நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 05, 2011

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள்

தமிழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர். இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது பெறும் சம்பளத்தை விட 1,088 ரூபாய் கூடுதலாகவும், ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அரசுக்கு 163 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

தமிழக அரசு செய்திக் குறிப்பு:தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்திய பின், அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் முன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தன.அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் கருணாநிதி பல்வேறு சலுகைகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2,800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் தர ஊதியம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால், இவர்கள் மாதந்தோறும் தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1,088 ரூபாய் பெறுவர். மேலும், இத்தனி ஊதியம் வருங்காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்துக்கும் கணக்கில் கொள்ளப்படும்.

* மாதம் ரூ.4,300 மற்றும் ரூ.4,500 தர ஊதியம் பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான 500 ரூபாயை தொடர்ந்து பெறுவர்.

* பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாக பெறுவர்.
அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,400 ரூபாய் என்பது 4,600 என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,600 ரூபாய் என்பது 4,800 என்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,300 ரூபாய் என்பது 4,500 என்றும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,500 ரூபாய் என்பது 4,700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.

* ரூ.4,600 தர ஊதியம்ö பறும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்கு பதிலாக மாதம் 750 ரூபாய் தனி ஊதியமாக பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 1,088 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

* மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 6,400 ரூபாய்க்கு பதிலாக 6,700 ரூபாய் பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 435 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த சலுகைகளால் அரசுக்கு ஆண்டுக்கு 163 கோடி ரூபாய் தொடர் செலவீனம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்