திண்டுக்கல் (Dindigul) | |
தலைநகரம் : | திண்டுக்கல் |
பரப்பு : | 5,952 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,918,960 |
எழுத்தறிவு : | 1,196,671 (69.83%) |
ஆண்கள் : | 966,201 |
பெண்கள் : | 952,759 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 317 |
வரலாறு :
திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும் (காண்க : மதுரை மாவட்டம்)
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். மலை மீது பாண்டியர் காலத்துக் கட்டிடக் கலைச் சிறப்புக் கொண்ட ஒரு கோயில் இருக்கிறது. 1605 இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலைக்குத் தென்கிழக்கில் மேற்கண்ட கோட்டையை கட்டினார். திப்புசுல்தான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, திண்டுக்கல் கோட்டை விரிவாக்கப்பட்டு, பழைய வாயில்கள் மாற்றப் பட்டு புதிய வாயில்கள் அமைக்கப்பட்டன. 1798இல் ஆங்கிலேயர், கோட்டையில் மேலும் சில கட்டிடங்களைக் கட்டினர். 1947 வரையில் இக்கோட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்தது. சுமார் 157 ஆண்டுகள் அவர்கள் வசமிருந்தது. மதுரை மாவட்டத்தில், முதன் முதலாக ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த பகுதி திண்டுக்கல்தான்.
எல்லைகள் :
திண்டுக்கல் மாவட்டம் வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்களையும் தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்களையும், மேற்கில் கோயமுத்தூர் மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் திண்டுக்கல் ஆகும்.
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-3(திண்டுக்கல், பழனி, கொடைக்கானல்); ஊராட்சி ஒன்றியங்கள்-14 (திண்டுக்கல், சாணார் பட்டி, நத்தம், ஆத்தூர்(இருப்பு), செம்பட்டி, ரெட்டியார்சத்திரம்,நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, பழனி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி, கொடைக்கானல்);பேரூராட்சி-24 (அம்மைநாயக்கனுர், அய்யம்பாளையம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, அகரம், பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு, சித்தயன்கோட்டை, ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சேவுகம்பட்டி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பாலசமுத்திரம் பாளையம், நெய்க்காரப்பட்டி, கீரனுர், வடமதுரை, அய்யலூர், எரியோடு, பண்ணைக்காடு); கிராமங்கள்-2498.
சட்டசபைத் தொகுதிகள் :
8-பழனி, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதி மட்டும்).
பாரளுமன்றத் தொகுதிகள் :
3-திண்டுக்கல், பழனி, பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப்பகுதி மட்டும்).
கல்வி :
பள்ளிகள்: துவக்கநிலை-1,133; நடுநிலை-216; உயர்நிலை-55; மேனிலை-36; கல்லூரிகள்-9; (அரசு மற்றும் தனியார்) பொறியியல் கல்லூரிகள்-2; தொழில்பயிற்சி நிறுவனங்கள்-3; தொழிற்நுட்பக் கல்லூரிகள்-4; பல்கலைக் கழகம்-2; (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம்).
வழிப்பாட்டுத் தலங்கள் :


இக்கோயிலின் சமுதாய நலப் பணிகளாகப் பின்வரும் கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி, பெண்கள் கலைக் கல்லூரி, ஆண்கள் பாலிடெக்னிக், பெண்கள் பாலிடெக்னிக், மெட்ரிகுலேசன் பள்ளி, தமிழ் போதானா முறைப்பள்ளி, செவிடர்-ஊமையர் பள்ளி, அன்பு இல்லம், பாலர் காப்பகம், நாதஸ்வரப் பள்ளி, தவில் பள்ளி, வேத சிவாகம பாடசாலை மற்றும் மருத்துவமனை, சித்த வைத்திய சாலை, நூலகம், சிறுகுடில்கள், சத்திரங்கள் முதலியன.

பழனி நகருக்குள் உள்ள இக்கோயிலை ஊர்க்கோயில் என்றழைப்பர். இதில் உள்ள பல கோயில்களின் வாகனங்கள் காணத்தக்கது.
வரதராஜப் பெருமாள் கோயில் :
நாயக்க மரபினரான பாலசமுத்திரம் ஜமீன்தார்கள் 17ஆம் நூ ற்றாண்டில் இக்கோயிலைக் கட்டினர். இக்கோயில் சிற்பச் சிறப்புடையது.
செளந்தரராசப் பெருமாள் கோயில் :
தாடிக்கொம்பு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. நாயக்க அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில், திருமலை நாயக்கர் காலத்திய கல்வெட்டு ஒன்று காணப் படுகின்றனது. கோயிலைச் சுற்றி பெரிய மதில். அதற்குள் ஐந்து சுவாமி சந்நிதிகள். தாயார் சந்நிதி ஒரு கலைக்கூடமாகத் திகழ்கிறது. மகா மண்டபத்துத் தூண்கள் இசைத் தூண்களாகவும், அரிய சிற்பங்களால் கவினுற எழுப்பப்பட்டுள்ளன. சிற்பங்கள் யாவும் கல்லால் ஆனவை. நரசிம்மாவதாரம், உலகளந்த பெருமாள், கருடாழ்வார் ஆகிய சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. பளிங்குத் தூண்களும், கவினுறு மண்டபங்களும் விஜயநகர கலை அம்சங்களைக் கொண்டு விளங்குகின்றன. வடிகால் வசதியில்லாத போதும், தளவரிசையில் விழும் மழைநீர் எங்கும் தேங்கி நிற்காமல் மறைந்து விடுவது குறிப்பிடத்தக்கது. கூளப்ப நாயக்கரின் பின்னோர்களால் கட்டப்பட்ட அகோபில நரசிம்மர் கோயில் நிலக்கோட்டையில் வானோங்கி நிற்கிறது.
மல்லீஸ்வரர் கோயில் :
ரங்க மலையில் உள்ள மலையுச்சிக்கு சற்றுக் கீழே இந்த சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் மிகப் பழமையானது. பாட்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கோயில் சற்றுப் பெரியது. நாள்தோறும் ஏராளமானோர் மலையேறி சுவாமியைத் தரிசித்துத் திரும்புகிறார்கள்.
கோபிநாத சுவாமி கோயில் :
ரெட்டியார் சத்திரம் இரயிலடியிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் கோபிநாத சுவாமி கோயில் இருக்கிறது. கால்நடைகளைக் காக்கும் தெய்வமாக எண்ணி மக்கள் வணங்கு கின்றனர். ஆயிரக்கணக்கான மாடு-கன்றுகள் உருவங்களைப் பொம்மைகளாகச் செய்து காணிக்கையாக வழங்குகின்றனர். சாதி மத வேறுபாடின்றி அனைவரும் இதைப் பின் பற்றுவது சிறப்பாகும்.
சின்னாளப்பட்டி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் :
இக்கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் ஒருவித மணம் கமழும். பேரொளி ஒன்று விக்கிரகத்தைச் சுற்றித் தீப ஆராதனை போல் வலம் வருகிறதென்றும், சஷ்டி, கிருத்திகை, திங்கட்கிழமை முதலிய நாட்களில் இப்பேரொளி பெரிய அளவாகத் தெரிவதுடன், வடமேற்குத் திசையிலிருந்து வந்து கலசத்தின் அருகே இறங்குவதாகவும் கூறுவர்.

குறிஞ்சி ஆண்டவர் கோயில் :
கொடைக்கானல் மலையில் குறிஞ்சிப்பூ பூக்கத் தொடங்கும் முதலாவது இடத்தில் குறிஞ்சி ஆண்டவர் என்னும் தெய்வத்திற்கு ஒரு கோயில் இருக்கிறது. மிகப் பழங் காலத்திலேயே இத்தெய்வத்திற்கு இங்கு கோயில் இருந்திருக்க வேண்டுமென நம்பப் படுகிறது.
அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் :
பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சோர்ந்த பாலசமுத்திரம் என்னும் ஊரில் நாயக்க மரபின ரான பாலசமுத்திரம் ஜமீன்தார்கள் 17 ஆம் நூ ற்றாண்டில் சிறப்புடைய இக்கோயிலைக் கட்டினர்.
கல்யாண நரசிம்ம சுவாமி கோயில் :
கரூர், திண்டுக்கல் சாலைக்குக் கிழக்கே (குஜிலியம்பாறை வழி) ஒரு மைல் தொலைவில் உள்ள இராமகிரியில் இவ்வாலயம் உள்ளது. இது வைணவர்கள் வழிபடும் தலமாகும். இங்கு திருமணங்கள் பல நடைபெற்று வருகின்றன. பங்குனி மாதத்தில் இவ்வூரில் நடைபெறும் உத்திரத் திருவிழா இப்பகுதியில் பெயர் பெற்றது.
தொப்பைய சுவாமி கோயில் :
தொப்பைய சுவாமி மலையின் உச்சியில் இக்கோவில் உள்ளது. நாற்புறமும் சுவர் மட்டும் உள்ளது. அதனுள் சிவலிங்கம் காணப்படுகின்றது. மாசி சிவராத்திரி இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது. பொங்கலிட்டு படைப்பர். அன்றிரவு அந்த பயங்கரமான மலையுச்சியில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் கீழே வருவர். மலையுச்சியை அடைய சுமார் 5 மைல் தொலைவு நடந்து செல்லவேண்டும்.
ஆத்தூரில் முத்தாளம்மன் கோயில் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்திருவிழாவுக்குப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுகின்றனர். அய்யம்பாளையத்தில் உள்ள பெரிய அய்யனார் கோவில் புகழ் பெற்றதாகும். திண்டுக்கல் கோட்டை மாரியம் மன் கோவில் விழா அங்கு வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமலைக்கேணி முருகன் ஆலயமும் திண்டுக்கல் அபிராமி அம்மன் ஆலயமும் இம்மாவட்டத்தில் சிறப்பு பெற்ற பிற கோயில்களாகும்.
சுற்றுலாதலங்கள் :
கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக்கேணி ஆகியன இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.
முக்கிய ஊர்கள் :
கொடைக்கானல் நகரம் :
கொடைக்கானல் நகரம் கடல் மட்டத்துக்கு மேல் 7000 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கித் திண்டுக்கல் வரை தொடர்ந்து நிற்கும் மலை மேல் கொடைக்கானல் நகரம் அமைந்திருக்கிறது.
இந்த மலைக்குன்று நகரம் மதுரையிலிருந்து வட மேற்கில் 120 கி.மீ தொலைவில் உள்ளது. அம்மையநாயக்கனுர்


1987 ஆம் ஆண்டில் இங்கு தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது. ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் எனப்படும் வானபெளதிகத் துறையில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சிக் கூடம் கொடைக்கானலில் செயல்படுகிறது. ஆப்பிள் ஆராய்ச்சி நிலையமும், கொக்கோ ஆராய்ச்சி நிலையமும் இங்கு உள்ளன. கால்ப் விளையாட்டு ஐரோப்பியர் ஆடும் ஒரு வகை விளையாட்டாகும். கொடைக்கானலில் உள்ள கால்ப் விளையாட்டு மைதானம், உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கொடைக்கானல் சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வெளிநாட்டு, உள்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்தீர்க்கிறது.
கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் மாறாத பருவநிலை கொடைக் கானலில் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கு ஏப்ரல் முதல் ஜுன் வரை (அல்லது) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்கள் உகந்தவை யாகும். நவம்பரும் டிசம்பரும் கொடைக்கானலில் மழைக்காலமாகும். இங்கு கோடைக் காலத்தில் தட்பவெப்ப நிலை 11 இலிருந்து 20 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவு கிறது. குளிர்காலத்தில் 8 இலிருந்து 17 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவுகிறது.
கொடைக்கானலில் பிளம் பழங்களும், புல்வெளிகளும் நிறைய செழித்து வளர்ந்துள்ளன. பலவித வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நெடிதுயர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சாரலான கொடைக்கானலில் நடந்து சுற்றிப் பார்க்க உகந்த இயற்கை காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல்லாலும் மரத்தாலும் ஆன குடில்கள் பூந்தோட்டங்கள் மத்தியில் விளங்குகின்றன.

24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மரங்கள் சூழ்ந்த நட்சத்திர ஏரி (Star Shapdelit lake) காண கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு குளிக்கவும், மீன்பிடிக்கவும், படகில் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. 1899 இல் கட்டப்பட்ட,


மோகினி ஊற்று, பால்பொங்கி ஊற்று, கரடிச்சோலை ஊற்று, வண்ணன் ஊற்றுமுதலியனவும் சுற்றுலாப் பயணிகளின் சிந்தையைக் கவரத்தக்கன. ஆண்டுதோறும் மே திங்களில் பல நாட்களுக்கு சுற்றுலா விழாக்கள் ஏற்பாடு செய்து, கலை நிகழ்ச்சிகளும் படகுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. கொடைக்கானலுக்கு செல்ல சென்னை, மதுரை, பழனி, கோயம்முத்தூர், திண்டுக்கல், மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானலுக்கு மிக அருகே உள்ள விமான நிலையம் மதுரை ஆகும்.
கொடைக்கானல் மலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப்பூ பூக்கிறது. இதனால் தமிழ் இலக்கியத்தில் இவ்வூர் குறிஞ்சி மலை எனக் குறிப்பிடப் படுகிறது. இது செப்டம்பர் முதல் மார்ச் வரை பூக்கிறது. மூன்றடி உயரத்திற்கு வளரும் பூவால் கொடைக்கானல் மலைப்பகுதி கண்கவர் காட்சியாய் விளங்கும். இது 4500 முதல் 6000 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதியில் பூக்கும். அப்போது தாவரவியல் அறிஞர்கள் பலர் வருகை தந்து பயனுறுவர்.
கொடைக்கானல் பகுதியின் உயர்ந்த மலைகளில் காப்பியும், கோகோவும், கோதுமை யும், பார்லியும், வெள்ளைப்பூண்டும், வால்பேரியும், சர்க்கரைப் பேரியும், இங்கிலிஷ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. தாழ்ந்த மலைப்பகுதிகளில் உயரின வாழை, காப்பி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியன பயிராகின்றன. பழ வகைகளும் மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, பிளம், கொடித் திராட்சை, ஆப்பிள், செர்ரி ஆகியன பயிராகின்றன. மலைச்சரிவுகளில் நெல் சாகுபடி நடக்கிறது.
இம்மலையில் குன்னுவர், புலையர், பளியர், முதுவர், மண்ணாடியர் முதலிய இனத்தவர் கள் வாழுகின்றனர். கி.பி. இரண்டாம் நூ ற்றாண்டுக்கு முற்பட்ட சங்க நூ ல்களில் கோடை மலையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
பழனி நகரம் :
பழனி முதல்நிலை நகராட்சியாக விளங்குகிறது. பழனிமலைத் தொடர்களின் அடிவாரத்தி லிருந்து 10கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திற்கும் மேல் 350 மீட்டர் உயரத்திலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இருபது சதுர கி.மீ பரப்புக்கு மலைகளையும் குன்றுகளை யும், ஆறுகளையும் காணலாம். இரயில் நிலையம், பேருந்து வசதி சிறப்பாக உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிகின்றன காரணத்தால் தமிழ்நாட்டிலேயே வருவாய் மிகுந்த கோயிலாகப் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது.

இவ்வூரின் பழம்பதி எனச் சொல்லத்தக்கது திருவாவினன்குடி. திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் திருவாவினன் குடிக் கோயிலைப் பாடியுள்ளார். இது ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக வைத்துப் போற்றப்படுகிறது. சக்தி மலையில் இடும்பன் கோயில் உண்டு. மலையின் உயரம் 485 அடி. 480அடி உயரமுள்ள சிவகிரி மலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி கோயில் அருள்புரிகிறது. இதன் உச்சியைப் படிகள் வழியாகவும், ஒற்றையடிப்பாதை வழியாகவும், தொங்குபால மின்னுர்தி வாயிலாகவும் சென்றடையலாம். இம்மலை இரண்டு கி.மீ தொலைவிருக்கும். இம்மலையிலிருந்து வீசும் சஞ்சீவிக் காற்று பல நோய்களைக் குணமாக்குகிறது.
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இங்குள்ள சித்தனாதன் பரிமளவிலாஸ் நான்கு தலைமுறைகளாக பஞ்சாமிர்த தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாழைப்பழம், சர்க்கரை, பேரீச்சம்பழம், தேன், கற்கண்டு, கிஸ்மிப் பழம், நெய், ஏலாக்காய் இவற்றைக் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கிறார்கள் தினசரி 300 கிலோ பஞ்சாமிர்தம் இவர்கள் விற்பனை செய்கிறார்கள். பங்குனி உத்திர சீசனில் விடிய விடிய நடக்கும் வியாபாரத்தில் ஒரே நாளில் 5000 கிலோ பஞ்சாமிர்தம் விற்பதாக சொல்கிறார்கள். இது தவிர, தமிழ்நாட்டில் கோவில் தேவஸ்தானமே பஞ்சாமிர்தத் தயாரிப்பில் இறங்கியிருப்பது பழனியில் மட்டுமே. முப்பது உருவங் களாகவே மலையின் மேல்பகுதியில் கோவிலை ஒட்டி பஞ்சாமிர்தத் தயாரிப்பு வேலை கள் நடக்கின்றன. முன்பு கைகளினால் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் தற்போது மிஷினில் தயாரிக்கிறார்கள். பஞ்சாமிர்த கலவை விகிதத்தை ரகசியமாக வைத்திருக் கிறார்கள். வருடத்திற்கு 75 இலட்சம் பக்தர்கள் வரை பழனி முருகனை தரிசிக்க வருவதால், தேவஸ்தானத்திலேயே ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒண்ணேகால் கோடி ரூபாயிற்கு பஞ்சாமிர்த விற்பனை நடக்கிறது. பழனி பஞ்சாமிர்தமும் திருநீறும் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
திண்டுக்கல் நகரம் :
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராய் இது விளங்குகிறது. இருபெரும் தேசிய
நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இவ்வூரருகே சந்திக்கின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் செல்லுகின்றன. டவுன்பஸ் வசதியும் மிகுதி. திருச்சி-மதுரை, திண்டுக்கல்-பாலக்காடு, திண்டுக்கல்-கோயம்புத்தூர் இரயில் பாதைகள் சந்திக்கும் இடமாக திண்டுக்கல் விளங்குகிறது.
சிறுமலையின் அடிவாரம் 11 கி.மீ தொலைவில் உள்ளதாலும், கொடைக்கானல் 25கி.மீ தொலைவில் உள்ளதாலும் திண்டுக்கல்லில் வெப்பத்தின் தாக்கம் தெரிவதில்லை. ஆனால் இங்கு போதிய அளவு மழை பெய்வதில்லை. நகரைச் சுற்றி தாழ்வான மலைகளே சூழ்ந்திருக்கின்றன. மலைக்கோட்டை மீது நடந்து சென்றால் சுகமான காற்றை அனுபவிக்கலாம்.
இவ்வூரிலுள்ள மலை ஒரே கல்லால் ஆனது. திண்டு போல் அரைவட்ட வடிவமானது. இந்த ஊர் இங்குள்ள மலையால் இப்பெயர் பெற்றது. தேனி, பொள்ளாச்சி, மணப்பாறை போன்ற வணிக நகரங்களுக்கு மத்தியில் இருப்பதால், திண்டுக்கல் பெரிய வணிகச்சந்தையாக விளங்குகிறது. வேடச்சந்தூர்ப் புகையிலை, சின்னாளப்பட்டி நார்பட்டுத் துணிகள், கோடை மலையின் சில விளைபொருட்கள் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து கடலைப் புண்ணாக்கு ஏற்றுமதியாகிறது.
ஆந்திராவிலிருந்து வரும் சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்துக்கும் திண்டுக்கல்லே தலைச் சிறந்த விற்பனையிடம். சிறுமலை வாழைப்பழமும் மிகுதி. தெற்கேயுள்ள பல ஊர் களுக்கும் இங்கிருந்துதான் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
1866 இல் திண்டுக்கல் நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. முஸ்லீம்களும், கிறிஸ்து வர்களும் பெரும்தொகையினராக இங்கு வாழ்கின்றனர். இரண்டுக் கல்லூரிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், தொழிற்பள்ளி இவற்றுடன் காந்திக்கிராமத்தில் உள்ள கல்வி நிலையங்களும் கல்விப் பணியாற்றி வருகின்றன.
திண்டுக்கல்லில் சிவன் கோயில்களும், பெருமாள் கோவில்களும் உள்ளன. இராமலிங்க சுவாமி கோயிலும் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருவிழாவில் தீச்சட்டி ஏந்துவதும், சுற்றுவதும் சிறப்பாக நடைபெறும். 1729 இல் கட்டப்பட்ட 'சர்ச் ஆப் அவர் லேடி ஆப் டோலர்ஸ்' மற்றும் 1872 இல் கட்டப்பட்ட 'புனித ஜோசப் சர்ச்' ஆகியன குறிப்பிடத்தக்க கிறிஸ்துவ தேவாலயங்கள். கரூர் சாலையில் பெஸ்கி பாதிரியார் பெயரால் இயேசு சபையாரின் கல்வி நிலையம் உள்ளது.
தொழில் வளம் நிறைந்த திண்டுக்கல்லில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுருட்டுச் சுற்றுதல் சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. கேரளத்திற்குப் பெரிய அளவில் வாசனைப் புகையிலை ஏற்றுமதியாகிறது. இங்குள்ள புகையிலைத் தொழிற் சாலைகளில் குறிப்பிடத்தக்கது ஸ்பென்சர் கம்பெனி.
நூல் ஆலைகள், பருத்திக் கொட்டையை நீக்கிப் பஞ்சு எடுக்கும் ஆலைகள், கடலைஎண்ணெய் ஆலைகள், தோல் பதனிடுதல், தோல் செருப்புகள் தயாரித்தல் முதலியன முக்கியப் பெரும் தொழில்களாக நடைபெறுகின்றன. ஜரிகை வியாபாரத்திற்கும் திண்டுக்கல் பிரசித்திப் பெற்றது.
பூட்டுத் தொழிலைக் கொண்டு தென்னிந்தியாவின் அலிகார் எனப் புகழ் பெற்றது திண்டுக்கல். விதவிதமான நவீன பூட்டுகள் சந்தைக்கு வந்து விட்டாலும், திண்டுக் கல்லிலும், திண்டுக்கல்லை அடுத்துள்ள நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது. இங்கு ஆறிலிருந்து எட்டு லீவர்கள் வரை உள்ள மாங்காய் பூட்டுகள் பிரசித்தம். அதில் பக்கவாட்டில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுர சைஸ் பூட்டு, அலமாரிப் பூட்டு, டிராயர் பூட்டு என்று பல விதமான பூட்டுகள் தயாராகின்றன.
இதில் கதவுடன் பொருத்தக் கூடிய மணிப்பூட்டு இங்கு மட்டுமே தயாராகிறது. எட்டு இன்சு வரை உள்ள இந்தப் பூட்டு ஒவ்வொரு முறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச்சத்தம் வரும் ஐந்திலிருந்து பத்துமுறை மணியடிக்கும் பூட்டுகளும் உண்டு பித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சுப் பூசின பூட்டுகளும் அதிகம் விற்பனை யாகின்றன. இப்பூட்டுகள் இங்கு வரிசையாக உள்ள மொத்த விற்பனைக் கடைகளி லிருந்து தமிழகம் முழுவதற்கும் கேரளாவிற்கும் வினியோகமாகின்றன. அரசினரின் பூட்டுத் தொழிற்சாலை ஒன்று 1857 முதல் நடைபெற்று வருகிறது.
பூட்டுத் தொழிலின் இன்னொரு வளர்ச்சியாக இங்கு இரும்புப் பெட்டிகள் தயாராகின்றன. அளவு சிறிய வடிவிலிருந்து ஆளுயரம் வரை வகை வகையான இரும்பு பெட்டிகள். இவற்றை நகர்த்தவே இரண்டு மூன்று ஆட்கள் தேவைப்படும் அளவில் கனம். பழங்கால பாணியுடனுடன் வடிவமைப்புடனும் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர கோவில்களுக்கான பெரிய உண்டியல்கள், அதிக எடையுள்ள ஏழு சாவிகள் வரை உள்ள சேப்டி லாக்கர்கள் ஆகியன இங்கு செய்யப்படுகின்றன. இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பெரியது ரத்னா அன்ட் கோ.
சிங்கப்பூர் இலங்கை வரை பிரபலமாகியிருந்த திண்டுக்கல் பூட்டுகளும் இரும்புப் பெட்டிகளும் தற்போது வியாபாரப் போட்டிகள் அதிகமாகிப் போனதில் சற்றுப் பின் தங்கி இத்தொழில் நசிந்து வருகிறது. திண்டுக்கல்லில் திங்கள் கிழமைதோறும் சந்தை கூடும். இங்கிருந்து பழனி 60 கி.மீ. கொடைக்கானல் 96 கி.மீ. கொடைரோடு 22 கி.மீ மதுரை 65 கி.மீ. திருச்சி 96 கி.மீ.
நிலக்கோட்டை :
இது வட்டத்தலைநகராய் விளங்குகிறது. பழைய திண்டுக்கல் சீமையில் 26 பாளை யங்களும் இது ஒன்றாய்த் திகழ்ந்தது. இங்கு இடிபாடுகளுடன் காணப்படும் கோட்டை கூளப்ப நாய்க்கன் கோட்டை எனப்படுகிறது. இங்குள்ள அகோபில நரசிம்மர் கோயில் கூளப்பநாய்க்கன் பின்னோர்கள் கட்டியது. தொடர்ந்து மூன்றாண்டுகள் வெள்ளையரை எதிர்த்த பெருமை இப்பாளையக்காரர்களுக்கு உண்டு.
அம்மைய நாயக்கனுர் :
நிலக்கோட்டையிலிருந்து 6 கி.மீ கிழக்கேயும் மதுரையிலிருந்து 42 கி.மீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது. இங்கிருந்து பூ, திராட்சை, தக்காளி முதலியன ஏற்றுமதியாகின்றன. கேழ்வரகு, சோளம், கடலை முதலியன செம்மண் பகுதிகளில் பயிராகின்றன. 1736 இல் இவ்வூரில் நடைபெற்ற போரினால் நாயக்கர் ஆட்சிக்கும், சந்தா சாகிப்பின் வீழ்ச்சிக்கும் வழி ஏற்பட்டது.
அம்மாப்பட்டி :
கிறிஸ்துவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இங்கு அமெரிக்க மிஷனும், தென்னிந்திய திருச்சபையும் செயல்படுகின்றன.
காட்டு நாயக்கன்பட்டி :
இவ்வூரில் வாழும் தொட்டிய நாயக்கர்கள் கிராமியக் கலையில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் தேவராட்டம், சேவையாட்டம் முதலிய கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். ராமர்கதை, பாரதக்கதை முதலியவற்றை தெலுங்கிலும் தமிழிலும் சொல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் செண்பகராயப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மேட்டுப்பட்டியில் சித்தர்மலையும், ஊர் எல்லையிலுள்ள பேரணையும், பஞ்சபாண்டவர் பாதமும், கன்னிமார் கோயிலும் காணத்தக்கவை.
வத்தலகுண்டு :
சிறுநகரமான இது நிலக்கோட்டைக்கு மேற்கே 11 கி.மீ தொலைவிலுள்ளது. மஞ்சளாறு வேளாண்மைக்கு உறுதுணையாக உள்ளது. தரமான அரிசிக்கு வத்தலகுண்டு பெயர் பெற்றது. மற்றும் வாழை, தென்னை, தக்காளி ஆகியன இவ்வூரில் பயிராகின்றன. வெற்றிலை மிகுதியாக பயிரிடப்பட்டு, பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. வெற்றிலைக் குண்டு என்பது வத்தலகுண்டு என்று வழங்கியது.
1760 இல் ஹைதர் அலிக்கும் முகமது யூசுப்புக்கும் இங்கு பெரிய போர் நிகழ்ந்தது. 1885 இல் ஊராட்சி மன்றம் ஏற்பட்டது. இங்கு தெலுங்கு பேசுவோர் மிகுதியாக வாழ்கின்றனர். ஏராளமான நிலப்பரப்பில் மல்லிகை விளைகிறது. கொடைக்கானல் மலைக்குச் செல்ல இது வாயிலாகத் திகழ்கிறது.
தும்மலப்பட்டி :
சக்கிலியாறு,மஞ்சளாறு ஓடைகளுக்கிடையில் உள்ள இவ்வூர் வத்தலகுண்டிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ளது. நெல், கரும்பு விளைச்சல் மிகுந்த சிற்றுர். பெருந்தொகை யினராக யாதவர்களும், கவுண்டர்களும் வசிக்கின்றனர்.
பட்டிவீரண்பட்டி :
செல்வச் செழிப்பான வணிக நகரம். காப்பிக் கொட்டை வறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கூட்டுறவுத் தொழிலிலும் தமிழகத்தில் முன்னணியில் நிற்கிறது. ஏலக்காய் வணிகமும் சிறப்புற நடக்கிறது. பருவகாலங்களில் அன்றாடம் இலட்ச ரூபாயிற்கும் அதிகமான மதிப்புடைய பன்னீர் திராட்சை, மலைவாழைப்பழம் முதலியன கூடைகளிலும் ஓலைப்பெட்டிகளிலும் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு நாடார்கள் அதிகத் தொகையினராக உள்ளனர். மேனிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
தாடிக்கொம்பு :
திண்டுக்கல்லுக்கு வடக்கே 8 கி.மீ தொலைவில் இவ்வூர் குடகனாற்றின் கரையில் அமைந்துள்ளது. விசயநகர ஆட்சியில் தெலுங்கர்கள் மிகுதியாக இவ்வூரில் குடியேறினர். தாலவனம் என்பது இதன் பழம் பெயர். தாடிக்கொம்பு என்று தெலுங்கர் பெயர் சூட்டினர் (தாடி-பனைமரம், கும்பு-கூட்டம்). இவ்வூர் செளந்தரராசப் பெருமாள் கோயிலைப் போல் திண்டுக்கல் பகுதியில் வேறு கோயில் கிடையாது. நாற்புறமும் தேரோடும் வீதிகள் அமைத்து நெடிதுயர்ந்த கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது.
சிறுமலை :
திண்டுக்கல்-நத்தம் சாலையில் 6 கி.மீ தொலைவு சென்று மலை மீது போடப்பட்டுள்ள சாலையில் 16 கி.மீ பயணம் செய்து சிறுமலையை அடையலாம். ஹனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற போது அதில் ஒரு சிறுபகுதி திண்டுக்கல்லுக்கு அருகே கீழே விழுந்து, அதன் பெயரே சிறுமலை ஆயிற்று என்பர். மலையில் சந்தானவர்த்தின ஆறு உற்பத்தி ஆகிறது.
மலையின் உயரம் 1200 மீட்டர். அகலம் 20கி.மீ. இதனைச் சுற்றிலும் புதூர், பமையூர், சக்கிலிப்பட்டி, அரளிக்காடு, தவிட்டுக்கட்டை, தாழைக்காடு, வேளாண்பண்ணை ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இங்கு நாயுடு, சக்கிலியர், பிள்ளைமார் மற்றும் பளியர் என்ற பழங்குடியினர் வாழுகின்றனர். ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது. வடகிழக்குப் பருவக்காற்றால் மழை பெய்கிறது. இம்மலைக் காற்று காசநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.
வாழை, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை முதலியன மிகுதியாக விளைகின்றன.காப்பித் தோட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படுகின்றன. மேலும் அதிக அளவில் சாமை, தினை போன்ற தானியங்கள் பயிராகின்றன. காடுகளும் அடர்த்தியாக உள்ளதால், பல வகை மரங்களும் வளர்ந்தோங்கியுள்ளன. வெட்டுக் காயத்தைக் குணப்படுத்தும் 'லெமன் கிராஸ்' என்னும் புல் இங்கு அதிகமாய் விளைகிறது.
சின்னாளப்பட்டி :
இவ்வூரிலிருந்து மதுரை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பழனிமலை, சிறுமலை இவற்றிற்கு இடையில் பள்ளத்தாக்கில் இவ்வூர் அமைந்துள்ளது. நெசவுத் தொழில் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. நார்ப்பட்டு நெசவு மட்டும் சுமார் 12,000 தறிகளில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விற்பனையாகும் சரக்கின் மதிப்பு மூன்று கோடிக்கும் மேல் ஆகும். இங்குத் தயாராகும் சேலைகளும் வேட்டிகளும் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
அகரம் :
தாடிக்கொம்புக்கு அருகில் உள்ள இச்சிற்றுரில் காழங்குடை என்னும் ஒரு வகைக் குடை மிகுதியாக விற்பனையாகிறது. புரட்டாசியில் நடைபெறும் மாரியம்மன் திருவிழா வில் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுகிறார்கள். இதற்கென விசேஷ பேருந்துகள் நிறைய விடப்படுகின்றன. திருவிழாவன்று பெரும்பாலும் மழை பெய்யும். விழா இரவில் அரிசந்திரா நாடகம் நடத்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அய்யம்பாளையம் :
கோயிலில் குடிகொண்டிருக்கும் அய்யனார் பெயரால் இவ்வூர் வழங்குகிறது. இது பட்டி வீரன்பட்டி எல்லையில் அமைந்துள்ளது. தாண்டிக்குடி மலையும், மருதா நதியும் ஊரை அழகுப்படுத்துகின்றன. பருத்தி, தென்னை, மாங்கனி, வாழை, முதலியன இவ்வூரின் முக்கிய விளைப் பொருட்களாகும். எலுமிச்சை, ஆரஞ்சு, ஏலக்காய், காப்பி முதலியன இங்கு பெருவாரியாக விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் சமஅளவில் உள்ளனர். சித்தையன் கோட்டை என்னும் ஊரிலுள்ள அணையிலிருந்து திண்டுக்கல் நகரம் குடிநீர் பெறுகிறது.
போடிக்காமன்வாடி :
இது ஒரு சிற்றுர். இங்கிருந்து சம்பங்கி, கனகாம்பரம், சிவந்தி, செண்டு, மல்லிகை, மருகு, அரளி ஆகியப் பூக்களும், தக்காளியும், நிலக்கடலையும் ஏற்றுமதி செய்வதால் இவ்வூர் புகழ்பெறுகிறது.
அம்பாத்துறை :
இரு நூ ற்றாண்டுகளுக்கு முன்பு பாளையமாகக் சிறந்திருந்தது. இரயில் நிலையம், கோழிப்பண்ணைகள், காந்தி கிராமம் ஆகியவற்றால் இவ்வூர் பிரபலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திற்கு மேல் இவ்வூர் இருப்பதால் சிறந்த சுகவாசஸ்தலமாகவும் விளங்கு கிறது.
காந்திகிராமம் :
1947 ஆம் ஆண்டில் திருமதி செளந்தரம் இராமச்சந்திரன் இவ்வூரைப் படிப்படியாக ஏற்படுத்தினார். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சூழலில், சிறுமலையின் அடி வாரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராமியப் பல்கலைக் கழகமாக வளர்ச்சிப் பெற்றுள்ளது. இரயில் பாதையின் இருபக்கமும் காந்திக் கிராமக் கட்டிடடங்கள் காணப் படுகின்றன. சர்வோதய முறையில் கூட்டுறவு வங்கியும் நடத்தப்படுகிறது.
பஞ்சம்பட்டி :
வெள்ளேடு இரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிற்றுர். காந்தி கிராமத்திற்கு வடமேற்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. வெற்றிலைக்கொடிக்கால்கள் இங்கு அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. சிவந்தி, கனகாம்பரம் முதலிய பூக்களும், கரும்பு, நெல், வெங்காயம் சோளம், மணிலா, கம்பு முதலியனவும் விளைவிக்கப்படுகின்றன.
செம்பட்டி :
இது வளம் கொண்ட செம்மன் பூமியாதலால், இங்கு பெருமளவில் திராட்சை பயிராகிறது. இவ்வூரில் மின்சார நிலையம் அமைந்துள்ளது.
சித்தரேவு :
சித்தர்கள் இங்கு வாழ்ந்ததால் இப்பெயர் வழங்குகிறது. உடல் உறுப்பு குறைந்தவர் களுக்கு மறுவாழ்வு இல்லம் இயங்குகிறது. திண்டுக்கல்-அய்யம்பாளையம் சாலையில் இதுவே முக்கியமான ஊர்.
வக்கம்பட்டி :
சின்னாளம்பட்டியிலிருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது. ஒயில் கும்மி ஆட்டக்காரர்கள் இவ்வூரிலும் சுற்றுப்புறங்களிலும் வாழுகின்றனர். கிறிஸ்துவர்களாக உள்ளவர்கள் வேளாங்கண்ணி மாதாவைப் பற்றி பாடல்களை எழுதி ஆகிறார்கள்.
பன்றிமலை :
திண்டுக்கல்லுக்கு மேற்கில் உள்ள இக்குன்றுகள் பன்றிநாடு என்று கூறப்படுகின்றன. இப்பகுதிகள் காப்பித் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் நிறைந்து வளம் கொழிக்கின்றன. இவ்வூரினரான பன்நறிமலை சுவாமிகள் இறையருளோடு பல்கலை அறிஞராக எட்டுத்திக்கும் புகழ்பெற்று விளங்கியவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் பன்றிமலை சுவாமிகளின் ஆசிரமம் உள்ளது.
கன்னிவாடி :
திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் மலை வளம் மிகுந்ததாகும். மலையடிவாரத்தில புன்செய் பயிர்கள் விளையகின்றன. மலைப்பகுதியில் காடுகளும், காப்பித் தோட்டங்களும் உள்ளன. வாழை, பலா, திராட்சை, ஆரஞ்சுத் தோட்டங்களும் உள்ளன. புகையிலை விளைச்சலும் மிகுதி. இப்பகுதியில் ரெட்டியார்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இது செம்பட்டியிலிருந்து ஒட்டன் சத்திரம் செல்லும் வழியில் உள்ளது.
கரிசல்பட்டி :
கன்னிவாடிக்கு அருகே உள்ள இச்சிற்றுரில் கத்தோலிக்கரும் வன்னியரும் அதிகமாக உள்ளனர். திராட்சை, வெங்காயம், பருத்தி, மிளகாய் ஆகியன ஏராளமாய் பயிராகின்றன. நவதானியங்களின் விளைச்சலும் மிகுதி.
வேடசந்தூர் :
இது குடகனாற்றின் கரையில் இருக்கிற சிறு நகரம். திண்டுக்கல்-கரூர் சாலையில், பழனியிலிருந்து வடமதுரைக்குச் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. வேடர்களின் சந்தை இந்த ஊரில் கூடிய காரணத்தால் வேட சந்தையூர் என்றாகி, பின் வேடசந்தூர் என மருவி வழங்குகிறது. புகையிலை விளைச்சலில் வேடசந்தூர் சிறப்பான இடத்தை வகிப்பதால், இந்திய அரசின் புகையிலை ஆராய்ச்சிக் கூடம் இங்கு அமைந்துள்ளது. இங்கு கோட்டை ஒன்றின் இடிபாடுகள் காணப்படுகின்றன. அக் கோட்டை அருகே தர்கா ஒன்றும் உள்ளது.
காசிப்பாளையம் :
வேடசந்தூரிலிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூரில் வேளாண் தொழில் செய்யும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நெடுஞ்சாலையில் காந்தியடிகள் பெயரால், கிராமக் கைத்தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்பட்டியில் பாண்டிய காலத்துப் பெரு மாள் கோவில் இருக்கிறது. இது காசிப் பாளையத்திற்கு தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.
ரங்கமலை :
கல்வார்பட்டிக்கும் பள்ளப்பட்டிக்கும் இடையே ரங்கமலை உள்ளது. இப்பகுதியின் மலை கூம்பு வடிவமாகக் காணப்படுகிறது. மிக உயரமானது. மலையின் உச்சியில் விளக்குக் கம்பம் உள்ளது. அதன் கீழே பாண்டியர் காலத்துச் சிவன் கோவில் விளங்குகிறது. செங்குத்தான இம்மலை மீது ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும்
நூ ற்றுக்கணக்கானோர் மலைமீது ஏறி இறைவனைத் தரிசித்து திரும்புவர். இம்லையில் மூலிகைகள் அதிகமாதலால் சிலர் தேக நலம் கருதி மலையில் சிலநாள் தங்கிச் செல்வதும் உண்டு.
வடமதுரை :
இவ்வூர் திண்டுக்கல்லுக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒன்றியத் தலைநகராய் விளங்குகிறது. இரயில் நிலையம் இருக்கிறது. இங்குள்ள செளந்தரராச பெருமாள் கோயில் புகழ்பெற்றது. ஆடிப் பெளர்ணமி தினத்தில் தேர்த்திருவிழா நிகழும். இவ்வூர் மாட்டுச் சந்தைக்குப் பெயர் பெற்றது. இப்பகுதி செம்மண் பூமியாதலால், கேணி வசதிப் பகுதிகளில் தோட்டப் பயிர்களும், நெல்சாகுபடியும் நடைபெறுகின்றன.
துவரை, வேர்க்கடலை இரண்டும் பயிராகின்றன.
நெய்க்காரப்பட்டி :
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜமீன்தார்களான நாயக்கர்கள் இங்கு தொன்றுத் தொட்டு பயிர்த்தொழிலில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களால் பராமரிக்கப்படும் மாட்டுப் பண்ணைகள் காங்கேயம் பண்ணைக்கு நிரானவை.
பாலசமுத்திரம் :
அகோபில வரதராஜப் பெருமாள் கோவில், நெய்க்காரப்பட்டி ஜமீனின் அரண்மணை,செழிப்பான மண்வளம் இவற்றால் புகழ் கொண்ட இவ்வூரை வாலசமூத்திரம் எனக் குறிப்பிடுவர். இது பழனியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது வாழை, ஆரஞ்சு, காப்பித் தோட்டங்கள் அதிகமாகத் தென்படுகின்றன. இங்கிருந்த ஒரு கோட்டை ஹைதர் அலியால் சேதமுற்றது. இவ்வூர் துப்பட்டி நெசவுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது.
கோதைமங்கலம் :
பழனிக்கு வடமேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் பழனியைச் சுற்றியுள்ள எட்டு மங்கலங்களுள் இது முதலாவதாகக் கருதிப் போற்றப்படுகிறது. விஜயதசமி அன்று திருவிழா நடைபெறுகிறது. பழனி தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தி இவ்வூருக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வர். பழனிக்குச் செல்லும் கோதை வாய்க்கால் அருகிலுள்ள கல்லினை மயிலாடும் பாறை, பேகம் மயிலுக்குப் போர்வை வழங்கிய இடம் இதுவென்றும் கூறுவர்.
சின்னக்கலயம்புத்தூர் :
சண்முகா நதிக்கரையில் உள்ள இவ்வூர் பழனிக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. பத்தொன்பதாம் நூ ற்றாண்டில், ஏராளமான ரோம் நாட்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் இவ்வூரில் தோன்டி எடுக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம் :
தெலுங்கு பேசும் ஒட்டச்சாதியினரின் சத்திரத்தை ஒட்டி அமைந்த ஊர் ஆதலால் ஒட்டன்சத்திரம் ஆயிற்று. தாராபுரம், பழனீ, திண்டுக்கல், மதுரை ஆகிய நகரங் களுக்குச் செல்லும் சாலையில் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. ஏராளமான தரகு மண்டிகள் உள்ளன. வெங்காயம், வேர்க்கடலை, தக்காளி இவை இங்கு சிறப்பு விற்பனை பொருட்கள் ஆகும். கிறிஸ்துவ பெலோஷிப் மருத்துவமனை ஒன்று இங்கு இயங்குகிறது.
விருப்பாட்சி :
சிவனுக்குரிய விருப்பாட்சன் என்ற பெயரால், விருப்பாட்சி எனப்படுகிறது. பழனி
மலையின் அடிவாரத்தில் ஒரு காட்டாற்றின் கரையில் உள்ளது இவ்வூர். இங்கிருந்து 2கி.மீதொலைவில் தலைக்கூற்று, கோடரி என்னும் அருவிகள் உள்ளன. பஞ்சாமிர்தம் தயாரிக்க உதவும் ஒருவகை வாழைப்பழம் விருப்பாட்சியில் பயிராகிறது. வியாழக் கிழமை தோறும் நடக்கும் சந்தையில் நாரத்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா முதலிய பழங்களும், காய்கறிவகைகளும் ஏராளமாகக் குவிக்கப்படுகின்றன.
அத்திக்கொம்பு :
வருடம்தோறும் பங்குனியில் இங்கு மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.
கீரனுர் :
பழனிக்கு வடக்கே 15கி.மீ தொலைவில் உள்ளது. பாதி மக்கள் தொகையினர் முஸ்லீம்கள். சிவன் கோயிலில் சோழர்கால கல்வெட்டு இருக்கிறது. பொள்ளாச்சி, நீலகிரி பகுதிகளிலிருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு வாணிகம் சிறப்பாக நடைபெறுகிறது. பதினான்காம் நூ ற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஊருக்குச் சிறப்பைத் தருகிறது.
கொழக் கொண்டான் :
வள்ளல் குமணன் ஆட்சி செய்த இடமெனக் கருதப்படுகிறது. இதன் இயற்பெயர்
கொழுமங்கொண்டான்.
பெருமாள் மலை :
இப்பகுதியில் சுவைமிகுந்த ஆரஞ்சுப் பழங்கள் விளைகின்றன.
பண்ணைக்காடு :
இவ்வூர் வத்தலக்குண்டிலிருந்து கோடை மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, சிட்ரஸ் ஆகிய மரங்கள் அடர்ந்த சோலைகளும், வாழைத் தோட்டங்களும் இவ்வூருக்குச் செழுமை சேர்க்கின்றன.
பூம்பாறை :
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம். இவ்வூர் குழந்தை வேலப்பர் கோயில் பிரசித்திப் பெற்றது. முருகனது செப்புத் திருமேனி 12 ஆம் நூ ற்றாண்டைச் சார்ந்தது.
செண்பகனுர் :
கொடைக்கானல் நகரின் புறநகர்ப் பகுதியில் சற்றுத் தாழ்வான நிலையில் அமைந்துள்ள இவ்வூரின் அமைதியும், கண்கவர் இயற்கை காட்சிகளும் நெஞ்சை அள்ளும். சேசு சபையினர் நடத்தும் அருட்காட்சியம் ஒன்று இவ்வூரில் உள்ளது. கொடைமலையைப் பற்றி நன்றாக அறிய வேண்டுமானால் இக்காட்சி கட்டத்தை அவசியம் பார்த்தாக வேண்டும். கத்தோலிக்க தேவாலயம், தோல் தொழிற்சாலை, மருத்துவ நிலையம், தச்சுப்பட்டறை, காய்கறித் தோட்டம் ஆகியன இங்குள்ளன.
நத்தம் :
இச்சிறு நகர் மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் வாணிகம் பெரிய அளவில் நடைபெறுகிறது. ஞாயிறுதோறும் சந்தை கூடுகிறது. விறகு, பச்சை மிளகாய் முதலியன இங்கிருந்து பல ஊர்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. பதினெட்டாம் நூ ற்றாண்டில் நத்தத்தில் ஒரு கோட்டை இருந்தது. இங்கு கட்டப்பட்ட நத்தம் ஜமீன் தார்களின் அரண்மணை இடிந்த நிலையில் இன்றும் காட்சி தருகிறது. இவ்வூரில் நடைபெற்ற போரில் ஹைதர் அலி தோல்வி அடைந்து திரும்பினார். இங்கு கைலாயநாதர் சிவன் கோவிலும், கத்தோலிக்கக் கல்வி நிலையமும் உள்ளன.
வெம்பரளி :
மதுரைக்கும் இவ்வூருக்கும் 22 கி.மீ. தொலைவு. அழகர் கோவிலிலிருந்து 8 கி.மீ இவ்வூரில் கொய்யாவும், நீலகிரித் தைலமரமும் மிகுதி.
கோட்டையூர் :
இவ்வூர்க் காட்டுக்கு ஆறுமாகானங்காடு என்று பெயர். இங்கு வெண்மையான பாறைப் படிவங்கள் உள்ளன. இதிலிருந்து ஆபரணங்களில் பதிக்கத்தக்க கற்கள் தயாரிக்கின்றனர்.
லிங்கவாடி, பரளி :
மாவு அரைக்கும் ஆலைகள் மிகுதியான இவ்வூரில் மாம்பழம், கொய்யாப்பழம் இவற்றின் தோட்டங்கள் அதிகம். இவை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் படுகின்றன.
செந்துரை :
நத்தத்திற்கு வடக்கே 21 கி.மீ தொலைவில் உள்ளது. புன்செய் வளமிக்கது. மலை வட்ட வடிவமாகக் காணப்படுகிறது. மா, பலா, கொய்யாத் தோப்புகள் வளமாக விளங்கு கின்றன. மலை மீது அணைக்கட்டித் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் சற்று உயரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிறிய அருவி ஒன்று பாய்கிறது.
பழங்குடிகள் :
திண்டுக்கல் மாவட்டத்தில் பலநூ ற்றாண்டுகளாக பழங்குடியினர் பலரும் வாழ்ந் துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தகுந்த பிரிவினராக பளியர், முதுவர், புலையர் முதலியோர் காணப்படுகின்றனர்.
பளியர் :
இவர்கள் பழனிமலைத் தொடரின் உயர்ந்தப் பகுதிகளில் வாழ்கின்றனர். சிதைந்த தமிழைப் பேசுகின்றனர். இவர்களது உச்சரிப்பை புரிந்து கொள்வது சிரமம். பழனீ மலையின் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது. இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுூகக பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடியவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். காய், கனி, தேன், தானியங்களை யும் உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாளை இடுக்கு களிலும் குகைகளிலும் வாழ்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்களை அடையாளம் காணலாம்.
முதுவர் :
பழனி மலைத்தொடரில் வாழ்கிறார்கள். பாண்டிய நாட்டுத் தமிழர் எனச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் மீனாட்சியம்மையை வணங்குகின்றனர். காடுகளின் ஊடே வாழ்வது இவர்தம் இயல்பு. வேட்டையாடுவதிலும், கம்பு, கேழ்வரகு, ஏலக்காய் ஆகிய வற்றைப் பயிர் செய்வதிலும் தேர்ந்தவர்கள். முதுவர் பேச்சுத் தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று.
புலையர் :
பழனி மலைத் தொடரில் புலையர் மிகுதியாக வாழுகின்றனர். வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலை நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.
மீன்வளம் :
திண்டுக்கல் மாவட்டத்தில இருக்கும் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களிலும் மீன்வளம் சிறந்து காணப்படுகிறது. அநேக ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், குளிர் நீரோடைகள் இம்மாவட்டடத்தில் உள்ளன. இவற்றில் மிக வேகமாக வளரக் கூடிய மீன் இனங்களான காட்லா, ரோடு, மிர்கால் மற்றும் சாதா கொண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மீன்வளப் பணிகளுக்காக தேர்ந்தெடுத் திருக்கும் நீர்த்தேக்கங்கள் வரதமாநதி அணை, பெரிய கோம்பை அணை, பாலாறு,
புரந்தலாறு அணை முதலியனவாகும்.
பாலாறு-புரந்தலாறு அணையில் ரூ.13.2 இலட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மீன் பண்ணையில் 2 சிறிய மீன் குளங்களும், 8 மீன் குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 12 நர்சரி குளங்களும் கட்டப்பட்டுள்ளன. பழனியில் மீனவர்கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் துறை ஏரிகளில் மீன்பிடிப் பதற்கு பங்கு முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வேளாண்மை :
வைகை ஆறு, முல்லையாறு ஆகிய பெரிய ஆறுகளும், மணலாறு, இரவங்கல் ஆறு, கலிக்க வையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக் குடியாறு பெருந்தலாறு, குதிரையாறு, கூலிளங்காறு, முத்துக் கோம்மையாறு, வராகநதி, பாம்பாறு ஆகிய ஆறுகளும் திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மையில் வளம் செழிக்க உதவுகின்றன.
வைகை அணையும், பெரியாறு அணையும் இம்மாவட்ட வேளாண்மை பாசனத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 2,74,707 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகும். நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, சிறுதிணைகள், நிலக்கடலை, பூக்கள், ஆமணக்கு, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, புகையிலை, கரும்பு முதலியன விளைவிக்கப்படுகின்றன.
கரும்பு உற்பத்தி பழனி வட்டத்தில் அதிகமாய் நடைபெறுகிறது. கொடைக்கானல் மலையில் பல வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொடைக்கானல்,நிலக்கோட்டை, திண்டுக்கல் வட்டங்களில் பெருமளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவையும் இம்மாவட்டத்தில் அதிகமாய் விளை கின்றன. வெற்றிலை பயிரிடுவதில் வத்தலக்குண்டு இம்மாவட்டத்தில் முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மலர்களில் பெருமளவு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தேகிடைக்கின்றன. மலர் உற்பத்தியில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 1757 ஹெக்டேரில் மலர்களை இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தியாகும் பூ வகைகளில் மல்லிகைப்பூ முதலிடம் வகிக்கிறது. கொடைரோடு, அம்பாத்துறை ஆகியவை மலர் உற்பத்தியில் குறிபிடத்தக்க இடங்கள். நாள்தோறும் ஆயிரக்கணகான கூடைகளில் இந்தியாவெங்கும் பூக்கள் இரயில், விமானம் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. பெருமளவு மலர்கள் உற்பத்தியால் இம்மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என வழங்கப்படுகிறது.
சில இடங்களில் கருங்கண்ணிப் பஞ்சும், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளில் கம்போடியாப் பஞ்சும் விளைகின்றன. வேடசந்தூரில் புகையிலை அதிகமாய் விளகிறது. கொடைக்கானல் மலையில் அரசின் ஆதரவோடு நூறு ஏக்கங்ா பரப்பில் கோக்கோ பயிரிடப்படுகிறது. ஏலக்காய் கேரளத்திற்கு அடுத்தப்பபடியாக இம்மாவட்டத்தில் அதிகமாய் விளைகிறது. பழனி மலையின் தொடர்ச்சியே ஏலமலை எனப்படும். இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏலக்காய் வேளாண்மையும் ஒரு காரணமாகும். பழனி மலைத்தொடரில் பழனி, பட்டிவீரன்பட்டி, சிறுமலை போன்ற பகுதிகளில் காப்பி பெருமளவில் விளைகிறது. இங்கு தேயிலையும் ஓரளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டி வீரன்பட்டியிலிருந்து திராட்சைப் பழங்களும் பதியன்களும் ஏராளமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப் படுகின்றன. மேலும் பன்னீர் திராட்சையும் பயிரிடப்பட்டு, பானைகளில்அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிறு அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் பெருமளவில் வாழைத் தோட்டங்கள் உள்ளன.
இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வாழைப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் நெல் சாகுபடியாகும் பரப்பு 33,200 ஹெக்டேர் ஆகும். அதில் அமோக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான ஐ.ஆர்.20, கோ.43, வைகை ஐஐடி 4786, பொன்னி, ஆடுதுறை 36 முதலியவை 20,810 ஹெக்டேரில் சாகுபடியாகின்றன. சோளம் இயல்பாக நன்செயில் 12,912 ஹெக்டேரிலும், மானாவாரியில் 63,062 ஹெக்டேரிலும் சாகுபடியாகிறது. கரும்பு சாகுபடி செய்யும் இயல்பான பரப்பு நன்செயில் 8922 ஹெக்டேர், மானாவாரியில் 7740 ஹெக்டேர். சுமார் 37,700 ஹெக்டேரில் பயிறு வகை உற்பத்தியாகிறது. எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 47,35/ ஹெக்டேரிலும், சூரியகாந்தி 8000 ஹெக்டேரிலும், எள் 2500 ஹெக்டேரிலும், ஆமணக்கு 500 ஹெக் டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன. வேளாண்மைக் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களால் பலவித வேளாண் கருவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பலவிதப் பெயர்களில் கலப்பைகள் இம்மாவட்டத்தில செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பழமரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில் வளர்ச்சி:
தொழில் :
திண்டுக்கல் மாவட்டத்தில் 3592 சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. 52 தொழிற்சாலை கள் உள்ளன. மதுரை-திண்டுக்கல்-கரூர் அகல இரயில்பாதை திட்டம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.
பட்டுத்தொழில் :
பட்டுப்பூச்சி வளர்ப்பு இம்மாவட்டத்தில் சுமார் 2100 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெறுகிறது. திண்டுக்கல், பழனியில் அரசுபட்டுக்கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், வத்தலகுண்டு, பழனி ஆகிய இடங்களில் பட்டுத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன.
தேனீ வளர்ப்பு :
கொடைக்கானல், மற்றும் காமனுர் என்னும் இடங்களில் செயல்படும் இரு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக