கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 800 மாணவர்கள் மீது, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவர்கள் செய்த முறைகேடுகளுக்கு தகுந்தபடி, அவர்கள் எழுதிய ஒட்டுமொத்த தேர்வுகளை ரத்து செய்தும், இரண்டு ஆண்டுகள் வரை தேர்வெழுத தடை விதித்தும் தேர்வுத்துறை தண்டனை அளித்துள்ளது.
பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், தேர்வுத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கிறது. எனினும், முறைகேடுகள் நின்றபாடில்லை. கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ‘பிட்’ வைத்திருந்தது, ‘பிட்’ வைத்து விடை எழுதியது, விடைத்தாள்களை மாற்றி எழுதியது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஏராளமான மாணவர்கள் பிடிபட்டனர்.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தான் அதிகமான மாணவர்கள் பிடிபட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அன்றைய தேர்வில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மற்ற தேர்வுகளில் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களும், முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபட்டனர். இவர்களுக்கு தேர்வுத்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி, விளக்கம் கேட்டது. மாணவர்கள் விளக்கம் அளிக்காவிட்டால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, அனைத்து மாணவர்களும் விளக்கக் கடிதம் அனுப்பினர். அதனடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்து, பத்தாம் வகுப்பில் 500 மாணவர்கள் மீதும், பிளஸ் 2வில் 300 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் செய்த முறைகேடுகளுக்கு தகுந்தபடி, தண்டனைகள் அளிக்கப்பட்டு, அது குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தேர்வின்போது முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் என்னென்ன தண்டனை வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே விளக்கமாக மாணவர்களுக்கு விளக்குகிறோம். தேர்வு மையங்களின் முன், இது குறித்த அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. தேர்வு துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அப்படியிருந்தும், பல்வேறு முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டு, எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்கின்றனர். கடந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களில், பத்தாம் வகுப்பில் 500 மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும், பிளஸ் 2 மாணவர்களில் 300 மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டு, அவரவருக்குரிய தண்டனைகள் வழங்கப்பட்டு விட்டன.
* ‘பிட்’ வைத்திருந்து, அதை விடைத்தாளில் எழுதாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு, அந்த ஆண்டு தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன.
* ‘பிட்’ வைத்து, அதை விடைத்தாளில் எழுதிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், அடுத்து இரு பருவ தேர்வுகளில் பங்கேற்க தடை விதித்தும் (மார்ச், அக்டோபர்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* விடைத்தாளை ஒருவருக்கொருவர் மாற்றி எழுதிய மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் (நான்கு பருவ தேர்வுகள்) தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை தெரிந்த பின்னராவது, வரும் மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வில் மாணவர்கள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
300 ஆசிரியர்கள் மீது புகார்: தேர்வுப் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில், அதிக புகார்களுக்கு உள்ளான 300 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இவர்கள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்தல், சம்பள உயர்வை சில ஆண்டுகளுக்கு நிறுத்துதல், சம்பள விகிதத்தை மாற்றி குறைத்து நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகளை, பிரிவு ‘17 பி’யின் கீழ் எடுக்க முடியும் என்றும், எனினும் பெரும்பாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி தினமலர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக