இராமநாதபுரம் (Ramanathapuram) |
தலைநகரம் : | இராமநாதபுரம் |
பரப்பு : | 4,233.44 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,183,321 |
எழுத்தறிவு : | 760,819 (73.05 %) |
ஆண்கள் : | 582,068 |
பெண்கள் : | 601,253 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 287 |
வரலாறு:
இராமநாதபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆண்டு வந்ததிற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் பூங்குன்றத்திலும் காணப்படும் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் இராமநாதபுர மாவட்டத்துடன் பல்லவர்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.
பல்லவர்களுக்குப் பிறகு சோழர்களின் ஆட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் இருந்து வந்தது. பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் வசம் இருந்தது. கி.பி. 1331 இல் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு முஸ்லீம் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1371 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி சரியத் தொடங்கி கி.பி. 1393 இல் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.
கி.பி. 1605 இல் சேதுபதிகளின் ஆட்சி பொறுப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இருந்தது. சேதுபதிகளுள் கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாயிற்று.
கர்நாடக நவாப்பான முகமது அலி கிழக்கிந்தியக் கம்பெனியாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளைக் கைப்பற்றினான். இதனால் கி.பி. 1772லிருந்து 1780 வரை இராமநாதபுரம் மீண்டும் முஸ்லீம் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்டம் கப்பம் கட்டும் அடிமைப் பிரதேசமாயிற்று. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியாரின் திறமையாலும் சூழ்ச்சியாலும் இராமநாதபுரம் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சிக்கு மாறியது. மதுரை மாவட்டம் அமைவதற்கு முன்பே இராமநாதபுரத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி ஏற்பட்டு விட்டது.
1797 ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் ஏற்பட்ட பெரிய கலகத்தை அடக்கும் பொருட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியார் ஜாக்சன் என்பவனைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தனர். வரி செலுத்த மறுத்து, கலகத்துக்குக் காரணமாய் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரைப் போரில் தோற்கடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
சிவகங்கையை ஆண்ட சின்னமருதுவும் பெரிய மருதுவும்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையின் சுதந்திரப் போரை நடத்தினார்கள். போரில் 1801 ஆம் ஆண்டு இறுதியில் ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் கைதாகி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு இறந்தார்கள். திருநெல்வேலி,மதுரை மாவட்டங்களிலிருந்து 1901 இல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் 1985 மார்ச் 15 இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் உருவாக்கப்பட்டன.
எல்லைகள்:
வடக்கில் சிவகங்கை மாவட்டத்தையும், கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா வையும் மேற்கில் விருதுநகர் மாவட்டத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தையும் எல்லைகளாக இம்மாவட்டம் கொண்டுள்ளது.
பொது விவரங்கள் :
மழையளவு:
சராசரி 827 மி.மீ. மழையளவாகும்.
மருத்துவமனைகள் - 9
வங்கிகள் - 17
காவல் நிலையங்கள்: 43 (காவலர்கள் - 1,298)
தபால் நிலையங்கள் - 201
தொலைபேசிகள் - 2,087
திரையரங்குகள் - 35
பதிவுப் பெற்ற வாகனங்கள் -11,822
சாலை நீளம்: 1,962 கி.மீ.
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள்-2, (இராமநாதபுரம், பரமக்குடி); வட்டங்கள்-7 (இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடனை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி); வருவாய் கிராமங்கள் 424.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் -9, ஊராட்சி ஒன்றியங்கள் - 11, பஞ்சாயத்துக்கள் - 443. சட்டசபைத் தொகுதிகள்: 5 (திருவாடனை, பரமக்குடி, இராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்). பாராளுமன்றத் தொகுதி: - 1 (இராமநாதபுரம்) கல்வி: பள்ளிகள்: துவக்கநிலை -969; நடுநிலை -142; உயர்நிலை - 57; மேனிலை - 39. கல்லூரிகள்: அரசுக் கலைக் கல்லூரிகள் (இராமநாதபுரம் மற்றும் கமுதி); முகமது சதக் பாலிடெக்னிக், கீழக்கரை; முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை; தஸ்லீன் பீவி அப்துல் காதர் கலைக்கல்லூரி, கீழக்கரை; முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி; மாலைநேரக் கல்லூரி, பரமக்குடி.
வழிபாட்டுத் தலங்கள்:
இராமேஸ்வரம், திருபுல்லாணி பெருமாள் கோவில், உத்திரகோச மங்கை, திருவாடானை, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் கிறித்துவ தேவாலயம், நயினார் கோவில் முதலியன இம்மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
இராமேஸ்வரம் கோயில்

கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 2 பர்லாங்கு தொலைவும், தெற்கு வடக்காக ஒன்றரை பர்லாங்கு தொலைவும் உடைய மிகப்பெரிய கோவில் இராமேஸ்வரம் கோயில். இங்கு காணவேண்டிய முக்கிய பகுதி சொக்கட்டான் மண்டபம். இராமநாத சுவாமியின் சந்நிதியே மூலஸ்தானம். சீதாதேவி மணலில் பிடித்த லிங்கமான இராமேஸ்வரர் இங்கிருக்கிறது. இதனாலேயே இவ்வூருக்கு இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. இக்கோயில் நந்தி மிகப் பெரியது. இதன் நீளம் 23 அடி, அகலம் 12 அடி, உயரம் 17 1/2 அடி. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இக்கோயிலில் உள்ளது. அது படிகத்தினால் ஆனது. இராமேஸ்வரம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வடநாட்டினரும் வெளிநாட்டினரும் இங்கு அதிகமாக வருகின்றனர்.

மாசி மகம், மாசி சிவராத்திரி, வைகாசி, ஆடி அமாவாசை வசந்த உற்சவம் இவை நான்கும் பெரிய விழாக்களாக இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இங்குப் பயணிகள் தங்குவதற்கு ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. தலைமை அர்ச்சகர், சிருங்கேரி சங்கராச்சாரியார், இராமநாதபுரம் சேதுபதி, நேபாள மன்னர் ஆகிய இந்நால்வருக்கு மட்டுமே இராமநாத சுவாமி கருவறைக்குச் செல்லும் உரிமை உண்டு. காசியாத்திரை செல்பவர்கள் இராமேஸ்வரத்தில் தொடங்கி மீண்டும் இராமேஸ்வரத்துக்கு வந்து முடிப்பார்கள்.
இவ்வழக்கம் தென்னாட்டினரால் மேற் கொள்ளப்படுகிறது. துளசிதாஸ் இராமாயணம், சேதுபுராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் இத்தலத்தைச் சிறப்பிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்கள்.
இராஜராஜேஸ்வரி கோவில்:
இராமநாதபுரம் நகரின் அரண்மனைக்குள் இக்கோவில் அமைந்துள்ளது. சொக்கத் தங்கத்தால் ஆன இராஜராஜேஸ்வரியின் உயரம் ஒன்றரை அடி. சேதுபதி மன்னர்களுக்குத் திருமலை நாயக்கரால் அளிக்கப்பட்டது இந்த அம்மன் உருவம். இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருப்புல்லானி பெருமாள் கோயில்:

திருப்புல்லாணையில் உள்ள ஜகந்நாதப் பெருமாள் கோவில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவில் இராமர் விக்ரகத்திற்கு விலையுயர்ந்த காதணிகளை அணிவித்து வழிபடுகின்றனர். தனுஷ்கோடியிலிருந்த ராமர் விக்ரகம் இங்கு வைத்து வழிபடப்படுகிறது. இங்குள்ள இறைவனுக்குத் தென்னகத் தமிழான் என்ற பெயரும் உண்டு. 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இங்குக் காணப்படுகின்றன.
ஏர்வாடி தர்ஹா:

ஒரியூர் தேவாலயம்:

இந்த தேபிரித்தோ தேவாலயத்தை ஒரியூரில் அமைக்க 1734 இல் சேதுபதி மன்னர் 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார். அருளாநந்தர் என்னும் மேனாட்டு பாதிரியாரின் சேவையால் இத்தேவாலயம் எழுந்தது. 120 அடி உயரத்தில் கோபுரம் அமைந்துள்ளது. பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு வழிபாடு நடப்பதில்லை. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்கர் ஒரியூருக்கு வருகின்றனர். பிள்ளை வரம் வேண்டுவோர் இத்தேவாலயத்தைச் சுற்றி தென்னம்பிள்ளை நடுகின்றனர். டி.பிரிட்டோ பாதிரியாரின் நினைவாக பெருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவாடனை சிவன் கோவில்:

139 அடி உயரக் கோபுரம் உள்ளது. கோவில் உள்ளப் பகுதிக்கு பிடாரனேந்தல் என்று பெயர். இக்கோவிலில் சொற்கேட்டான்சாரி மண்டபம் உள்ளது. சூரியனுக்குத் தனிச் சந்நிதியும், சூரிய சண்டிகேசுவரர்க்குச் சந்நிதியும் உள்ளன. இது அகத்தியர் வழிபட்ட தலமாக சிறப்பிக்கப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழாவும், ஆடியில் திருக்கல்யாண மகோற்சவமும் கொண்டாடப்படுகின்றன.
முக்கிய ஊர்கள்:
இம்மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையும் முக்கிய நகர்களையும் பற்றி இங்குக் காண்போம்.
இராமநாதபுரம் நகரம்:
இராமநாதபுரம் நகராட்சி 1959 இல் ஏற்பட்டது. இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகத்தில் அமைந்த ஊராதலால் இதை 'முகவை' என்று குறிப்பிடுவர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், திருப்புல்லணை, உத்திரகோசமங்கை ஆகிய தலங்களுக்கு, இந்நகர் வழியேதான் செல்ல முடியும். 1772லிருந்து 1792 வரை இது ஆங்கிலேயரின் ராணுவத் தளமாக இருந்தது. 1949 இல் இராமநாதபுரம் ஜமீன் தமிழக அரசின் ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

சேதுபதியின் அரண்மனையும், அதிலுள்ள கோவிலும், இராமலிங்க விலாசம் என்னும் மாளிகையும் காணத்தக்க இடங்களாகும். இராமலிங்க விலாசம் சேதுபதிகளின் அவைக்களமாகவும், ஆடம்பர மாளிகையாகவும் விளங்கியதால், இதன் உட்புறம் வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சை மன்னருக்கும், சேதுபதிக்கும் நடந்த போரைச் சித்தரிக்கும் ஓவியம், ஆடற்கலையைச் சித்தரிக்கும் அற்புதச் சித்திரங்கள், இராமாயணம், பகவத்கீதை இவற்றை விளக்கும் காட்சிகள், சைவ- வைணவ வரலாற்றுக் காட்சிகள், மன்னரது, பட்டாபிஷேகம், அந்தபுரக் கேளிக்கைகள், திரையளிக்கும் காட்சிகள் போன்ற பல கண்ணைக் கவரும் காட்சிகள் இராமலிங்க விலாசத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
1978 முதல் தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்த அரண்மனையைத் தங்கள் பொறுப்பில் ஏற்று பராமரித்து வருகின்றனர். இராமநாதபுரம் மிளகாய் சந்தை தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தையாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் மிளகாய் சாகுபடி செய்து, தொடர்ந்து ஆறு மாதங்கள் இவ்வியாபாரம் நடைபெறுகிறது. தேங்காய் மொத்த வணிகத்திற்கும் இவ்வூர் பெயர் பெற்றது. புதன்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சித்தார்கோட்டை:
இவ்வூரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்கள் பனையோலையைக் கொண்டு பல அழகுப் பொருட்களைச் செய்து விற்பனை செய்து வாழ்கின்றனர்.
தேவிப்பட்டிணம்:
இது இராமநாதபுரத்திற்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றுர். நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவ்வூரை 'நவபாசனம்' என்று அழைக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தென்னம் பண்ணையும், பழத்தோட்டங்களும் இங்கு உள்ளன. இவ்வூரில் பாதிப்பேர் முஸ்லீம்கள். இது ஒரு சுற்றுலா தலமாகும்.
கீழக்கரை:
இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது இச்சிறு துறைமுகம். இங்கிருந்து அருகிலுள்ள கரையோரப் பட்டினங்களுக்குப் படகுகளில் பொருட்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இவ்வூரே பாண்டியர்களின் பண்டையத் துறைமுகமான கொற்கை என்று கருதப் படுகிறது. செந்தமிழ் வளர்த்த சீதக்காதி இவ்வூரினர். இவ்வூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இங்கு வாழ்கின்றனர். சங்குகளை அறுத்து அணிகலன்கள் செய்தல், மீன்பிடித்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற தொழில்கள் இங்கு மிகுதி.
அழகன்குளம்:
இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றுர். 1983 இல் இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ரோமானியர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு ஆதாரமாக சங்குக் குவியல்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது. இங்கு மருதுப்பாண்டியர் கட்டிய கோவிலும், சத்திரமும் உள்ளன. ரோமானியர் பயன்படுத்திய மதுச்சாடிகளும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் ரோம் நாட்டு மன்னன் தலைப் பொறித்த நாணயமும், அணிகலன்களில் சேர்த்துக்கொள்ளும் மணிகளும் உயர்வகைக் கற்களும் இங்குக் கிடைத்துள்ளன. மெளரியர்களின் தொடர்புக்கு ஆதாரமாக அவர்கள் காலத்து ஓவியங்களும், கருவண்ணப் பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்திரகோசமங்கை:
இது இராமநாதபுரத்துக்கு தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. இது ஒரு காலத்தில் பாண்டியர் தலைநகராய் விளங்கியது. நாயக்க மன்னர் கல்வெட்டுகள் இவ்வூர் கோவில்களில் உள்ளன. மாணிக்கவாசகரால் பாடப்பெற்றத் தலம். இங்கு ரயில் நிலையம் உள்ளது.
திருப்புல்லனை:
இராமநாதபுரத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோயில் பிரசித்திப் பெற்றது. இதற்கருகில் உள்ள மோர்க்குளம் என்னும் ஊரில் உப்பளம் இருக்கிறது.
மண்டபம்:
இராமேஸ்வரத்துக்கு நடந்துச் செல்வோர் வசதிக்காக இங்கு சேதுபதிகள் ஒரு கல்மண்டபமும் தெப்பக்குளமும் கட்டினர். அதனால் இவ்வூருக்கு மண்டபம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

வடக்கிழக்குப் பருவக்காற்றால் பெரும் புயல் வீசும். பல சிறு தீவுகள் தென்மேற்குப் பருவக்காற்றால் நேரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துகின்றன. சுற்றியிருந்த காடுகளை அழித்து குடியேறியவர்கள் வெற்றிலை பயிரிட்டதால் வெற்றிலை மண்டபம் என்ற பெயரும் உண்டு. படகு கட்டும் துறை இங்கிருக்கிறது. இரயில் நிலையமும் உள்ளது. மண்டப முகாம் ஒரு காலத்தில் இலங்கை அரசின் கீழிருந்தது. ஐந்து மைல் நீள சாலையும், பல கட்டிடங்களும், குடியிருப்புகளும் கொண்ட இவ்விடம் தற்போது தமிழக அரசு பொறுப்பில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகம் காண்பதற்கு அரிய பல உயிரினங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. செயற்கை முத்து தயாரிக்கும் தமிழ்நாடு முத்து நிறுவனம் தமிழக அரசால் இங்கு நடத்தப்படுகிறது.
பாம்பன் கால்வாய்:

1854 இல் பத்தரை அடி ஆழ கால்வாயாகத் தோண்டப்பட்டு, 200 டன் நிறையுள்ள தோணிகள் செல்லத்தக்கவாறு பாம்பன் கால்வாய் அமைக்கப்பட்டது. பிறகு பதினான்கடி ஆழத்திற்கும், 9232 அடி நீளத்திற்கும், 80 அடி அகலத்திற்குமாய் கால்வாய் மாற்றியமைக்கப்பட்டது. 1913இல் இக்கால்வாய் மீது மண்டபத்தையும் பாம்பனையும் இணைத்து ரயில் தொடரும், தொங்கு பாலமும் அமைக்கப்பட்டன. ரயில் தொடருடன் கூடிய பாலத்தை இரு பகுதிகளாக மேலே தூக்கி, சிறிய கப்பல்கள் செல்ல வசதிசெய்யப்பட்டுள்ளது. 1846 இல் கட்டப்பட்டு 1923 இல் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
பாம்பன்
இங்கு கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. விவேகானந்தர் நினைவுத் தூண் ஒன்றும் நடப்பட்டிருக்கிறது. மீனவர்களும் நெசவாளர்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.
தனுஷ்கோடி

இராமபிரான் வில்லின் நுனியை இவ்வூரில் ஊன்றினார் என்ற கருத்திற்கேற்ப தனுஷ்கோடி என்று பெயர் பெற்றுள்ளது. இது இராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு எல்லையில், 20 கி.மீ. தொலைவில் உள்ளது. 1964 இல் ஏற்பட்ட கடல் அரிப்பால் ஊரின் பெரும்பகுதியைக் கடல் கொண்டு விட்டது. இங்கு நீராடுவதைப் புண்ணியமாகக் கருதுகின்றனர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து நீராடுகின்றனர்.
இராமேஸ்வரம் நகர்:
இராமேஸ்வரம் தீவின் நீளம் 15 மைல். இதில் எட்டு மைல் வரைக்கும் இத்தீவு ஆறு மைல் அளவு அகலமாக இருக்கிறது. எஞ்சிய ஏழு மைல் நீளத்திற்கு தீவின் அகலம் ஒரு மைல்தான். மீன்பிடிப்பது முக்கியத் தொழில். சங்கு எடுப்பதும் படகு ஓட்டுவதும் பிற தொழில்கள். இத்தொழில்களில் இங்குப் பெருமளவு வாழும் முஸ்லீம்கள் சிறந்து விளங்குகின்றனர். முத்து வாணிகமும் சிறப்பாக நடைபெறுகிறது. மணல்மேடுகளில் விளையும் வெண்தாழம்பூ மிகுதியாகவும், மலிவாகவும் கிடைக்கிறது. கடலில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகியப் பொருட்களைச் செய்து விற்கின்றனர். இங்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகம். சத்திரங்களும் ஜட்கா வண்டிகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இராமேஸ்வரம் தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு, மீன் முதலியன இங்குள்ள முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
கடலாடி:
கடல் அலைகளின் ஓசை எப்போதும் இவ்வூரில் கேட்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இங்கிருந்து முதுகுளத்தூருக்கு 15 கி.மீ. கேழ்வரகு இங்கு நிறைய விளைவிக்கப்படுகிறது. கடல் மீனும் நண்டும் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.
கமுதி
இவ்வூரிலிருந்து முதுகுளத்தூர் 12 மைல் தொலைவு உள்ளது. குண்டாற்றின் கரையில் இது அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள கோட்டையால் புகழ் பெற்ற ஊர். 1801 இல் இக்கோட்டை ஆங்கிலேயர் வசமிருந்தது. பிறகு மருது பாண்டியரால் கைப்பற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டப் பொம்மனும் இதைப் பயன்படுத்தியுள்ளார். இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கு மறவர்களும், நாடார்களும், முஸ்லீம்களும் கிருத்துவர்களும் வாழ்கின்றனர். சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சியம்மன் கோயில் இங்குள்ளது. பருத்தி நிறைய விளைவிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
தொண்டி:

தொண்டு என்பது நிலத்துக்குள் புகுந்த கடற்பகுதி என்று பொருள்படும். இங்குள்ள கடற்கரையை அலைவாய்க் கரை என்று அழகுத் தமிழில் குறிப்பிடுகிறார்கள். தொண்டி பாண்டியரின் பழம்பெரும் துறைமுகமாக விளங்கியது. இத்துறைமுகத்துக்கும் அரபு நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளாக வியாபாரத் தொடர்பு நிலவி வந்துள்ளது. சென்ற நூற்றாண்டு வரை யானைகளும் முத்துக்களும் அரபு நாடுகளுக்கு இத்துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பல காலம் இத்துறைமுகம் இங்கிலாந்து, பர்மா ஆகிய நாடுகளின் தொடர்பால் வளம் பெற்றிருந்தது. முஸ்லீம்கள் பெருந்தொகை யினராக வாழுகின்றனர். மீன் பிடித்தலும் சங்கு எடுத்தலும் இங்கு நடைபெறும் முக்கியத் தொழில்கள். இலங்கையிலிருந்து தேங்காய் இறக்குமதியும், இலங்கைக்கு கடல் ஆமை ஏற்றுமதியும் நடைபெறுகிறது. நெசவாளர்கள் அதிகமாகக் குடியிருக்கின்றனர். இங்குள்ள இஸ்லாமியக் கல்வி நிலையத்தில் அராபிய, பாரசீக மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
திருவாடானை:
இவ்வூர் வழியேதான் தொண்டிக்குச் செல்ல வேண்டும். 1605 முதல் 1650 வரை சேதுபதிகளின் தலைநகராய் திருவாடானை இருந்தது. இவ்வூர் சிறப்புக்குக் காரணமாக விளங்கும் சிவன் கோயில் தேவக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும்.
பரமக்குடி:
மதுரையிலிருந்து 47 மைல் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 26 மைல் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 23 மைல் தொலைவிலும், முதுகுளத்தூ ரிலிருந்து 16 மைல் தொலைவிலும் பரமக்குடி அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் வளமாக விளங்குகிறது; பல அரசு அலுவலகங்கள், வணிக நிலையங்கள் நிறைந்த ஊர். கிருத்துவர்கள் பெரும் தொகையினராய் வாழ்கின்றனர். இவர்கள் வழிபடும் கத்தோலிக்க தேவாலயமும் இந்துக்கள் வழிபடும் சிவாலயமும் நகரைச் சிறப்பிக்கின்றன. வெளியூர்களில் நகை வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அநேக ஆயிர வைசிய இனத்துப் பெருமக்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நெசவுத் துறையில் ஈடுபடும் செளராஷ்டிர இனத்தினரும் உள்ளனர். வேளாண்மைப் பள்ளியும், வேளாண்மைப் பண்ணையும் இங்கு அரசினரால் நடத்தப்படுகின்றன. ரயில் நிலையம் உள்ளது. வியாழன்தோறும் சந்தை கூடுகிறது. இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் வட்ட மக்கள் இச்சந்தைக்கு வந்து போகிறார்கள்.
முக்கியத் தீவுகள்:
இம்மாவட்டத்தச் சுற்றி பல தீவுகள் உள்ளன. அவைகளில் இராமேஸ்வரம் நீங்கலாக இராமநாதபுரம் வட்டத்தில் பதினொரு தீவுகளும் முதுகுளத்தூர் வட்டத்தில் ஐந்து தீவுகளும் உள்ளன. எல்லாத் தீவுகளிலும் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
மணலித் தீவு
பாம்பனிலிருநது 7 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இப்பகுதியில் கடல் ஆழமற்றுக் கிடக்கிறது. இத்தீவில் சுண்ணாம்பு கல் படிவங்கள் மிகுதியாக காணப்படுகிறது. கருவாடும் தேங்காயும் ஏற்றுமதியாகின்றன. களங்கட்டி மீன் பிடித்தல் முறையில் மூங்கில் குச்சிகளை சதுரமாக கடலில் நட்டு, வலைகளை அமைத்து மீன் பிடிக்கின்றனர்.

ஏராளமான முயல்கள் இத்தீவில் இருப்பதால் முயல் தீவு என்று பெயர் பெற்றது. இதற்கும் மண்டபம் தங்குமிடத்திற்கும் 10 கி.மீ. தொலைவு.
தலையாரித் தீவு:
இத்தீவில் சுண்ணாம்புக் கல் மிகுதியாகக் கிடைக்கிறது. கீழக்கரைக்கு தென்கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆனைப் பாறைத் தீவு:
பாறைகள் மிகுந்த இத்தீவு பிள்ளையார் முனைத் தீவுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிங்களத் தீவு:
மீன்பிடித்தல், இத்தீவில் முக்கியத் தொழில். சிங்களத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் இங்குத் தங்கிச் செல்வது வழக்கமாதலால், இது சிங்களத் தீவு எனப் பெயர் பெற்றது. இத்தீவு குருசடைத் தீவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
குருசடைத் தீவு:
பாம்பனிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இத்தீவின் சுற்றளவு 4 1/2 கி.மீ. தமிழக அரசின் மீன் ஆராய்ச்சி நிலையமும், உயிரியல் காட்சிக் கூடமும் இங்குள்ளன. ஜெல்லி செய்ய உதவும் பாசி ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. ஆலைத் தொழிலுக்கு உதவும் சில அமிலங்களில் சேர்க்கப்படும் 'சார்க்காசம்' என்ற பொருளும், பெயிண்டு செய்ய உதவும் சில பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. ரோஜாப்பூ நிற சூரியகாந்தி, நிக்கோபார் இளநீர், செவ்விள நீர் ஆகியனவும் கிடைக்கின்றன. குருசடைத் தீவில் முத்துச் சிப்பி வளர்க்கும் நிலையம் பணியிலிருந்து இப்போது மூடப்பட்டுள்ளது. மூடிக்கிடக்கும் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கினால் தமிழகம் உலக முத்துச் சந்தையில் முதலிடம் பெறும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைகளில் முத்துக் குளித்தலைப் பற்றி மார்க்கோபோலோ என்னும் வெளிநாட்டு வரலாற்றாசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.
சுளித் தீவு:
இத்தீவு மணற்பாங்கான பொட்டல் வெளியாகும். நல்லத் தண்ணீர்த் தீவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது.
வாளைத் தீவு:
வாலித் தீவு, வலைத்தீவு என்றும் இத்தீவைக் குறிப்பிடுவர். முளித் தீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கிழத்தேரியம்மன் மாதாக்கோவில் என்று அழைக்கின்றனர். இங்கு மீன்கள் அதிகமாய்க் கிடைக்கின்றன.
அப்பா தீவு:
கீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவில் பவளப் பாறைகள் அதிகமாய்க் காணப்படுகின்றன. மனிதர்கள் வசிப்பதில்லை.
பூமறிச்சான் தீவு:
மேடான பகுதியில், பாம்பனிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவு பெரிய கண்டத் தீவு, நடுத்தீவு, பூமறிச்சான் தீவு என்று முப்பகுதியினைக் கொண்டுள்ளது. பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் இத்தீவுக்கு வழங்கப்படுகிறது.
பூவரசன்ஹள்ளித் தீவு:
கீழக்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் இத்தீவில் பூவரச மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பிள்ளையார்முனைத் தீவு:
பாலயாமுனைத் தீவு என்ற பெயரும் இதற்குண்டு. பூவரசன்ஹள்ளித் தீவுக்கு அருகில் உள்ளது. இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை.
முளித் தீவு:
இத்தீவிற்கும் புதுமடத்திற்கும் 10 கி.மீ. தொலைவு. இங்கு மனிதக் குடியிருப்புகள் இல்லை. சுண்ணாம்புப் பாறைகள் இங்கு மிகுதியாதலால், சுண்ணாம்புக் கல் வெட்டி எடுப்பதற்காக மட்டும் தொழிலாளர்கள் செல்கிறார்கள்.
நல்லதண்ணீர்த் தீவு:
இத்தீவு சுளித் தீவிற்கு 3 கி.மீ. தொலைவிலும், வாலிநோக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு சவுக்குத் தோப்புகள் ஏராளம். இத்தீவில் நல்ல குடிநீர் இடுப்பளவு தோண்டினாலே கிடைக்கிறது. இதனாலேயே நல்லத்தண்ணீர்த் தீவு என பெயர் பெற்றுள்ளது.
உப்புத்தண்ணீர் தீவு:
இத்தீவில் கிடைக்கும் ஊற்றுநீர் உப்புக் கரிப்பதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இத்தீவு சுளித்தீவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோட்டைகள்:
இராமநாதபுரம் மாவட்டம் பழங்காலத்தில் மறவர் சீமையாய் வீரத்தின் விளைநிலமாய் இருந்தது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் ஆட்சியை காப்பாற்றுவதற்காகவும் போர்கள் நிகழ்ந்தபோது படைவீரர்களின் மக்களின் ஆட்சியாளர்களின் அரணாய் விளங்கியவை மண்ணாலும் கல்லாலும் அமைந்த கோட்டைகள். வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கோட்டைகள் உள்ளன. இவை கி.பி. 1801 இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து இடிபாடுகளுடன் இப்போது காணப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கோட்டைகள் பின்வருமாறு:
இராமநாதபுரம் வட்டம்:
இராமநாதபுரம் கோட்டை, சூரன் கோட்டை, திருபுல்லாணிக் கோட்டை, சக்கரக் கோட்டை, அத்தி ஊத்துக் கோட்டை, சித்தார் கோட்டை, குதகக் கோட்டை.
முதுகுளத்தூர் வட்டம்:
செங்கோட்டை, சோனைப்பிரியான் கோட்டை, வேந்தர் கோட்டை, பெரியகூரான் கோட்டை, திருமாலுக்கந்தான் கோட்டை, மாணிக்கநாதன் கோட்டை, ஆலம்பக் கோட்டை, கணக்கன் கோட்டை, கொக்கரன் கோட்டை.
பரமக்குடி வட்டம்:
கீழக்கோட்டை, கீழப்புதுக்கோட்டை, தென்னவன் புதுக்கோட்டை, காமன் கோட்டை, புதனுர் கோட்டை, சங்கன் கோட்டை, சிரகிக் கோட்டை, குமுக்கோட்டை.
கமுதி வட்டம்:
கமுதிக் கோட்டை, மேலமுடி மன்னர் கோட்டை, கீழமுடி மன்னர் கோட்டை.
திருவாடனை வட்டம்:
அடந்தனக் கோட்டை, அவத்தளிக் கோட்டை, அழகர்தேவன் கோட்டை, அஞ்சு கோட்டை, ஆறுமுகக் கோட்டை, ஆணையார் கோட்டை, உறுதிக்கோட்டை, ஏறக்கோட்டை, ஓயிக்கோட்டை, ஏரியூர்க் கோட்டை, கீழக்கோட்டை, கொத்தியார் கோட்டை, செட்டிக் கோட்டை, சாத்தாணிக் கோட்டை, சிறுமலைக் கோட்டை, திட்டுக்கோட்டை, திருப்பாக் கோட்டை, தும்படைக்கா கோட்டை, ரானசிங்க மங்கலம் கோட்டை, பொட்டக் கோட்டை, மொன்னாக் கோட்டை, மண்டலக் கோட்டை, மாதவனிக் கோட்டை, அன்னிக் கோட்டை, பழையன் கோட்டை, பொன்னளிக் கோட்டை, ராணிக் கோட்டை.
புகழ்பெற்றோர்:
பாஸ்கர சேதுபதியும், முத்துராமலிங்க சேதுபதியும் இராமநாதபுரத்தை ஆண்டவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள். பாஸ்கர சேதுபதி தமிழ், வடமொழிப் புலவர்களையும், இசைக் கலைஞர்களையும் ஆதரித்து புகழ் பெற்றார். முத்துராமலிங்கப் பட்டிணத்தை அமைத்த முத்துராமலிங்க சேதுபதி தமிழறிஞர்களைப் போற்றும் புரவலராய் விளங்கினார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையைச் சீதக்காதி கேட்காமலேயே வாரிக் கொடுக்கும் கொடை வள்ளலாய்த் திகழ்ந்தார். இம்மாவட்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கத் தேவர் இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். மேலும் பாம்பன் சுவாமிகள், குணங்குடி மஸ்தான், இணையற்ற இமாம், உமறுப்புலவர், இன்குலாப், முகவை இராசமாணிக்கம், நாரா. நாச்சியப்பன் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோர் ஆவர்.

முகவை இராஜமாணிக்கம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். பிறகு பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றியும் சிறை சென்றவர். பல நூல்களை எழுதியுள்ளார்.
புவிவளம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணுக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல இடங்களில் பலவகைக் கனிமங்கள் கிடைப்பது அறியவந்துள்ளது.
இல்மைனைட்/கார்னட்
இல்மைனட் சத்துள்ள மணல் கடற்கரை ஊர்களில் கிடைக்கிறது. இது இராமேஸ்வரம் தீவின் வடகரையில் மிகுதியாகக் கிடைக்கிறது. இங்கு கார்னட் கனிமமும் பல ஆயிரம் டன் கிடைக்கிறது.
சுண்ணாம்புக்கல்:
அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள பாலநத்தம், பண்டக்குடி ஆகிய இடங்களில் சுண்ணாம்புக்கல் ஏராளமாக இருக்கிறது. சிமெண்ட் தொழிலுக்கும், பிளீச்சிங் பவுடர் தயாரிப்புக்கும், கால்சியம் கார்பைடு செய்வதற்கும் சுண்ணாம்புக்கல் பெரிதும் பயன்படுகிறது.
ஜிப்சம்:
முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள பேரையூர், அவத்தாண்டை, கோக்கடிப் பகுதிகளிலும், கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய ஊர்களிலும் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் தொழிலுக்கு மிகவும் பயன்படுவதாகும்.
மஞ்சள்காவி:
மானாமதுரை, சிவகங்கைப் பகுதிகளில் கிடைப்பதை விட மிகக் குறைந்த அளவே மஞ்சள் காவி படிவங்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன. எட்டு வகை வண்ணங்களில் பெயிண்ட் தயாரிக்க மஞ்சள் காவி பயன்படுகிறது.
செந்நிறக் கற்பாறைகள்:
மிகக் குறைந்த அளவே கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் சாலைகள் அமைக்கவும், கட்டிட வேலைகளுக்கும் பயன்படுகின்றன.
பவளச் சுண்ணாம்புக் கல்:
இது இராமேஸ்வரம் தீவில் சில இடங்களில் 50 டன் அளவில் 100 மீட்டர் அகலத்திற்கு கிடைக்கலாம் என்று கருதுகின்றனர். இதை சுண்ணாம்புக் கல்லாக பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் இதை நுரைக்கல் என்றும் சுழி என்றும் அழைக்கிறார்கள்.
கடற்பாறை:
கடலோரத்தில் இப்பாறைகள் உண்டாகத்தக்க வெப்ப நிலையும், தெளிந்த ஆற்று நீருடன் படிவங்கள் சேராத் தன்மைகளும் காணப்படுகின்றன. தீவுகளைச் சுற்றிலும் கூட இத்தகைய பாறைகள் ஏராளமாக இருக்கின்றன.
மண்ணெண்ணெய் ஊற்றுகள்:
தேவிப் பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மண்ணெண்ணெய் ஊற்றுகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மீன்வளம்:
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை நீளம் 160 மைல்களாகும். இது தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்கரையாகும். கரையோர கிராமங்களில் வசிப்போரில் நாற்பது சதவீத மக்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இராமேஸ்வரம் , பாம்பன், உச்சிப்புளி ஆகிய இடங்களில் மீன் கிடங்குகள் உள்ளன. இராமேஸ்வரத்தில் சிறந்த மீன் அங்காடி உள்ளது. வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதியாகின்றன தனிப்பட்ட மீனவர் குழுக்களுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கங் களுக்கும் அரசு இயந்திரப் படகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு வகை மீன்களை சேகரித்து, பாதுகாத்து விற்க பாம்பனில் ஒரு நிலையம் உள்ளது. இங்கிருந்து தனிப்பட்டவர்களுக்கும், மீன் வளர்ப்புக்கு உகந்த குளங்களுக்கும் வழங்கப்படுகின்றன. தொண்டி, மோர்ப்பண்ணை, கீழக்கரை, மண்டபம் ஆகிய இடங்களில் ஐஸ் யந்திர குளிர்ப்பதன அறைகள் நிறுவப்பட்டுள்ளன. மண்டபத்தில் மீன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், பாம்பனில் மீன் மாவு தொழிற்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன.
பருவக் காலங்களை மீனவர்களுக்கு முன்னறிவிக்க தொண்டி, கீழக்கரை ஆகிய இடங்களில் எச்சரிக்கை நிலையங்களை அரசு அமைத்துள்ளது. கடலில் சிக்கிக் கொள்ளும்மீனவர்களைக் காப்பாற்றி மீட்க நவீன வசதி அடங்கிய படகு தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை, தொண்டி ஆகிய இடங்களில் படகு கட்டும் தளங்கள் உள்ளன. மண்டபத்தில் மத்திய கூட்டுறவு மீன்பிடிச் சாதன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாவலை என்ற இட்டிலி போன்ற உருவமும் மென்மையும் கொண்ட மீனும், கொழுப்புச் சத்து குறைவான எலும்பு நிறைந்த வெள்ளி உயிறு எனப்படும் மீனும் நிறைய கிடைக்கின்றன. ஆவுகரியா என்னும் மீன் இனம் குருசடைத் தீவுக்கருகில் நெடுங்காலமாக அகப்படுகிறது. குறைந்தது 12 அடி நீளமுள்ள இராட்சத சுறாமீன்கள் தனுஷ்கோடியருகே பிடிக்கப்படுகின்றன. இன்னும் பல வகை மீன்களும் கிடைக்கின்றன. மண்டபத்தில் இம்மாவட்ட கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களைப் பற்றியும் பிடிபடும் இடங்களையும் ஆராய, மத்திய கடல் மீன் ஆய்வு நிலையம் 1947 இல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் அறிஞர்கள் இங்கு மீன் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையத்தின் கீழ் இயங்கும் சிறு ஆராய்ச்சி நிலையங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா, கொல்லம், காக்கிநாடா, பரங்கிப்பேட்டை, கள்ளிக்கோட்டை, கார்வார், பம்பாய் ஆகிய இடங்களில் இயங்குகின்றன. கடற்பாசியிலிருந்து உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முறைகளையும் இவை நாடெங்கும் பரப்பி வருகின்றன. இம்மாவட்டத்தில் சங்கெடுக்கும் தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுகின்றனர்.
இராமேஸ்வரத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை சங்கு எடுக்கப்படுகிறது. இங்கு நல்ல சாதிச் சங்குகள் கிடைக்கின்றன. பட்டி, இருபிறவி, இராமேஸ்வரம் என்னும் மூன்று வகைச் சங்குகள் கிடைக்கின்றன. இச்சங்குகளுக்குச் சிறந்த சந்தையாக வங்காளம் திகழ்கிறது. தென்வடலையில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையும், பெரியப்பட்டினம், கிழக்கரை ஆகிய பகுதிகளில் செப்டம்பர் முதல் ஜனவரி வரையும் சங்குகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி வரையும் சங்குகள் எடுக்கப்படுகின்றன தேவிப்பட்டினம், திருப்பாலக்குடி, மோரிப்பனை, கரகங்காடு ஆகிய ஊர்களில் வலம்புரிச் சங்குகள் கிடைக்கின்றன.
வேளாண்மை:
இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை, பாலாறு, மணிமுத்தாறு, வைப்பாறு, சருகணியாறு, பெரியாறு, உப்பாறு, குண்டாறு, அர்ச்சுனா ஆறு, விரிசலையாறு போன்ற பெரிய ஆறுகளும், கிருதமால் ஆறு, கானல் ஓடை, தேனாறு, சீவலப்பேரியாறு, மன்னார்கோட்டை நதி, விஜயநதி போன்ற சிறிய ஆறுகளும் ஓடி விவசாயத்தைச் செழிப்பாக்குகின்றன. இதுதவிர குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் வேளாண்மை சிறப்புற நடைபெற உதவுகின்றன. 21 அடி கி.மீ. நீளமும், 57 கோடி கன அடி கொள்ளளவும் உடைய இராஜசிங்கமங்கலம் ஏரியால் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பே நீர் பெறுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானைப் பகுதிகள் களர் நிலம் மிகுந்ததால் மழை பெய்த பிறகே நாற்று நடுவார்கள். இங்கு மழை அதிகம் தேவைப் படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு முதலியவற்றை மிகுதியாக பயிரிடுகின்றனர்.
வைகை பாயும் பகுதிகளிலும், பெரியாற்று நீர் பாயும் சில சிறு பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், மழை வளத்தோடு கிணற்று வசதியும் உடைய சில பகுதிகளிலும் நெல் பயிராகிறது. கம்பு, கேழ்வரகு, நெல் தவிர ஏனைய தானியங்கள் மாவட்டமெங்கும் பயிராகின்றன. இராமநாதபுரம், பரமக்குடி வட்டங்களில் மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 2,14,999 ஹெக்டெர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. நெல் பயிரிடும் மொத்தப் பரப்பு 1,32,805 ஹெக்டெர். முக்கிய பயிர்கள் பருத்தி, நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருப்பு வகைகள், கேழ்வரகு ஆகியன.
தொழில்:
இராமநாதபுரம் மாவட்டம் தொழிற்வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகும். டெக்ஸ்டைல் ஸ்பின்னிங் ஆலைகள் நான்கும் வேதிப் பொருட்கள் ஆலைகள் இரண்டும் இங்கு முக்கியத் தொழிற்சாலைகள். சிறுதொழில் மையம் ஒன்று உள்ளது. 672 சிறுதொழில் ஆலைகள் உள்ளன. இராமநாதபுர மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கமுதி வட்டம் அரசன்குளத்தில் உள்ளது. இந்த ஆலையில் தரமான 40,60 மற்றும் 42 நூல் ரகங்கள் தயாராகின்றன. 12,320 கதிர்கள் கொண்ட இவ்வாலைக்கு தமிழ்நாடு அரசு 125 இலட்சம் பங்கு மூலதனம் தந்துள்ளது. நித்திய கல்யாணி டெக்ஸ்டைல் மில்ஸ் திருவாடானை வட்டம் சின்னகீரமங்கலத்தில் அமைந்துள்ளது. கப்பல் பழுது பார்க்கும் பட்டறை ஒன்று மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கைத்தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் வளர்ச்சியுற்ற தொழில்கள் பின்வருமாறு:
மரவேலை, தச்சுவேலை கூட்டுறவு சங்கம், உலோகப் பாத்திரங்கள் தொழில் கூட்டுறவு சங்கம், செங்கல் தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், தீக்குச்சி தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், அச்சிடுதல், சாயம் தோய்த்தல் தொழில் கூட்டுறவு சங்கம், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், காகித உறைகள் தயாரித்தல், மீன்வலை நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்.
கமுதியில் நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல், தச்சு, லேத் போன்றத் தொழில்களில் பயிற்சி தரப்படுகிறது. 14 இலட்சம் ரூபாய் செலவில் பரமக்குடியில் துவங்கப்பட்டுள்ள தொழிற்கூடத்திலும் பலவித தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சோப்புத் தொழில், தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரித்தல், செக்கு எண்ணெய் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரித்தல், தச்சுக் கொல்லுத் தொழில்கள், கைமுறைக் காகிதத் தொழில்கள், தேனீ வளர்ப்பு, நார் , பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்கள் போன்ற கதர் கிராமத் தொழில்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், அழகுப் பொருட்கள் செய்தல் ஆகியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தென்னை மட்டைகளிலிருந்து நார்கள் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தொழில் வாய்ப்பு:
கடற்கரைப் பகுதிகள் செம்பனை எண்ணெய் (பாமாயில்) தயாரிக்கப் பயன்படும் செம்பனைகள் வளர உகந்தவை. இப்பனைகளை வளரச் செய்து, இவற்றிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் ஆலை நிறுவவும் வாய்ப்புள்ளது. மண்டபம் பகுதிகளில் மல்லிகை அதிகம் பயிராகிறது. இப்பூக்களில் இருந்து சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவும் வாய்ப்பிருக்கிறது. இம்மாவட்டத்தில் ஏராளமாக கிடைக்கும் கடல் பொருட்களைக் கொண்டு, சங்கு வளையல்கள், காதணிகள், மாலைகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்கூடங்களை அமைக்கலாம். கிளிஞ்சல்களைக் கொண்டு சுண்ணாம்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவவும் வாய்ப்புள்ளது. தொழிற்துறை மென்மேலும் வளரவும், புதியத் தொழில் முனைவோர், தொழில் வல்லுநர், மூலப்பொருள், மனித வளம் இவற்றை ஒன்றிணைத்து புதியத் தொழில்கள் தொடங்க ஆலோசனைகள் தந்தும் முதலீடு வழங்கியும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (ஜிமிஞிசிளி), சிப்காட்டும் உதவி வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடானை, கமுதி ஆகிய வட்டங்கள் தொழில் துறையில் பின்தங்கிய வட்டங்களாக அரசு அறிவித்துள்ளபடியால், மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளையும், சலுகைகளையும், உதவிகளையும் பெற்று தொழில் தொடங்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக