நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 06, 2011

கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: ‘கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தமிழகம் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 2004 ஜூலை 16ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில், ஏராளமான மாணவர்கள் பலியாகினர். இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்திற்கு, பள்ளி ஊழியர்களும், கல்வித் துறை அதிகாரிகளின் கவனக்குறைவுமே காரணம் என, இச்சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. தீ விபத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கருணை தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு எதுவும் தரப்படவில்லை.

தீ விபத்து குறித்த விசாரணை கமிஷனின் அறிக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும், இதுவரை இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் கருணை தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்களின் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகள் அளிக்கப்படவில்லை. பள்ளி தீ விபத்து சம்பவம், அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனநிலையையே மாற்றி விட்டது.

மேலும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதற்கு காரணம் இவர்களுக்கு அரசு நிறுவனங்கள் சரியான நேரத்தில், தார்மீக ரீதியான மற்றும் நிதி ரீதியான உதவிகளை அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து மத்திய, மாநில அரசுகளும், பள்ளி நிர்வாகமும் தப்பித்துள்ளன. மாநில அரசு அதிகாரிகளின் கவனக்குறைவாலும், அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததாலும், சட்ட விதிகளை சரியான வகையில் அமல்படுத்தாததாலும், அரசியல் சட்டத்தின் பிரிவு 21 மற்றும் 21ஏ மீறப்பட்டுள்ளன.

தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் கருணை தொகை நியாயமானதல்ல மற்றும் சரியானதல்ல. எனவே, தீ விபத்தால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அந்த இழப்பீட்டை 12 சதவீத வட்டியுடன் வழங்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்