திருச்சி (Tiruchirappalli) | |
தலைநகரம் : | திருச்சிராப்பள்ளி |
பரப்பு : | 11,075 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,388,831 |
எழுத்தறிவு : | 1,689,780 (79.16%) |
ஆண்கள் : | 1,194,133 |
பெண்கள் : | 1,194,698 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 542 |
வரலாறு :
தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974 இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்ட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
எல்லைகள் :
வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொதுவிவரங்கள் :
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-3(திருச்சி, லால்குடி, முசிறி); வட்டங்கள்-7 (திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர்).
உள்ளாட்சி நிறுவனங்கள் :
மாநகராட்சி-1 (திருச்சிராப்பள்ளி); ஊராட்சி ஒன்றியம்-14 (திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார் பேட்டை, துறையூர் மற்றும் உப்பியாபுரம்)
பெயர்க்காரணம் :
திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள் :
தாயுமான சுவாமி கோவில் :

பஞ்சவர்ண நாதர் கோவில் :
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் இக்கோவில் உள்ளது. திருமுக்கீச்சரம் என்றும், கோழியூர் என்றும் இவ்வூரை அழைப்பர். ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாக இக்கோயிலில் குடிகொண்ட சிவன் வீற்றிருத்தலால் பஞ்சவர்ணநாதர் என்று பெயர் வந்தது. இது மூவேந்தரும் சேர்ந்து வந்து வணங்கிய சிறப்பு கொண்டது.
உச்சிநாதர் கோவில் :
திருச்சிக்குத் தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ள திருக்கற்குடியில் இக்கோயில் சிறிய மலையின் மீது உள்ளது. இது நந்திவர்மப் பல்லவன் திருப்பணி செய்த பழங்கோயிலாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலியோரின் பாடல் பெற்றத் தலமாகும். இவ்விறைவனை வேண்டிக் கொண்டு பாகை பூசை நடக்கிறது. இக்கோவில் அமைந்துள்ள மலைக்கு உய்யக் கொண்டான் பெருமலை என்று பெயர்.
சத்தியாவாகீசுவரர் ஆலயம் :
இது லால்குடி இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள அன்பில் ஆலந்துறை என்னும் ஊரில் இருக்கிறது. இக்கோவிலில் தெற்கு நோக்கி செவி சாய்த்த விநாயகர் திருவுருவம் உள்ளது. சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றது.
திருமூலநாதர் கோவில் :
திருவானைக்காவுக்குக் கிழக்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள திருபாற்றுத்துறை என்னும் ஊரில், திருவெறும்பூர் இரயில் நிலையத்திற்கு 6 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பற்றிச் சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
சம்புகேசுவரர் ஆலயம் :

விராலிமலைக் கோயில் :

திருச்சி-மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இது இயற்கை எழில் மிக்கதான குன்று. இங்கு மயில்கள் மிகுதியாக வாழ்கின்றன. ஆறுமுருகப் பெருமான் மயிலின் மீது எழுந்தருளியுள்ளார். கோயிலுக்குத் தெற்காக நாகத்தீர்த்தம் என்னும் திருக்குளம் கட்டப்பட்டுள்ளது. பெருமானுக்குத் தங்கச் கவசம் பூணும் நாளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.
திருவரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோயில் :


செல்லாண்டி அம்மன் கோவில் :
திருச்சிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் வெக்காளி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. இவ்வம்மனைக் கிராமக் காவல் தெய்வமாக எண்ணி பூசிக்கின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆறு நாட்கள் அம்பாளுக்கு விழா எடுக்கப்படுகிறது. 1958 இலிருந்து நடைபெறாமல் நின்றிருந்த இக்கோயில் உற்சவம் 1981 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தான்தோன்றீசுவரம் :
திருச்சி-உறையூர் சாலையில் இக்கோயில் உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு பெரிய இராஜகோபுரம் இல்லாத காரணத்தால் பலரும் அறிந்திட வாய்ப்பில்லை என்றாலும், காலத்தாலும், வரலாற்றாலும் சிறப்புப் பெற்றக் கோயிலாகும். இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. இறைவர் இலிங்கத் திருமேனியாகக் காணப்படுகிறார். அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். வாயிலின் இருபுறமும் பெரிய பழைய இரு துவார பாலகர் சிலைகள் உள்ளன.
புனித சூசையப்பர் கோயில் :
பொன்மலைப் பகுதியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஆதிக்கத்தில் எட்டு பள்ளிகளும், நான்கு துறவற மடங்களும், ஆறு இல்லற நிறுவனங்களும், எட்டு இல்லற திருச்சபைகளும், பன்னிரண்டு கிருத்துவ ஆலயங்களும் உள்ளன.
உலக இரட்சகர் கோயில் :
இக்கோவில் காட்டூரில் உள்ளது. ஐந்து பள்ளிகளும், எட்டுக் கோவில்களும், துறவற மடம் ஒன்றும், இல்லற நிறுவனங்கள் மூன்றும், இல்லற சபைகள் பன்னிரண்டும் கொண்டு சிறந்து விளங்குகிறது. கத்லோலிக்க மக்கள் சுமார் 7000 பேர் உள்ளனர்.
புனித பதுவை அந்தோனியார் தேவாலயம் :
இத்தேவாலயம் இலுப்பூரில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 கத்தோலிக்கர் உள்ளனர். சுமார் 11 கிராமங்களில் கோவில்கள் உள்ளன. மேலும் இதன் ஆட்சி பொறுப்பில் ஒரு நடுத்தரப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் நடந்து வருகின்றன.
நத்ஹர்வலி தர்கா :
திருச்சி மாநகரத்தின் கோட்டைப் பகுதியில் உள்ள இது தென்னிந்தியாவிலேயே சிறப்பான கட்டடக்கலை வேலைப்பாடுகளுடன் அமைந்தது. இதன் வட்டமான கூரைக்கும்பம் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது. இந்தக் கூம்பிய தாமரை போன்ற வேலைப்பாடு இந்தோ-சாரசானிய சிற்பக் கலையின் பிரதிபலிப்பாகும். இது ஆற்காடு நவாப் சந்தாகாசிப்பால் கட்டப்பட்டது. ஹோலிகிராஸ் கல்லூரிக்குப் பின் பக்கத்தில் அமைந்துள்ளது. ஆதியில் இந்த தர்கா இருந்த இடத்தில ஒரு சிவன் கோயில் இருந்தது. அதற்குச் சான்றாக இன்றும் தர்காவின் கருவறையில் லிங்கம் ஒன்று இருப்பதைக் காணலாம்.
குடவரைக் கோவில்கள் :
லலிதாங்குரப் பல்லவ கிருகம் :
திருச்சி தாயுமானவர் கோயிலிலிருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பிரியும் வழியில் மலைச்சாரலில் லலிதாங்குரப் பல்லவ கிருகம் என்ற குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. முகப்பில் நான்கு தூண்களும், இரண்டு கரைத்தூண்களும் உள்ளன. நடுவில் சுரங்கப் போதிகை காணப்படுகிறது. மண்டபத்தில் தாமரை இதழ்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள கருவறையில் தெய்வ உரு எதுவுமில்லை. பல்லவர் பாணியில் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி நான்கு கைகளுடன் சிவபெருமான் உருவம் புதைச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து கங்கை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டிய மகேந்திரவர்மப் பல்லவனின் பட்டப் பெயரான லலிதாங்குரன் எனும் பெயரோடு இக்கோயில் விளங்குகிறது. குடவரையின் சுவரில் 900 ஆண்டுக்கு முன் கலித்துறை அந்தாதி பொறிக்கப்பட்டுள்ளது. இக் கோயிலின் காலம் ஏழாம் நூற்றாண்டாகும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுணப் பாண்டியனின் கல்வெட்டும், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இராசராச சோழனின் கல்வெட்டும் இங்குள்ளது-
கீழ்க் குடவரைக் கோயில் :
இது திருச்சி மலை மீதுள்ள வீதியில் தென்மேற்கு மூலையில் உள்ளது. மலையின் சரிவில் தெற்கு நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. தூண்கள் கீழே சதுரமாகவும் நடுவில் எட்டு பட்டை கொண்டதாகவும், மேலே தாடி, கவசம் போன்ற உறுப்புகளைக் கொண்டதாகவும் உள்ளன. குடவரையின் முன்னால் கல்லால் அமைந்துள்ள விட்டங்களின் நுனியில் பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு இடையில் வட்டமான போதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாயில் காப்போர் உருவம் பல்லவர் பாணியில் விளங்குகிறது. இரு கருவறைகளும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் எந்தத் தெய்வவுருவும் இல்லை. கீழ்ப்பகுதியில் உள்ள கருவறையில் திருமால் நான்கு கரங்களுன் காட்சியளிக்கிறார். பக்கத்தில் இரு தேவர்களின் உருவங்கள் செதுக்கப்ட்டுள்ளன. மண்டபத்தின் பின் சுவரில் ஐந்து புதைச் சிற்பங்கள் உள்ளன. பின் சுவரில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் உருவம் காணப்படுகின்றன. இதையடுத்து சிவன் உருவம் உள்ளது. இது ஏழாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகும்.
திருப்பைஞ்ஞஂலி குடவரைக் கோயில் :
திருச்சியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் திருப்பைஞ்ஞஂலி கிராமம் உள்ளது. ஞஂலி என்னும் கோயில் கருவறையில் வடபுறச் சுவரில் பிச்சையெடுக்கும் பெருமானின் திருவுரு காணப்படுகின்றனது. இக்கோயில் பிரகாரத்தில் மேற்கு நோக்கிக் குடவரை உருவாக்கப்பட்டுள்ளது. சதுரமான கருவரை, சிறிய மண்டபம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. இறைவன் சோமாஸ்கந்த வடிவில் புதைச் சிற்பமாகக் காணப்படுகிறார். சுகாசனத்தில அமர்ந்த நிலையில் ஆறேறு சடையன் நான்கு கைகளுடன் காணப் படுகிறான். இங்குள்ள பாறை வேங்கையின் நிறம் போன்று தோற்றமளிக்கிறது. குழந்தை முருகன் உருவம் தாய் தந்தையுடன் ஒருசேர நிற்பது போல் சோமஸ்கந்த வடிவமைக்கப் பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். இது ஒன்பதாம் நூாற்றாண்டைச் சேர்ந்தது.
முக்கிய ஊர்கள் :
உறையூர் :
சங்க காலத்திலும், பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் உறையூர் சோழப் பேரரசின் தலைநகராய் விளங்கியது. ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரைப் பதினைந்தது சோழ மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அவர்களில் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் முதலானோர் முக்கியமானவர்கள். தற்போது திருச்சி நகராட்சியின் ஒரு பகுதியாக உறையூர் விளங்குகிறது. உறையூர் நகரின் பரப்பளவு 23.26 ச.மைல்கள். இது கடல் மட்டத்திற்கு மேல் 78 மீ உயரத்தில் உள்ளது. சோழர்காலத்திலிருந்து இன்று வரை உறையூர் என்னும் பெயரே சிறப்பாக வழங்கப்படுகிறது. உறையூருக்கும் தென்னுருக்கும் இடையில் தில்லைநகர், சாலைநகர், நெசவாளர் காலனி என்னும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் உறையூர் நவீனப் பொலிவு பெற்று விளங்குகிறது. மிகத் தொன்று தொட்டே இவ்வூர் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கி வருகிறது. மற்றொரு முக்கியத் தொழில் சுருட்டு தயாரிப்பது. உறையூர்ச் சுருட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இவ்வூரில் தேவாங்கச் செட்டியார்களும், செளராஷ்டிரர்களும் மிகுதியாக வாழ்கின்றனர். கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் உறையூர் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
திருச்சி நகரம் :

மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கடை வீதியில் துணிவியாபாரம், பாத்திர வியாபாரம், நகை வியாபாரம், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் முதலியன வணிகச் செழிப்புக்கு உறுதுணையாக உள்ளன. கூட்டுறவு வளர்ச்சிக்குச் சான்றாக சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி விளங்குகிறது. மெயின்கார்டு கேட்டுக்கு அருகில் உள்ள இந்நிறுவனம் நகரத்தின் பல பகுதிகளிலும் கிளை நிறுவனங்களை நடத்துகிறது. மாரீஸ், ரம்பா, ஊர்வசி, கலையரங்கம், மீனா, சோனா என்று திரையரங்குகள் ஏராளமாய் உள்ளன. ஹோட்டல் ராஜாளி, பெமீனா, ஹோட்டல் ராஜசுகம், குறிஞ்சி, கல்பனா, காஞ்சனா முதலிய பெரிய உணவு விடுதிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. டோல்கேட் அருகில் புகழ்வாய்ந்த டி.வி.எஸ் நிறுவனம் செயல்படுகிறது. திருச்சி நகராட்சி திருச்சி, ஸ்ரீரங்கம், பொன்மலை, கிராப்பட்டி, உறையூர், பாலக்கரை ஆகியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் அலுவலகத்திற்கு அருகில் வானொலி நிலையம் உள்ளது. திருச்சி நகருக்குள் அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. வெஸ்ட்ரி பள்ளிக்கருகில் தற்போது மாநில அரசின் பொறுப்பில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை அமைந்துள்ளது. வசதி நிறைந்த விடுதியாகவும், படபிடிப்புத் தளமாகவும் இது விளங்குகிறது. இதற்கு மிக அருகில் பெண்கள் விடுதியான ஒய்.டபிள்யூ.சி.ஏ இருக்கிறது. தினமலர், தினத்தந்தி, மாலைமலர், மாலை முரசு முதலிய நாளேடுகளும் இங்கு அச்சாகின்றன. திருச்சி நகரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. நகரின் பல பகுதிகளிலும் பைக், ஸ்கூட்டர், லாரி முதலிய வாகனங்களைப் பழுதுப் பார்க்கும் பட்டறைகள் நிறைந்துள்ளன. திருச்சி இரயில் நிலையம் அழகான, தூய்மையான, பெரிய இரயில் சந்திப்பு நிலையமாக விளங்குகிறது. 1946 இல் மகாத்மா காந்தி திருச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கலைகள் வளர்ச்சி பெற ரசிக ரஞ்சனி சபா எனும் அமைப்பு செயல்படுகிறது. திருச்சியில் தொலைக் காட்சி நிலையமும் உள்ளது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து பயணிகள் சென்னை, திருவனந்தபுரம், கொழும்பு முதலிய இடங்களுக்குச் செல்கிறார்கள்.
திருவெறும்பூர் :
இது திருச்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள இரயில் தொழிற்சாலையில் ஊர் வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான பாரத் கனரகத் தொழிற்சாலை இங்குள்ளது. மக்கள்தொகை மிகுதி. எறும்பேஸ்வரம் என்னும் பெயரும் இதற்கு வழங்கி வந்தது. மலைமேலுள்ள சிவன் கோவில் ஜைனகலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. போர்கள் நிகழ்ந்த காலத்தில் இவ்வூர் சிறந்த படைத்தளமாக விளங்கிற்று. இவ்வூருக்கு அருகில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மணப்பாறை :
இது குளித்தலைக்கு 22 மைல் கிழக்கில் உள்ளது. மனப்பாறை உழவு மாடுகளுக்குச் சிறந்த ஊராக இன்றளவும் விளங்குகிறது. மனப்பாறை முறுக்குக்கும் பிரசித்திப் பெற்றது. அரசின் பல்வேறு திட்டங்களால் வளர்ந்துள்ளது. இரயில் நிலையம், பேருந்து நிலையம் முதலியன உள்ளன. வாணிகத்திலும், வேளாண்மையிலும் சிறந்திருக்கிறது. புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சமயபுரம் :

முக்கொம்பூர் :
இவ்விடத்தில் காவிரி இரண்டாகப் பிரிந்து காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. இது சுற்றுல

இலுப்பூர் :
திருச்சிக்குக் கிழக்கில் 26 மைல் தொலைவில் உள்ளது. வணிகத்தில சிறந்து விளங்கும் முஸ்லீம்கள் பெருந்தொகையினராக இங்கு வாழுகின்றனர். கைத்தறி நெசவும் சிறப்பாக நடைபெறுகிறது. பல செளராஷ்டிரக் குடும்பங்கள் இந்நெசவுத் தொழிலில் செயலாற்றுகின்றன. துணிகளுக்குச் சாயம் போடும் தொழிலைக் கைக்கோளர் குடும்பங்கள் செய்து வருகின்றன.
கிளாம்பில் :
திருச்சிக்கு வடகிழக்கில் 17 மைல் தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் சிறப்பு பெற்று விளங்குகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் மக்கள் மிகுதியாகக் கூடுகின்றனர். பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் பிரிவினர் இங்கு
வாழ்கின்றனர்.
லால்குடி :
இவ்வூர் திருச்சிக்கு வடகிழக்கில் உள்ளது. மக்கள் தொகை மிகுதி. வட்ட அலுவலகங்கள் உள்ளன. வாணிகச் சிறப்பினால் போக்குவரத்து மிகுதி. சிவாலயம் உள்ளது. வாழை, வெற்றிலை இரண்டும் செழிப்பாக பயிராவதால் பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. 1952 இல் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இப்பகுதியிருந்தது.
முத்தரநல்லூர் :
திருச்சிக்கு வடமேற்கில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் 1753 இல் இங்கு போர் நடந்தது.
பிராட்டியூர் :
திருச்சிக்குத் தெற்கில் ஆறு மைல் தொலைவில் உள்ளது. கள்ளர்கள் மிகுதியாக வாழ்ந்த ஊர். கரட்டை மலையிலுள்ள ஒண்டி கருப்பம்மன் பிரபலமானது.
பிக்ஷண்டார் கோவில் :
இவ்வூர் திருச்சிக்கு வடக்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது. கொள்ளிடத்திற்கு வடகரையிலும், திருவரங்கத்திற்குக் கிழக்கில் ஒரு மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது.பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவ்வூரில் பல போர்கள் நடந்துள்ளன. வேளாண்மை நன்கு நடைபெறும் இவ்வூர் கோவிலால் சிறப்புறுகிறது.
திருவரங்கம் :

கல்வி :
திருச்சி மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு 1983 இல் அமைக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழக அங்கீகாரத்தின் கீழ்ச் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரி, கீரனுர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, உறையூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, வல்லம் சண்முகா பொறியியல் கல்லூரி இவையும் இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்ட்டுள்ளன.
50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்தில் உள்ளன. புதுக்கோட்டை செல்லும் வழியில் திருச்சியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. புனித சூசையப்பர் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரி, புத்தனாப்பட்டி நேரு நினைவுக் கல்லூரி, பிஷப் ஹஂபர் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி முதலிய கல்லூரிகள் தன்னாட்சி உரிமையைப் பெற்றுள்ளன. திருச்சி மேற்றிராசனத்தில் இரண்டு ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும், கைத்தொழில், நெசவு, தையல் செவிலியர் மற்றும் தாதியர் பள்ளிகளும், 5 உயர்நிலைப்பள்ளிகளும், 6 நடுத்தரப்பள்ளிகளும், 6 துவக்கப்பள்ளிகளும் இயங்குகின்றன.
பருவநிலை :
திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ளதால், கடற்கரை கிடையாது. இதனால் கோடையில் ஜஂன் மாதம் வரை வெயில் உக்கிரமாக இருக்கும். தென்மேற்குப் பருவக்காற்றால் மழை கிடைக்கிறது. ஆகஸ்டு வரை மழை பெய்கிறது. வடகிழக்கு பருவக்காற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பலத்த மழை பெறுகிறது.
கனிமவளம் :
இம்மாவட்டத்தில் கனிமப்பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. மேக்னெடிக் இரும்பு, செலிசைப், கிலிமினைட், கார்டைரைட், மாக்னசைட், காங்கர், பாஸ்பேடிக் நோடுல்ஸ் முதலியன பல இடங்களில் கிடைக்கின்றன. வீடு கட்ட உதவும் கருங்கல் மிகுதியாக உடைக்கப்படுகிறது.
மீன்வளம் :
கடற்கரை இல்லாததால், ஸ்ரீரங்கம், லால்குடி, எஸ்.ஆடுதுறை, கொடலைக் கருப்பூர், திருமழலாடி, கரூர், மேலமாயலூர், வடுக நாகம்பட்டி, துறையூர் ஆகிய ஒன்பது முக்கிய இடங்களில் மீன் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மீனவர் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. பிடிக்கப்படும் மீன்கள் கெடாமல் இருக்கக் குளிர் பதன அமைப்புகளும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
நீர்வளம் :
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான்
ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
கல்லணை :

மேலணை :
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டுப் படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொன்னிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
வேளாண்மை :
நீர்வளம், மண்வளம், காலநிலை, மனித வளம், விற்பனை வசதி, கடன் வசதி இவை மிகுந்த அளவில் இம்மாவட்டத்தில் இருப்பதால், இயற்கையிலேயே வேளாண்மையில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், கம்பு வரகு, சாமை, மக்காச்சோளம் முதலியன வாகும். பருப்பு வகைகளில் துவரம்பருப்பு அதிகமாக விளைவிக்கப்படுகிறது. எள், நிலக்கடலை, பருத்தி, புகையிலை முதலியனவும் முக்கிய விளைப்பயிர்களாகும். மற்றும் மிளகாய், ஆமணக்கு, வெங்காயம், காய்கறிகள் ஆகியனவும் விளைவிக்கப்படுகின்றன.
புகழ் பெற்றோர் :
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சென்னை ராஜதானியில் உணவுத்துறை அமைச்சராய் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் டி.எஸ்.எஸ். ராஜன், தமிழக மாணவர்களுக்கு கோனார் உரையை அறிமுகப்படுத்திய அய்யம்பெருமாள் கோனர், பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர். எம்.கல்யாணசுந்தரம் திரைப்பட நடிகரும் பாடகருமான எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிகவேள் எம்.ஆர். ராதா, வயலின் மேதை லால்குடி ஜெயராமன், கவிஞர் வாலி, கவிஞர் நா. காமராசன், திரைப்பட பின்னனிப் பாடகர் திருச்சி லோகநாதன் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோராவர்.
தொழில்:
துப்பாக்கித் தொழிற்சாலை :
திருவெறும்பூருக்கு அருகில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் இத்தொழிற்சாலை மத்திய அரசின் இராணுவத்துறை கீழ் இயங்குகிறது. இராணுவத்திற்குத் தேவைப்படும் பலவகைத் துப்பாக்கிகள் இங்குத் தயாராகின்றன. இத்தொழிற்சாலை தீவிர பாதுகாப்புடன் செயல்படுகிறது.
இரயில் தொழிற்சாலை :
தென்னிந்திய இரயில்வேயின் தென் வட்டத்துக்குத் திருச்சி டிவிஷன் தலைமையிடமாகும். தென் இரயில்வேயின் மீட்டர் கேஜ் பிரிவுத் தொழிற்சாலை திருக்சியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் திருவெறும்பூர் அருகிலுள்ள பொன்மலையில் உள்ளது. விழுப்புரத்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்பிரிவும் இதனுடன் இணைப்பப்பட்டு விட்டதால் 9000 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலுள்ளனர். இரயில்வேக்குத் தேவைப்படும் அனைத்து வேலைகளும் இங்கு நடைபெறுகின்றன.
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் (பி.எச்.இ.எல்) :
தமிழகத்தின் மிகப் பெரியத் தொழிற்சாலையான இது ஒரு கனரகத் தொழிற்சாலை. இந்திய அரசு இதை செக்கோஸ்லாவாகிய நாட்டின் கூட்டுறவுடன் நடத்துகிறது. இத்தொழிற்சாலையில் கொதிகலன்கள் (ஙிஷீவீறீமீக்ஷீ) உருவாக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதனால் அந்நியச் செலாவணி மிகுதியாகக் கிடைக்கிறது. பதினெட்டுக் கோடி ரூபாய் மதிப்புள்ள கொதிகலன்களைத் தயாரிக்கிறது. இது திருவெறும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதில் பணிபுரிகின்றனர்.
செயற்கை வைரம் :
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயற்கை வைரத் தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொழிலில் சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இச்செயற்கை வைரம் ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.
நூலாலைகள் :
திருச்சி வட்டத்தில் நமனசமுத்திரம் என்னும் ஊரில் உள்ள புதுக்கோட்டை டெக்ஸ்டைல்ஸ் சுமார் 13000 கதிர்கள் கொண்டது. குளித்தலை வட்டத்தில் மணப்பாறைப் பகுதியில் உள்ள தியாகேசர் ஆலையில் சுமார் 31000 கதிர்கள் உள்ளன. திருச்சி ராம்ஜி நகரில் உள்ள திருச்சிராப்பள்ளி மில்ஸ் சுமார் முக்கிய துணி நெய்யும் ஆலைகளாகும். இவ்வாலைகளால் சுமார் 4000 குடும்பங்கள் பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவிர இம்மாவட்டத்தில் சிறுதொழில் நிலையங்கள் ஏராளமாக உள்ளன.
பொறியியல் துறை கருவிகள் செய்யும் நிறுவனங்கள் சிறு நூலாலைகள், கரும்பு ஆலைகள், மாவு மில்கள், உணவு பொருள் தயாரிப்பகங்கள், சாராயம் தயாரித்தல், புகையிலை, பருத்தி ஆடை நெசவகங்கள், சாக்கு தயாரிப்பு, கைத்தறி உபகரணங்கள், மரச்சாமான்கள் தயாரித்தல், காகிதம், காகிதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள், தோல் பொருட்கள், ரப்பர், பிளாஷ்டிக் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், உலோகமல்லாத பொருட்கள், பீடித்தொழில், அல்லாய் தொழில்கள், இரும்பு உபகரணங்கள், மிஷின் பாகங்கள், மின்சாரப் பொருட்கள், பேருந்து, லாரி இவற்றின் சில உதிரி பாகங்கள் எனப் பல தொழிலகங்கள் உள்ளன. பாய்லர் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் உதிரிப் பொருட்களைத் தயாரிக்க முந்நூறுக்கும் மேற்பட்ட சிறு தொழிலகங்கள் செயல்படுகின்றன.
கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு அடுத்ததாக திருச்சி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. நிலப்பரப்பு, கிடைக்கும் மூலப்பொருட்கள், மனிதவளம் இவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இம்மாவட்டத்தில் புதியத் தொழில்கள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான மூலதனங்களையும், சலுகைகளையும் வழங்கக் கூடிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், கதர் கிராமத் தொழில்வாரியம் போன்ற நிறுவனங்களைத் தொழில் முன்வோர்களும், தொழில் வல்லுனர்களும் தக்கத் திட்டத்தோடு அணுகினால், பல புதியத் தொழில்கள் இம்மாவட்டத்தில் தோன்றி பொருள்வளம் பெருகி வேலையில்லாப் பிரச்சினையும் ஓரளவு தீரும். ாவட்டத்தில் தோன்றி பொருள்வளம் பெருகி வேலையில்லாப் பிரச்சினையும் ஓரளவு தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக