலும் இராஜபாளையத்தில் ஜானிகிராம் மில்ஸ், அழகப்பா காட்டன் மில்ஸ், ஜெயராம் மில்ஸ், ஸ்ரீ ஷண்முகா மில்ஸ், ஸ்ரீ பாரதி காட்டன் மில்ஸ், மற்றும் சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் முதலியனவும் இயங்கி வருகின்றன. அருப்புக்கோட்டை வட்டத்தில் மல்லாங்கிணறு என்னும் ஊரிலும் நூலாலைகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. திருவில்லிப்புத்தூரில் கூட்டுறவு துறை நூல் ஆலை தொடங்கப் பட்டுள்ளது.

விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் :

1946 இல் தொடங்கப் பெற்ற இந்த ஆலை பல வண்ணங்களில் கவர்ச்சியும் மென்மையும் உடைய பூப்போட்ட சேலைகளையும் துணிகளையும் உற்பத்தி செய்கிறது.

விருதுநகர் கோன் தொழிற்சாலை :

கோன் என்பது நூல்களைச் சுற்றி வைக்கப் பயன்படும் அட்டைக் குழாய் ஆகும். இக்குழாய்களை செய்யும் தொழிற்சாலை விருதுநகரில் ஹார்வி குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. புனலூர் ஆலையிலிருந்து அட்டைகளை வரவழைத்து குழாய்கள் செய்கின்றனர்.

காட்டன் பிரசிங் பாக்டரி :

இத்கைய தொழிற்சாலைகள் மிக பல உள்ளன. இங்கே கழிவுப் பஞ்சு, கோணிச்சாக்குகளிலுள்ள கழிவுப் பொருட்கள், சென்னா இலைகள் ஆகியவற்றை பேல் ஆக்கி ஏற்றுமதி செய்வர்.

சிறுநூல் ஆலைகள் :

காடாத்துணி, ஜமக்காளம் முதலியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படும் மிகக் குறைந்த எண் நூல்களைத் தயாரிக்கும் சிறு நூல் ஆலைகள் பலவும் உள்ளன.

மதராஸ் சிமெண்ட்ஸ் :

இம்மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் சிமெண்ட் ஆலை இதுவேயாகும். இதன் அலுவலகம் இராஜபாளையத்திலும், தொழிற்சாலை சாத்தூருக்கு அருகேயுள்ள துலுக்கப்பட்டியிலும் உள்ளன. இங்கு 1961 இல் உற்பத்தி தொடங்கிற்று. ஒருநாள் உற்பத்தி 1000 டன்னுக்கும் மேலாகும். தமிழக அரசு இதில் பங்குகள் வைத்துள்ளது.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் :

ஆலங்குளம் எனும் ஊரில், ஏழு கோடி ரூபாய் மூலதனத்தில் 1970 முதல் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் என்ற பெயரில் சிமெண்ட் தொழிற்சாலையை அரசு நடத்தி வருகிறது. இந்த ஆலைக்காக 16 கி.மீ தொலைவுக்கு இரயில்பாதை போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்த ஆலைக்குப் பொருளாதார வசதி ஏற்படுத்தித் தந்துள்ளது. "போர்ட்லேண்டு கிரே" சிமெண்டும், மற்றும் சிமெண்டு குழாய்களும் தயாரிக்கப்படுகின்றன.

ஜெனரல் பர்ப்பஸ் என்ஜினீரிங் ஒர்க்ஷாப் :

தமிழக அரசு இத்தொழிற் கூடத்தைப் பல ஆண்டுகளாக இராஜபாளையத்தில் நடத்தி வருகிறது. இதில் சைக்கிள் சாமான்கள், டியூப் லைட் ஷேடுகள், வேளாண் கருவிகள், மேசை, நாற்காலிகள், மருத்துவத் தளவாடங்கள் முதலியன உற்பத்தியாகின்றன.

தீப்பெட்டித் தொழில் :

தீப்பெட்டி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது விருதுநகர் மாவட்டமாகும். சின்ன ஜப்பான் எனப்படும் சிவகாசியே தீப்பெட்டித் தொழிலின் தலைநகரமாகும். சாத்தூரிலும் வேறு பல இடங்களிலும் இத்தொழில் பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய தொழிற்சாலைகள் நூற்றுக்கும் அதிகமாகும். பல்லாயிரம் பெண்களும், சிறுவர் சிறுமியரும் வீட்டிலிருந்தே வருவாய் பெற இத்தொழில் உதவுகிறது. சட்டங்களில் தீககுச்சிகளை அடுக்குதலும், தீப்பெட்டிக்கான மேல்பெட்டி, அடிப்பெட்டி இவைகளை ஒட்டுவதும், ஒழுங்குபடுத்தும் முறையில் கட்டைத் தட்டுதலும், தீ அடுப்பில் மெழுகு முக்குதலும், மருந்து தடவுதலும், மருந்து தடவிய கட்டைகளை உலர வைத்தலும், குச்சிகளைப் பெட்டியில் அடைத்தலும், பெட்டிகளை உலர வைத்தலும், பண்ட்ரோல் ஒட்டுதலும், லேபிள் ஒட்டுதலும் பெட்டிகளை டஜனாக பேக் செய்தலும், பின் குரோஸாக பேக் செய்து கட்டாக கட்டுதலும் தீப்பெட்டித் தொழிலின் பல பிரிவுகளாகும். இவை சிறுவர்களும் தாய்மார்களும் வீதிகளில் வீடுகளில் அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளாகும்.

மெட்ராஸ் சிப் போர்டு பாக்டரி :

இராஜபாளையத்தில் நடைபெறுகிற இத்தொழிற்சாலை செக்கோஸ்லோ வாக்கியா தொழில் கூட்டுறவோடு செயல்படுகிறது. மரத்தூள் களிலிருந்து பலகைகள், தள்ளு கதவுகள், உத்தரப் பலகை, மேசையின் மேற்பகுதிகள் தயாரிக்கப்படுகின்றன.

பாரத் இன்சுலேசன் டேப் கம்பெனி :

பிளாக் அட்ஹெசிவ் மற்றும் குறைந்த மின் அழுத்த இன்சுலேசன் டேப்புகள் இங்குத் தயாரிக்கப்படுகின்றன.

நிப் தொழிற்சாலை :

சாத்தூரில் பவுண்டன் பேனாவுக்குப் பயன்படும் நிப் செய்யும் தொழிற்சாலைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உள்ளன. 1948 இல் நிப் தயாரிப்பு குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று நவீன இயந்திரங்களால் தயாரிக்கப்படுகினற்ன. இத்தொழில் சாத்தூர் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.

பட்டாசுத் தொழில் :

தீப்பெட்டித் தொழிலைப் போலவே, பட்டாசுத் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்படைந்துள்ளது. சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை நல்கியுள்ளன. சிவகாசி பட்டாசு இந்தியாவெங்கும் விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

அச்சுத்தொழில் :

சிவகாசியில் திரும்பிய இடமெல்லாம் அச்சகங்கள் இருக்கின்றன. லித்தோ, ஆப்செட், லேமினேசன் என்று ஆயிரக்கணக்கில் அச்சு சம்பந்தப்பட்ட தொழில்கள் சிவகாசியில் நடைபெறுகின்றன. இங்கு அச்சுத் தொழிலில் புழங்கும் பணம் மட்டுமே ஆண்டுக்கு ஐநூறு கோடிரூபாய்க்கும் மேல் விதவிதமான திருமண அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், நோட்டு புத்தக அட்டைகள், சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளின் மேல் அட்டைகள் ஆகியவை இங்குத் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவுக்குக் கூட சிவகாசியிலிருந்து புத்தகங்கள் வாரத்திற்கு ஒரு 'கண்டெய்னர்' என்ற கணக்கில் அனுப்பப்படுகின்றன. மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளுக்குக் காலண்டர்கள் அனுப்பப்படுகின்றன. இந்திய அளவில் பத்து சதவிகித லாட்டரிச் சீட்டுகள் சிவகாசியில் அச்சடிக்கப்படுகின்றன. சிவகாசியில் வசிக்கும் ஒரு இலட்சம் பேரில் அச்சுத் தொழிலை நம்பியிருப்பவர்கள் மட்டும் 25 ஆயிரம் பேராவர்.

வாழ்த்துக் கார்டுகளைத் தயாரிப்பதில் ஸ்வாகத் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மற்றும் ஸ்ரீனிவாஸ் பிரிண்டிங் பிரஸ், ஜவஹர் பைன் ஆர்ட்ஸ், வி.கே.பைன் ஆர்ட்ஸ் போன்ற அச்சகங்களிலும் வாழ்த்துக் கார்டுகள் தயாராகின்றன. இந்த வாழ்த்து அட்டைகள் இந்தியா வெங்கிலும் விற்பனையாவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மற்றும் பஸ் டிக்கெட்டுகளும், பாடநூல் நிறுவனப் புத்தகங்களும் அச்சாகின்றன. ஓரியண்ட் லித்தோ பிரஸ், காரனேஷன் லித்தோ ஒர்க்ஸ், நேஷனல் லித்தோ பிரஸ் ஆகியவை முன்னனி அச்சுக் கூடங்களாகும்.

மாடர்ன் இன்டஸ்ட்ரீஸ் மேகசின் :


சிவகாசியில் உள்ள இத்தொழிற்சாலையில் வார்னிஷ், டிஸ்டம்பர், லப்பம், பிரெஞ்சு பாலிஷ் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இவை ஏற்றுமதியாகின்றன.

பவுண்டரித் தொழில் :

சிவகாசியில் பவுண்டரித் தொழிலும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. திருத்தங்கல் காகா இந்தியன் பவுண்டரியில் அச்சு ஆலைகளுக்கும், நூல் ஆலைகளுக்கும், வேளாண் தொழிலுக்கும் வேண்டிய கருவிகளும், உருக்குப் பொருட்களும், விளையாட்டுக் கருவிகளும் செய்யப்படுகின்றன.

ஜவஹர் மில்ஸ் :

இம்மாவட்டத்தில் செட்டிநாடு பகுதியில் ஜவஹர் மில்ஸ் செயல்படுகிறது.

சூலக்கரை தொழில் பண்ணை :

விருதுநகர் அருகில் சூலக்கரையில் அரசு சார்பில் தொழில் பண்ணை துவங்கப் பட்டுள்ளது. இங்குள்ள நிறுவனங்களில் மறை ஆணிகள், ஆணிகள், உலோகத் தகட்டுப் பொருட்கள், ஜெம்கிளிப்புகள், பின்கள், பாலிதின் பைகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

கூட்டுறவுச் சங்கங்கள் :


அரசு வழங்கும் சலுகைகளையும் உதவிகளையும் பயன்படுத்தி கீழ்க்கண்ட தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் இம்மாவட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளன :

மரவேலை, தச்சுவேலை கூட்டுறவுச் சங்கம்
உலோகப் பாத்திரங்கள் தொழில் கூட்டுறவுச் சங்கம்
செங்கல் தயாரிப்புக் கூட்டுறவுச் சங்கம்
தீக்குச்சித் தயாரிப்புக் கூட்டுறவுச் சங்கம்
அச்சிடுதல், சாயம் போடும் தொழில் கூட்டுறவுச் சங்கம்
ரெடிமேடு ஆடைகள் தயாரித்தல்
காகித உறைகள் தயாரித்தல்
மீன்வலை நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருவில்லிப்புத்தூர், சாத்தூர், முதலிய வட்டங்கள் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ளதால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மற்றும் சிப்காட் (SIPCOT) ஆகிய நிறுவனங்களிடமிருந்து சலுகைகளையும் மானியங்களையும் பெற்று புதியத் தொழில்கள் அமைத்து முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்