நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 30, 2011

தினம் ஒரு துணுக்கு - "நமது மாவட்டம் - மதுரை (Madurai) "


   

தலைநகரம் : மதுரை
பரப்பு : 7,057 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,562,279
எழுத்தறிவு : 1,795,751 (78.65 %)
ஆண்கள் : 1,295,124
பெண்கள் : 1,267,155
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 733



வரலாறு :

தமிழர் நாகரீகம், தமிழ்மொழி, தமிழ்ப்பண்பு இவற்றின் தாயகமாய் விளங்கி வருவது மதுரை மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூவகை நிலப்பண்புகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இம்மாவட்டம் பல மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. பலநூறு ஆண்டுகள் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மதுரை மாவட்டம் இருந்தது. இம்மாவட்டம் புராண, வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 77இல் பிளினி என்பவரும், கி.பி. 140 இல் தாலமி என்பவரும் மதுரையின் பழம்பெருமையைத் தத்தமது நூல்களில் குறித்துள்ளனர்.

மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அசோகனின் கற்றுண்களில் பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் பாண்டியர்தம் பழம்பெருமை விளக்கப்ட்டுள்ளது. மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதர் தமது 'இண்டிகா' நூலில் பாண்டியநாடு தென்கடற்கரை வரை பரவியிருந்தது என்று கூறியுள்ளார். கெளடில்யர் தம் அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் பாண்டிய நாட்டின் சிறப்புகளை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றுக் காவியமாக விளங்கும் மகாவம்சம் என்னும் நூலும் பாண்டியர்தம் பெருமையைப் பலவாறாகப் பெருமைப்படுத்திக் கூறுகிறது. மதுரையில்தான் தமிழ்மறையான திருக்குறளும் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் தமிழ்ப்புலவர்கள் கூடி தமிழாராய்ந்த காரணத்தால் மதுரைக்குக் கூடல் என்னும் பெயரும் அமைந்தது.

பாண்டியர்கள் கடல் வாணிகத்தில் மிகுந்த சிறப்புற்றிருந்தனர். காயல் துறைமுகத்தை வணிகத் தலைநகராய் கொண்டிருந்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தில் கோயில், கலை, தொழில், தமிழ்மொழி அனைத்தும் ஏற்றம் பெற்றன. பாண்டியர்தம் நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா கல்வெட்டுகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாகவே பாண்டியர் பலரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இச்சங்கக் காலத்தை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றாகப் பிரித்துக் கூறுவர்.

முதற்சங்கம் : இது அகத்தியர் முதலானோரால் நடத்தப்பட்டது. பல்லாண்டுகள் நடைபெற்ற இச்சங்கக் காலத்தில் அகத்தியம், பரிபாடல் முதலிய நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

இடைச்சங்கம் : இது 59 மன்னர்களின் ஆதரவைப் பெற்று (வெண் தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை) விளங்கியது.

கடைச்சங்கம் : முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியின் காலம் வரை கடைச்சங்கம் சிறப்புற்றது. பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் காலத்தில் இன்றுள்ள மதுரை மாநகரின் அடிப்படை அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1786 இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்தான் இத்தாலியிலிருந்து மார்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தான். இவன் காலத்துடன் பாண்டியப் பேரரசு மறைந்தது. அதன் பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் மதுரைச் சீமை இஸ்லாமியர் ஆட்சியில் சிக்கிக் கிடந்தது.

ஹரிகரர், புத்தர் என்போர் தென்னிந்தியாவில் முஸ்லீம் ஆட்சி பரவுவதைத் தடுத்து, மதுரையில் முகமதியராட்சியை ஒழித்து, அங்கு விஜய நகர பேரரசை அமைத்தனர். மதுரை இஸ்லாமியர் ஆட்சியிலிருந்து மீட்கப்பட்டதுடன், மூடிக்கிடந்த மீனாட்சியம்மன் கோயிலும் திறக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மதுரையில் நாகம நாயக்கரைப் பிரதிநிதியாய் நியமித்து ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி சுமார் 200 ஆண்டுகள் நீடித்திருந்தது. இவர்கள் காலத்தில் தான் மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்கள் கட்டப்பட்டன.

மதுரைக்குப் பெருமை சேர்த்த நாயக்க மன்னர்களுள் திருமலை நாயக்கர் தலைசிறந்தவராவார். அவர் திருமலைநாயக்கர் மகால் ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றைக் கட்டியதோடு அழகர்கோயில், திருபரங்குன்றம் கோயில் ஆகியவற்றிற்குத் திருப்பணி செய்தார். நாயக்கர் மரபில் வந்த பேரரசி ராணி மங்கம்மாள் தமுக்கம் என்ற பெயரில் ஒரு மாளிகையைக் கட்டினாள். 1786இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. மதுரைச் சீமை சென்னை மகாணத்தில் ஆங்கிலேய கவர்னர் ஆட்சிக்கு 1801-இல் கொண்டுவரப்பட்டது. இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் மதுரை சிறப்பிடத்தை வகித்தது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும், மதுரை மாவட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.

எல்லைகள் :

மதுரை மாவட்டத்திற்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகர் மதுரை ஆகும்.

வழிப்பாட்டுத் தலங்கள் :

மீனாட்சியம்மன் - சுந்தரரேஸ்வரர் கோவில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், மதுரை மாரியம்மன் கோவில் முதலியன மதுரை மாவட்டத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களாகும்.

மீனாட்சி அம்மன் கோவில் :

Meenakshi Templeகி.பி. 1560-இல் விசுவநாத நாயக்கரால் இக்கோவிலைக் கட்டும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது. இதனை முடிக்க சுமார் 120 ஆண்டுகள் ஆயிற்று. இங்கு அம்மனை வழிபட்ட பிறகே இறைவனை (சொக்க நாதர்) வழிபடுவது மரபாக உள்ளது. கோவில் விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரெண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு கணங்களும் தாங்குவது போன்று புராண கதையில் கூறியபடி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

கீழ்க் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்திற்குக் கோடு கிழித்தாற் போன்று சரியாகச் சிவலிங்கப் பெருமான் வழியாகப்போகிறது. வடக்கு தெற்குக் கோபுரங்களும் சுந்தரேசர் திருக்கோயிலை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். தமிழ்நாட்டுச் சிற்பிகளின் திறனுக்கோர் எடுத்துக்காட்டாய் இதைக் கொள்ளலாம். முக்குறுணி விநாயகர் உருவம் மாபெரும் வடிவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சந்நிதிக்குள் நுழையும் வாயிற்கதவுகள், முக்குறுணி பிள்ளையாருக்கு அருகேயுள்ள கதவுகள், தெற்குக் கோபுரத்திற்குக் கீழேயுள்ள கற்தூண்கள் ஆகியவற்றில் கண்கவர் நடனக் கலைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

புராணக்கதைகளை விளக்கும் பல கதைச் சிற்பங்கள் கிழக்கு மேற்குக் கோபுரங்களில் காணப்படுகின்றன. மண்டபத்தூண் ஒன்றில் யானைத் தலை, பெண் உடல், புலிக்கால் ஆகியவற்றைக் கொண்டச் சிற்பம் காணத்தக்கது. திருமணமண்டபம். கம்பத்தடி மண்டபம் ஆகியவை கலையழகுடன் அமைந்துள்ளன.

கோயிலின் பல பகுதிகளிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பேணி வைக்கப் பட்டுள்ள பழங்காலத்து நாணயங்களையும் பார்வையிடலாம். சங்க காலத்துப் புலவர் களின் திருவுருவங்கள் உள்ளன. திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலியன பொறிக் கப்பட்டிருப்பதையும் காணலாம். தலவிருட்சமாக விளங்கும் கடம்ப மரத்தின் எஞ்சிய பகுதி வெள்ளித் தகடால் போர்த்தப்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டிற்குப் பயன்படும் மலர்ச்செடிகள், குளத்திற்குள் வைக்கப்பட்டிற்கும் பொற்றாமரை முதலியன பார்க்கத் தக்கவை. காலங்காலமாகக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மாறுதல்களை இந்தக் கோவிலிலே கண்டறியலாம்.

அவ்வவ் காலத்து ஆடைகளையும் அணிகலன்களையும் பழக்க வழக்கங்களையும் கூட இக்கோயில்தூண் சிற்பங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பக்தர்களுக்கும், புராண ஈடுபாடு உடையவர்களுக்கும், திருவிளையாடற் புராண கதைகளை அறிய விழைபர்களுக்கும் இக்கோயில் ஒப்பற்ற கருவூலமாகத் திகழ்கிறது. மொட்டைக் கோபுரத்தின் அடியில் உள்ள தூண்கள் இசை எழுப்புகின்றன. பலவகை உயிரினங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ள திறனையும், இவற்றை வாகனங்களாக உருவாக்கியுள்ளதையும் கண்டு மகிழலாம்.

மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் அஸ்த சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் மதுரை இளவரசி மீனாட்சியின் கதையையும், சிவனின் அவதாரமாகிய சுந்தரேஸ்வரருடையத் திருமணத்தைப் பற்றியும் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் இருக்கும் இடத்தில் தான் பழைய தமிழ் இலக்கிய கழகமான சங்கத்தின் இலக்கியச் சந்திப்பும், பரிசளிப்பும் நடந்தேறியது. இக்குளத்தில் மூழ்கிய பிரதிகள் தவிர்க்கப்பட்டன. மிதந்த பிரதிகள் மாபெரும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இக்குளத்தின் மேற்கு கோடியில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் இங்கு மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் ஊஞ்சலாடும் வைபவம் நடை பெறுகிறது. இம்மண்டபத்திற்கு அடுத்து கிளிக் கூட்டு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மீனாட்சியின் பெயரை உச்சரிக்கும் கிளிகள் உள்ளிட்ட பல சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப் பட்டுள்ளன. இம்மண்டபத்தின் பின்புறம் மீனாட்சி உள்ள கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வசந்த மண்டபம் அல்லது புதுமண்ட பத்தில் மீனாட்சி திருமண நிகழ்ச்சிகள் பல காணப் படுகின்றன. மற்றும் இராவணன் கயிலாய மலையைத் தூக்கியது, சூரிய சந்திரர் யானைக்குக் கரும்பு வழங்கியது முதலிய சிற்பங்களும் காணத்தக்கவையாகும். இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பெற்றது. ஏப்ரல்-மே மாதங்களில் வரும் வசந்த விழா இம்மண்டபத்தில்தான் கொண்டாடப்டுகிறது. மீனாட்சிக் கோயிலுக்கு கிழக்கே 5கி.மீ. தொலைவில் உள்ள குளம் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.

இக்குளத்தின் நடுவில் விநாயகர் கோவில் இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் கொண்ட பரப்பின் அளவுக்கு தெப்பக்குளமும் அமைந்துள்ளது. ஜனவரி-பிப்ரவரியில் இங்கு தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நடைபெறும்போது இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்தக் குளம் 1646-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. வைகை ஆற்றிலிருந்து புதை குழாய்கள் மூலம் இக்குளத்திற்கு நீர் வரும் விதத்தில் இக்குளம் கட்டப்பட்டுள்ளத.

மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப் பெறும் வைரக் கிரீடம் 470 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் ஆறு கிலோ கிராம் தங்கத்தால் ஆனது. முத்து விதானம். நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை யுயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள், மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை. இவற்றைப் பார்க்க விரும்புவோர் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பார்வையிடலாம்.

ஆயிரங்கால் மண்டபத்தில் உண்மையில் 985 தூண்களே உள்ளன. இம்மண்டபத்தில் கோயில் அருங்காட்சியகம் உள்ளது. இக்கோயில் 6 ஹெக்டேர் பரப்பில் கட்டப் பட்டுள்ளது. பெரியத் திருவிழாக்கள் சித்திரையிலும் மாசியிலும் நிகழ்சின்றன.

சித்திரை சித்திரைத் திருவிழா (மீனாட்சி திருமணம்)
வைகாசி வசந்த விழா (விசாக விழா)
ஆனி ஊஞ்சல் விழா
ஆடி முளைக் கொட்டு விழா
ஆவணி பிட்டுத் திருவிழா
புரட்டாசி நவராத்திரி விழா
கார்த்திகை தீபவிழா
மார்கழி திருவாதிரை
தை தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா

மாசி - தை மாத மக நட்சத்திரத்தில் தொடங்கும் நாற்பது நாள்விழா
பங்குனி - பங்குனி உத்தரவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூடும் சுற்றுலாத் தலமும் ஆகும்.

மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில் :Meenakshi Sundaresvarar Temple

மதுரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கோச்சடை என்னும் ஊரில் இக்கோவில் எழுந்துள்ளது. கருவறையில் லிங்கம் உள்ளது. கருவறையின் தெற்கே உள்ள அறையில் மீனாட்சி அம்மன் காணப்படுகிறது. முக மண்டபத்தில் மூன்று இடம்புரி விநாயகர் உருவங்களும், சுப்ரமணியர், நந்தி ஆகிய உருவங்களும் உள்ளன. இவ்வுருவங்களில் நந்தியே மிகப் பழமையானது. இதன் காலம் பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பர். இச்சிலை சுமார் 1900 ஆம் ஆண்டில் வைகைக்குத் தென் கரையில் ஒரு மேட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நந்தி உருவம் கால்களை மடக்கி, முகத்தை இடப்பக்கம் திருப்பி, செங்கொம்புகளுடனும் கொம்புகளை ஒட்டிய இலை போன்ற காதுகளுடனும் வடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்தியின் கொண்டை சரிந்த நிலையில் தெரிகிறது. கழுத்தில் இரட்டைக் கயிறும், சங்கிலி கோத்த சலங்கையும், ஒற்றை மணியும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கால்களிலுள்ள குளம்பும், வாலும் கூட சிறப்பாக அமைந்துள்ளன.

கம்பத்தடி மண்டபத்தில் நடராசர் வழக்கத்திற்கு மாறாக இடக் காலை ஊன்றி வலக் காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார். இம்மண்டபத்தூண்களில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் ஒரு சுற்றுலாத் தலமாகும்.

திருபரங்குன்றம் :

Thiruparankunramஇது அறு படை வீடுகளுள் முருகனுக்கு உகந்த படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இரயில் நிலையம் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது. முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகன் கைவேலுக்கே அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். தேவாரப் பெருமைப் பெற்ற தலம். முருகனே இங்கு வந்து சிவப்பெருமானை வழிப்பட்டு பயனெய்தினார் எனவும், திருமால் முதலிய எல்லாத் தேவர்களும் முருகனைக் காண இங்கு வந்தனர் எனவும் புராணம் கூறுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கையும், பிரமகூவமும் புனிதத் தீர்த்தங்களாகப் போற்றப்படுகின்றன. 150 அடி உயரமுள்ள எழுநிலை மாடக் கோபுரத்துடன் தோன்றும் இக்கோயில் வயல்களும் பொழில்களும் சூழ்ந்த மலையைக் குடைந்து அமைக்கப் பட்டதாகும். இக்கோவிலில் தெய்வானை திருமணக் காட்சி, சுதை வேலைப்பாடுகள் கொண்ட தலப்புராணக் காட்சிகள், கோ பூசை செய்யும் உமையம்மை, பாற்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாள், இசையொலி எழுப்பும் பூதகணங்கள், மற்றும் இராணி மங்கம்மாள், மீனாட்சி, நாயக்கர் உருவங்கள், துளசி அறையிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கலையழகு மிளிர சிறப்பாக அமைந்துள்ளன.

திருப்பரங்குன்றம், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களையும், அருணகிரியார் திருப்புகழையும் பெற்றத் தலம். அகநானுறு, பரிபாடல், கல்லாடம் ஆகிய நூல்களில் சிறப்பிடம் பெற்றது. நக்கீரர் பூசை செய்த தலமாதலால், அர்த்த மண்டபத்தில் அவரது திருவுரு காணப்படுகின்றது. பங்குனி உத்திர விழாவில் நக்கீரர் உலாவரும் நிகழ்ச்சி ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது. இக்கோயில் பாண்டிய அரசர்களாலும், நாயக்க மன்னர் களாலும், நகரத்தார்களாலும், அரசினர் ஆதரவாலும், பொது மக்களாலும் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. ஆண்டுமுழுவதும் இக்கோயிலுக்குப் பல்லாயிரம் மக்கள் வருகை தருகின்றனர். இது ஒரு சுற்றுலாத் தலமும் ஆகும்.

அழகர் கோவில் :

Azhagarkoilதொன்றுதொட்டு முருகனின் படைவீடாக விளங்கியது. பிற்காலத்தில் வைணவப் பதியாகவும் விளங்கியது. சில நூற்றாண்டுகள் முருகன் திருக்கோயிலை இழந்த நிலை கொண்டது. 1960 முதல் இருவகைச் சிறப்பும் பெற்றுத் திகழ்கிறது. இத்தலம் மதுரை மாநகரிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிடாரிப்பட்டி என்னும் ஊராட்சியுள்
அழகர் மலை அடிவாரத்தில் அழகர் கோவில் உள்ளது. இக்கோயில் பல மண்டபங் களையும் சிற்பச் சிறப்புடைய திருவுருவங்களையும் உடையது. மூலவர் பெயர் கள்ளழகர். கல் அழகர் என்னும் பெயரும் இவருக்குண்டு.

மீனாட்சியின் சகோதரனான கள்ளழகர், மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்த்தார். நேரங்கழித்து திருமணவிழாவிற்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது கொண்டாடு கிறார்கள். அழகர் கோவிலிலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்கத்திலான அழகர் திருவுருவத்தை சுமந்துக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி முடிந்த கட்டத்தில் இவ்வூர்வலம் வைகை கரையை அடையும்.

இந்நிகழ்ச்சிக்கு மாறாக, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்களில் மீனாட்சியின் திருமண விழாவை விஷ்ணு தவிர்ப்பதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அழகர்க்கு மலர்சூட்டி, தேனும் திணைமாவும் படைக்கின்றனர். அர்ச்சனைக்கு அரளிப் பூவே பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் உள்ள விஷ்வச்சேனர் இரு திருக்கரங்கள் மட்டுமே கொண்டிருக்கிறார். மேலும் இவர்தம் நாச்சியாருடன் காட்சி தருகிறார். கரு வறையில் சோலைமலைக் குமரனின் வெள்ளி வாகனம் இருக்கிறது. சக்கரத்தாழ் வாருக்கும் மூலவருக்கும் வெள்ளிக்கிழமை சஷ்டி நாட்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அபிஷேகம் செய்கின்றனர். இன்னும் வலம்புரி விநாயகர், வயிரவர், கலியான சுந்தரவல்லி, ஆண்டாள், சாலிக்கிராமம் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

அழகர் கோயிலில் கருடன் பறக்காது என்பது நம்பிக்கை. அழகர் மலைத் தொடரின் இயற்கைச் சிறப்பினை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மலைத்தொடரின் உயர்ந்த பகுதியில் சமணத் துறவியார் வாழ்ந்த இடம் பஞ்ச பாண்டவர் படுக்கை என்று வழங்குகிறது. புத்த, சைவ, வைணவப் பெருமக்கள் இம் மலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இம்மலை மீது பல சுனைகள் உள்ளன.

அனுமார் தீர்த்தமும் நுபுரகங்கைத் தீர்த்தமும் உள்ளன. மூலவாவி என்னும் குளம் நாக்கீரர் உண்டாக்கியது. இதிலAzhagarkoil் வேனிற்காலத்தில் நீர் மிகுந்தும், மாரிக் காலத்தில் நீர் குறைந்தும் இருக்கும். இவை தவிர, சரவணப் பெய்கை என்னும் தெப்பக்குளமும், சக்கரதீர்த்தமும் உள்ளன. அமாவாசை நாளில் அழகர் கோவிலுக்குத் திரளாக மக்கள் செல்கின்றனர். அழகர் கோவிலில் கள்ளர் ஒருவர் அறங்காவலராக இருப்பது மரபு. தேர்வடம் பிடிப்பவர்களாதலால் இவர்களுக்குப் பரிவட்டம் முதலியன கட்டும் மரபு திருவிழாக்களில் இருந்து வருகிறது. இங்குள்ள பதினெட்டாம்படி கறுப்பனசாமி கள்ளர் சமூகத்தார் வழிபடும் தெய்வங்களுள் தலைமையானது. இதற்கு உருவம் கிடையாது.

கோவில் பிரசாதமாக பெரிய அளவில் செய்யப்படும் நெய்தோசை பனையோலைப் பெட்டியில் வைத்து வழங்கப்படுகிறது. விமானத்துக்குப் பொன்தகடு போர்த்தி இக் கோவில் திருப்பணியைச் செய்தவர்கள் பாண்டிய மன்னர்கள். திருமலைநாயக்கர் கோயிலைச் சுற்றி கோட்டை, பள்ளியறை மண்டபம் முதலியவற்றைக் கட்டினார். இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் தந்தையார் பெயரால் இரணியவர்மன் கோட்டை கட்டப்பட்டதென்பர். பரிபாடல், சிலப்பதிகாரம், திருப்புகழ், அழகர் அந்தாதி ஆகியவையும் இத்தலப் புகழைப் பாடியுள்ளன.

பழமுதிர்ச்சோலை:

Pazhamuthir Solaiஅழகர் கோவிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்கு பழங்காலத்திலிருந்து முருகன் கோயில் எவ்வாறோ மறைந்து, பிறகு எருத்துமலை எனப்படும் இடமலையில் மீண்டும முருகன் கோயில் கட்டப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் அருள் வழங்கும் வெற்றி வேல் முருகன் உருவம் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. விசாகம், சஷ்டி போன்ற முக்கியச் சிறப்பு வாய்ந்த நாட்களில் மக்கள் ஏராளமாக இங்கு வருகை தருகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

செல்லத்தமன் கோவில் :

சிம்மக்கல்லுக்கு தெற்கே உள்ள இக்கோயிலைக் கண்ணகிக் கோவிலாகக் கருது கின்றனர். இக்கோவிலில் ஒற்றைச் சிலம்பை கையிலேந்திய நிலையில் கண்ணகி திருவுருவம் காணப்படுகின்றது.

மாரியம்மன் கோவில் :

வண்டியூரிலுள்ள மாரியம்மன் கோவிலும் கண்ணகி கோவில்தான். கண்ணகி மழைவளம் சுரக்கச் செய்த காரணம் கருதி, கண்ணகியை மாரியம்மன் என்றனர். ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பெண்கள் பெருங் கூட்டமாக இக்கோயிலுக்கு வருகின்றனர்.

சீனிவாசப் பெருமாள் கோவில் :

கல்லாக்குளத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு புராதன வைணவக் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியது.

மதன கோபாலசாமி கோவில் :

நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட இக்கோயில், மதுரையில் தெற்கு, மேற்கு மாசி வீதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இதில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு கால் மண்டபம் இருந்ததாகவும், அதிலிருந்த சிற்பங்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடல்பியா அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில், மேலே குறிப்பிட்ட மண்டபம் ஆகியனப் பற்றி பேரறிஞர் நார்மன் என்பவர் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

உமையாண்டவன் கோவில் :

திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் உள்ள இது குகைக் கோயிலாகும். இங்கு உமை யொருபாகன், பஞ்சமுக கணபதி, ஆறுமுகன், வயிரவர், நடராசர் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர் கலையைப் பின்பற்றி பாண்டியர் அமைத்த கோயிலாகும்.

காசி விசுவநாதர் கோவில் :

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக் கோவிலுக்கு அடிவாரத்திலுள்ள முருகன் கோவில் திருக்கைவேல் எடுத்துக் செல்லப்பட்டு விழா எடுக்கப்படுகிறது. இக்கோயிலின் அருகே காசிச் சுனை இருக்கிறது.

அம்மாட்சி அம்மன் கோவில் :

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கருவறையில் சங்கும் சக்கரமும் ஏந்திய துர்கைச் சிலை உள்ளது.

முத்தையா கோவில் :

நின்ற நிலையில் கையில் அரிவாளும் கதையும் ஏந்தி விளங்கும் இவிவிறைவனை சேரி வாழ்நர் வழிபடுகின்றனர்.

பிட்டு வாணிச்சியம்மன் கோயில் :

இக்கோவிலில் வழிப்படப் பெறும் சப்த கன்னிகைகளுக்கு இவ்வூரார் பிட்டு வாணிச்சி யம்மன் என்று பெயரிட்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தில் சிவம்பெருமானுக்குப் பிட்டு அளித்த வாணிச்சி இப்பகுதியில் பிட்டு விற்றதாக வரலாறு. இன்றும் மதுரையில் நடைபெறும் பிட்டுத் திருவிழாவின் போது அமைக்கப்படும் மண்டபத்தின் ஒரு கால், கோச்சடை செட்டியார்களுக்கு உரியது. கோச்சடை நாட்டாண்மைக் காரருக்கு அவ்விழாவின் போது பரிவட்டம் கட்டப்படுகிறது. வைகை ஆற்றில் சிவபெருமான் குளிக்க, ஊற்று வெட்டும் உரிமை கோச்சடை செட்டியார்களுக்கே உரியது.

நாகர் கோயில் :

நாகர் கோயில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் முகமண்டபத்தில் எண்ணிடலங்கா நாகர் உருவங்கள் உள்ளன. மக்கட்பேறு இல்லாதவர்கள், அப்பேறு வேண்டி நேர்ந்து கொள்வதும், குழந்தை பிறந்த பிறகு நாகர் உருவத்தைப் பிரதிட்டை செய்வதும் வழக்கம். மதுரையில் பிராமணர்கள் கூட இம்மரபைப் பின்பற்றி வழிபடு கின்றனர்.

முத்தண்ணன் கோவில் :

மதுரையில் நாயக்கர் காலத்தில் குடியேறிய மறவர் குலத்து மக்கள், வேம்பு அரசு போன்ற மரங்களின் கீழ் முத்தண்ண சுவாமி வடிவத்தை அமைத்து வழிபடுகின்றனர். முத்தையா கோவில் பிரகாரத்தில் சன்னாசி, ஆதிபூசாரி, பேச்சியம்மன், முத்துக் கருப்பணசாமி, இருளப்பசாமி, வீரண்ணன் சாமி, இராக்காயி அம்மன், இருளாயி அம்மன், சப்பாணிச் சாமி, சேனைச் சாமி முதலிய தேவதைகள் சுடுமண்ணால் செய்யப் பட்டு வழிபடப்படுகின்றன. வனப்புமிகு சுடுமண் சிற்பங்களை இக்கோவிலில் கண்டு மகிழலாம். மூன்று மீட்டர் உயரமுள்ள நீண்ட குதிரை உருவத்தின் மீது கடுஞ்சீற்றத்துடன் முத்தையாவின் உருவம் காணப்படும். குதிரையின் பின்புறத்தில் அம்புகளும் வில்லும் காணப்படுகின்றன. இவை கிராமத் தெய்வங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

முனியாண்டிக் கோவில் :

கிராமத் தெய்வமாக முனியாண்டியையும் இம்மாவட்டத்து மக்கள் பெரும்பாலோர் வழிபடுகின்றனர். முனியாண்டிக் கோவில் இல்லாத கிராமம் மிகச்சிலவே.

வாதபுரீசுவரர் கோவில் :

பழைமையும், எழிலார்ந்த தோற்றமும், அழகிய வேலைப்பாடும் கொண்டு பெரிய அள வினதாய் இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான ஆட்சிக்குட்பட்டது. ஐந்தடுக்கு கோபுரம் கொண்ட இக்கோயிலின் உட்பகுதியில் சிற்ப வேலைப்பாடு கூடிய மண்டபம் இருக்கிறது. சைவ சமண வாதம் நிகழ்ந்த மண்டபம் இதுவே. இது மாணிக்கவாசரால் கட்டப்பட்டதென்றும், இம்மண்டபம் நூறு தூண்களைக் கொண்டதாக விளங்கியது என்றும் சொல்லப் படுகிறது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சனி, ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று கடவுளருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் காணப்படுகின்றன. மாணிக்கவாசரது மூலத்திருவுருவமும் உற்சவ உருவமும் இக்கோவிலில் உள்ளன.

ஆவணி மூல விழாவுக்கு உற்சவ உருவ மாணிக்கவாசகர் மதுரைத் தலைநகர்க்கு எடுத்துச் செல்லப் படுகின்றார். நடராசருக்கு இக்கோவிலில் தனிச் சந்நிதி உண்டு. மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இது திருவாதவூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கண்ணொளி பெற மக்கள் வழிபடும் முழிச்சிப் பிள்ளையார் கோவிலும், திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளன. திரெளபதி அம்மன் தீமிதி விழா சிறப்பானதாகும். இது சங்கப்புலவர் கபிலரும், பாண்டியனின் தலைமை அமைச்சரான மாணிக்கவாசரும் பிறந்த ஊராகும்.

சுந்தர பாண்டியன் கோயில் :

மருதூரில் உள்ள இக்கோயிலை உள்ளுர் மக்கள் கிருஷ்ணன் கோயில் என்கின்றனர். இக்கோயில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட வைணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் முகமண்டபத்தின் புறச்சுவர்களில் பாண்டியர், சோழர் கல் வெட்டுகள் காணப்படுகின்றன.

திருச்சுனைச் சிவன் கோயில் :

இக்கோயில் கருங்காலங்குடி என்னும் ஊரில் குன்றின் மீது பொலிவுடன் அமைந்துள்ளது. பாண்டியரால் கட்டப்பட்ட இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவுப்படுத்தப் பெற்றுச் சிறப்படைந்தது.

பள்ளிவாசல்களும், தர்க்கார்களும் :

மதுரை நகரில் காஜியார் தெரு பள்ளிவாசல், முனிச்சாலைப் பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல், கட்ராப் பாளையம் தெரு பள்ளிவாசல், யானைக்கல் அருகிலுள்ள சங்கம் பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல் ஆகிய முக்கிய பள்ளிவாசல்கள் இருக்கின்றன. கி.பி. 1759 முதல் 1764 வரை மதுரையை ஆட்சி செய்த கான் சாகிப்பின் சமாதி மீது எழுப்பட்டுள்ள தர்கா அரசரடி சம்மட்டிப்புரத்தில் உள்ளது.

மதுரை தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் தர்காவும், மேற்குவாசல் சின்னக்கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் தர்காவும் உள்ளன. கோரிப்பளையம் தர்கா மிகப் பழைமையானது. இங்கு மதுரையை ஆட்சி செய்த சுல்தான்கள் என்று கருதப்படும் சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா. சையத்சுல்தான் சம்சுதீன் அவுலியா என்ற இருவரின் சமாதி உள்ளது. இத்தர்காவில் காணப்படும் பல அம்சங்கள் இந்துகோயில் கலைச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. தர்காவின் மீது ஒற்றைக் கல்லாலான மேற் கூரை அமைக்கப்பட்டுள்ளது சிறந்த தொழில் நுட்ப சாதனையாகும்.

கிறிஸ்துவ ஆலயங்கள் :

புனித மரியன்னை தேவாலயம் கார்னியர் என்னும் பாதிரியாரால் 1842-இல் கட்டப்பட்டு, டிரிங்கால் பாதிரியார் காலத்தில் விரிவுப் படுத்தப்பட்டது. இது திருமலை மன்னர் அரண்மனைக்கருகில் உள்ளது. கோபுரங்களின் உயரம் சுமார் 45 மீட்டர். அழகிய வளைவுகளைக் கொண்டு, கவினுறக் காணப்படும் இப்பேராலயம் ஐரோப்பியக் கட்டிடக் கலை நுணுக்கங்களால் சிறப்புகிறது. மதுரையில் இதுவே கத்தோலிக்கரின் மிகப் பெரிய ஆலயமாக உள்ளது.

தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள லூர்து அன்னை ஆலயம், மதுரை இரயில்வே காலனியில் உள்ள திரு இருதய ஆலயம், மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கி.பி.1800-இல் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் ஆலயம், மதுரை பொன்னகரத்தில் 1920-இல் கட்டப்பட்ட வெப்நினைவாலயம், மதுரை கோரிப்பாளையம் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் அமெரிக்க மிஷனரியால் கட்டப்பெற்ற ஆலயம் முதலியன முக்கிய கிருத்துவ ஆலயங்கள் ஆகும்.

சுற்றுலாத் தலங்கள் :

மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில், பழமுதிர் சோலை (இவைபற்றி காண்க: வழிட்டுத் தலங்கள்) திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் முதலியன இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாகும்.

திருமலைநாயக்கர் மகால் :

Thirumalainayakar Mahalநாயக்க மன்னர்களுள் வரலாற்றுப் புகழ் படைத்து அன்றும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்பவர் திருமலை நாயக்கர் ஆவார். இவர் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், தெப்பக்குளம், மகால், புதுமண்டபம் முதலியன இவரது புகழுக்கு அழியாத சின்னங்களாய் விளங்குகின்றன. திருமலை மன்னர் இறந்து 300 ஆண்டுகள் ஆயினும், மகால் புதுப்பிக்கப்பெற்று தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளது. புதிதாக அருட்காட்சிக் கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.

திருமலை நாயக்கர் அரண்மனையான மகால் மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. கி.பி.1523-இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்றிருப்பதை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்தது. நாயக்கர்களின் கட்டிடக் கலையை நன்கு அறிவதற்கு இந்த அரண்மனை சிறந்த சான்றாக இருக்கிறது. இப்போது பார்வையாளர் கூடமாக இருக்கும் ஸ்வர்க விசாலம் இந்த அரண்மனையில் பெரிதும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இங்குள்ள எந்த ஆதார பீடமும் இல்லாமல் 20 மீட்டர் உயரத்தில் கட்டப் பட்டுள்ள குவிந்த கூரை அமைப்பு நாயக்கர் கால பொறியியல் திறனுக்கு வியத்தகு சான்றாக இருக்கிறது. எல்லா நாட்களிலும் திருமலை நாயக்கரின் வாழ்க்கை வரலாறும், சிலப்பதிகாரமும் ஒலி-ஒளி காட்சிகளால் காட்டப்படுகின்றன.

இம்மாகாலை கட்டி முடித்து 300 ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடத்தைக் கட்டி முடிக்க முப்பத்தாறு வருடங்களThirumalainayakar Mahal் ஆயின. கடம்பவனமாயிருந்த இந்த இடத்தை அழித்து, வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து மண் எடுத்து வந்து கட்டிடத்தைக் கட்டினார்கள். மண்வெட்டின இடம் பள்ளமாகிப் போனதும், அதைத் தெப்பக்குளமாகத் திருமலை நாயக்கர் மாற்றி விட்டார். தூண் ஒன்றின் உயரம் 20 மீட்டர். சுற்றளவு 4 மீட்டர். துணை வளைத்துப் பிடிக்க மூன்று பேர் கைகோத்து நிற்க வேண்டும். கடுக்காச்சாறு, கரும்புச்சாறு, அரபு நாட்டுச் சுண்ணாம்பு, பதனீர் இவ்வளவும் சேர்த்து சாந்து கூட்டிக் கட்டப்பட்டதென்பர். பத்துத் தூண் சந்து, மகாலுக்கு வடக்கே உள்ளது. இங்குள்ள 20மீ உயரமுள்ள கருங்கல் தூண்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறுவர். மகாலில் அந்தபுரமும் நாளோலக்க இருக்கையும் காணத் தக்கவையாகும். தினமும் காலை 9 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.

காந்தி அருங்காட்சியகம் :

Gandhi Mandapamராணி மங்கம்மாள் கட்டி வாழ்ந்த பழைய அரண்மனையில் இப்போது காந்தி அருங் காட்சியகம் இயங்குகிறது. இது தமுக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் வாழ்ந்த ஆசிரமும், அவர் பயன்படுத்திய பொருள்களும், புத்தகங் களும், எழுதிய கடிதங்களும், அவருடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் படங்களும் ஓவியங்களும் காணத்தக்கவை. காந்தியடிகள் கொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டியும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகம் இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அறிய உதவுகிறது. இங்குள்ள திறந்தவெளி அரங்கத்தில் காந்தியம் பற்றி விரிவுரைகளும் வகுப்புகளும் நடைபெறுகின்றன. தென்னக கிராமியத் தொழில்களால் உருவான கைவினைப் பொருட்காட்சி இங்கு நிரந்தரமாக நடைபெறுகிறது. காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை திறந்துவிடப்படுகிறது. புதன் கிழமை விடுமுறையாகும்.

முக்கிய ஊர்கள் :

மதுரை :

Maduraiவரலாற்றுச் சிறப்பு பெற்றிருப்பதுடன், மக்கள்தொகை செறிந்த நகரமாயும் மதுரை மூதுர் திகழ்கிறது. இதன் வேறு பெயர்களாவன : நான்மாடக் கூடல், தென்மதுரை, ஆலவாய், சிவராசதானி, கடம்பவனம். மதுரை, நாகமலைக்கும் யானைமலைக்கும் இடையே வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைப்பு தாமரை மலர் போன்று அமைந்துள்ளது. கோயிலை மையமாக வைத்து அதன் கிழக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் வடக்கேயும் திக்கின் பெயரால் நான்கு வீதிகள் உள்ளன. நான்கு திக்குகளில் பரவிய வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு சின்னச் சதுரமாகும்.

ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி எனத் தமிழ்த் திங்கள்களின் பெயர்களை நகரின் வீதிகள் சூடியுள்ளன. ஆடி வீதி கோயிலுக்குள் உள்ளது. மதுரை ஒரு மாநகராட்சி ஆகும். பாடு தமிழ் வளர்த்த கூடல், தமிழ் கெழு கடல், மதுரை மூதுர், மாண்புடை மரபின் மதுரை, மதுரைப் பெரு நன்மாநகர், மணிமதுரை, மாடமதுரை மாநகர் என இலக்கியங் களில் மதுரை சிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரும் இந்நகரத்தை கோவில் மாநகர் என்றும், விழா மிகுந்த நகர் என்றும், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றும் புகழ்ந்திருக் கின்றனர்.

புராண வரலாறு : திருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் வரலாறைக் கூறுவ தாகும். அதில் காணும் கதைகளுக்கேற்ற அடையாளச் சின்னங்களை மதுரையில் இன்றும் காணலாம். ஏழுகடல் தெருவிலுள்ள குளம் மதுரை அரசி காஞ்சனமாலைக்காக ஏழு கடல்களையும் மதுரைக்கு அழைத்த கதையின் சின்னமாக விளங்குகிறது. வைகை ஆறு குண்டோதரனின் தாகத்தைத் தணிக்க ஏற்பட்டது. சமணர் மதுரையை அழிக்க அனுப்பிய பசு, நாகம், யானை இம்மூன்றின் பெயர்களில் மூன்று மலைகள் திகழ் கின்றன. பசுவை வெல்வதற்கு அனுப்பப்பட்ட இடபமும் ஒரு மலையாகி அழகர் மலை என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.

மாணிக்கவாசருக்காக சொக்கநாதர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி. பின்னர் குதிரைகள் நரிகளாகச் சென்ற இடமே செல்லூர். அந்நரிகள் கத்திச் சென்ற இடம் கத்துநரி என்பது. இப்பொழுது தத்தனேரி என வழங்குகிறது. அந்நரிகள் ஒன்றை யொன்று தொடர்ந்து சென்ற இடம் தோடனேரி எனப்படும். மண்டியூர் என்பது வண்டியூர் என்றாகியுள்ளது. குதிரைகள் வந்தபொழுது இங்கு புழுதி மண்டியதால் இப் பெயர் பெற்றது. பாண்டியன் குதிரைகளை விலை மதிப்பிட்ட இடம் மதிச்சயம். பாண்டியர்களின் அரண்மனை இருந்த இடம் மாநகர். வெள்ளியம்பலத் தெரு, சிவ பெருமான் கால் மாற்றி ஆடியதைக் குறிப்பது. வலைவீச்சுத் தெப்பக்குளம், அவர் மீன் பிடித்த திருவிளையாடல் நிகழ்ச்சியைச் சார்ந்தது.

வளையல்காரத் தெரு அவர் வளையல் விற்ற திருவிளையாடலால் பெயர் பெற்றது. அவர் பிட்டு விற்ற இடம் பிட்டுத் தோப்பு. அவர் குண்டோதரனுக்குச் சோறு இட்ட இடம் அன்னக்குழி மண்டபம். பழங்காநத்தம் என்னும் மதுரையின் புறநகர்ப் பகுதி யிலுள்ள இடுகாடு கோவலன் பொட்டலாகும். இவ்விடத்தில்தான் கோவலன் கொலை யுண்டதாகக் கூறுவர். மதுரையில் இரவு முழுவதும் கடைகள் பெரும்பாலும் திறந்திருக் கின்றன. மதுரையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மல்லிகைத் தோட்டங்கள் மிகுதி யாதலால். இங்கிருந்து தினந்தோறும் மாலையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு மல்லிகைப் பூக்கள் விமானம் மூலம் ஏற்றுமதியாகின்றன.

உத்தங்குடி :

ஒத்தகடைக்கும் தல்லாகுளத்திற்கும் இடையே இவ்வூர் உள்ளது. அரசினர் தொழிற் பேட்டை இவ்வூரருகே அமைந்துள்ளது.

வெளவால் தோட்டம் :

ஆனை மலைக்குள் உள்ள வெளவால் போன்ற ஒரு குகைக்கு இப்பெயர் வழங்குகிறது.

ஆண்டார் கொட்டாரம் :

பாண்டியர்களின் அரண்மனைகள் இருந்த இடம். வரிச்சியூர்ச் சாலையில் தல்லாக்குளம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.

தாமரைப் பட்டி :

இக்கிராமத்து கண்மாயில் தாமரை மலர்ந்திருப்பதால் தாமரைப்பட்டி என்னும் பெயர் கொண்டது. சிட்டம்பட்டி இவ்வூராட்சிக்கு உட்பட்டது. சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தம் பட்டி என்றாகி, பிறகு சிட்டம்பட்டி என்று மருவிற்று.

திருமோகூர் :

இவ்வூர் மதுரையிலிருந்து 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்களும் அசுரர்களும் சமுத்திரைத்தைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தனர். அமிர்தம் நிரம்பிய பானையை அசுரர்களை ஏமாற்றி எடுத்துச் செல்வதற்காக விஷ்ணு அழகிய மோகினிப் பெண்ணாக மாறிய தலம் இது. திருமோகூரின் புராணப் பெயர் மோகனக் ஷேத்திரம் என்பதாகும். இவ்வூர் திருவாதவூர்ச் சாலையில் ஒத்தக் கடையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்ற தலம். வள்ளல் பழையன் என்ற குறுநில மன்னன் வாழ்ந்த ஊர். இவ்வூர் ஒரு போர்க்களமாக விளங்கி யதாக இலக்கியங்களால் அறிய முடிகிறது. இதைத் தென்புறம்பு நாட்டு மோகூர் எனவும் குறிப்பிடுவர். இது ஒரு சுற்றுலாத்தலமாகும்.

நரசிங்கம் :

கி.பி.8,9-ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புடன் விளங்கிய இவ்வூர், ஆனைமலையின் மேற்குக் கோடியில் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இரணியமுட்டம் என்பது இதன் பழைய பெயர். மலைபடுகடாம் என்ற சங்ககால நூலின் ஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் இவ்வூரினராவார். இவ்வூரிலுள்ள நரசிம்மர் கோவில் புகழ்பெற்றதாகும். தெற்கில், ஒரு தனிப்ாறையின் முகப்பில் 16 மீட்டர் உயரத்தில் வரிசையாக சமணத் துறவிகளின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் உள்ளன.

ஆனைமலை :

மதுரை மாநகருக்குக் கிழக்கே 10கி.மீ. தொலைவில் ஒரு ஆனை படுத்திருப்பது போன்று தோற்றம் பெற்று அமைந்துள்ளது. இது சமணத் துறவிகளின் இருப்பிடமாய் விளங்கியதாய் இலக்கியங்கள் கூறுகின்றன. இம்மலைக்கருகே வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சிபுரம் :

கழுகுகளின் எச்சம் இருந்ததால் இவ்வூர் மலைக்கு ஓவாமலை, கழுகுமலை என்று பெயர்கள் உள்ளன. இம்மலைக்கு எதிரில் பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து பசுமலை முதலிய எட்டுக் குன்றுகளும், மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களும், உலக்கைக் குத்திப்பாறையும் தெரிகின்றன. தமிழ்நாட்டிலேயே மிகப் பழைமையான கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) இங்குள்ளது. மீனாட்சிபுரத்திலிருந்து சொக்கர்பட்டி ஒரு கி.மீ. தருமத்து மலையில் குடவரைக் கோயிலும், அழகாபுரியில் பஞ்சபாண்டவர் படுக்கையும், மீனாட்சிபுரத்தில் பொழுது முகம் காணா ஊற்றும் உள்ளன. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக் காணப்படுகின்றது.

வண்டியூர் :

இது இராமநாதபுரம் செல்லும் சாலையில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இங்குத் தியாகராசர் கல்வி நிலையங்கள் உள்ளன. தைப்பூச நாளில் இங்குத் தெப்பத்திருவிழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

தல்லாக்குளம் :

மதுரை நகரில் வைகையாற்றுக்கு வடக்கே உள்ள பகுதியாகும். பல அரசு அலுவல கங்கள், கல்லூரிகள், காந்தி அருங்காட்சியகம், ராஜாஜி பொது மருத்துவமனை, தமிழ் இசை மன்றம் ஆகியவை இங்குள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதி சிறந்த வணிகத்தலமாகவும் விளங்குகிறது.

பரவை :

மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள ஊர். தொழிற்சாலைகள், சிறப்பாகப் பஞ்சாலை கள் நிறைந்த பகுதி. மீனாட்சி ஆலையின் கிளை ஒன்றும் இங்குள்ளது.

விளாங்குடி :

மதுரை-திண்டுக்கல் சாலையில் மதுரையின் புறநகர்ப் பகுதியான விளாங்குடி அமைந் திருக்கிறது. இரயில் நிலையம் உள்ளது. இப்பகுதியில் பாத்திமா கல்லூரி, நூல் ஆலை, மைதா மாவு ஆலைகள் உள்ளன. விசாலட்சி ஆலைக்குத் தென்கிழக்கே பாழடைந்த நிலையில் இரு கோவில்களும், தூர்ந்துள்ள தெப்பக்குளமும் காணப் பபடுகின்றன. இதைக் கோனேரி மண்டபம் எனக் குறிப்பிடுகின்றனர்.

தேனுர் :

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் வட எல்லையில் உள்ள சிறிய ஊர். நூலாலை, திருவேடகம் கோவில், டபேதார் சந்தை இவைகளால் இவ்வூர் சிறப்புறுகிறது.

பொதும்பு :

பொதும்பு என்பது சோலை. சோலையினுடே உண்டான ஊர் பொதும்பில் எனப்பட்டது. சங்கக் காலப் புலவர்கள் பொதும்பில் கிழார், அவரது மகனார் வெண்கண்ணியார் வாழ்ந்த சிற்றுர்.

திருப்பாலை :

மதுரை-நத்தம் சாலையில் உள்ள இவ்வூரில் யாதவர் கல்லூரி சிறப்புற நடைபெற்று வருகிறது. மாசி மாதத்தில் கிருஷ்ணர் கோவில் உற்சவம் நடைபெறுகிறது.

புதுப்பட்டி :

மதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் அழகர் கோவில் சாலையில் உள்ளது. 1971 முதல் தொழுநோயாளிகள் இல்லம் நடந்து வருகிறது. அறுவை சிகிச்சை வசதிகளும், தொழிற் பயிற்சிக் கூடங்களும் இங்குள்ளன.

கோச்சடை :

மதுரையிலிருந்து மேலக்கால் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை மாநகருக்குத் தேவைப்படும் குடிநீர் இங்குதான் தேக்கி வைக்கப்படுகிறது. பென்னர் போல்ட் தொழிற்சாலையும், நெல் அரைவை ஆலைகளும் இவ்வூரில் உள்ளன. இங்கு எப்பகுதியில் தோண்டினாலும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆற்றுமணல் கிடைக்கிறது.

அவனியாபுரம் :

மதுரைக்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய புல் பண்ணை ஒன்றை நகராண்மைக் கழகத்தார் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையம் இவ்வூரருகே அமைக்கப்பட்டுள்ளது. எருமை மாடுகள் மிகுதி. வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. கலப்பு உரத் தொழிற்சாலையும், கைத்தறி ஆலைகளும் உள்ளன.

விரகனுர் :

கத்தரிக்காய் இங்கு ஏராளமாய் விளைகின்றது.

மேலக்குயில் பட்டி :

இங்கு சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன.

கரடிப்பட்டி :

மதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ளது. குகையும் வட்டெழுத்துக் கல்வெட்டும், சமணர் உருவமும் உள்ளன.

பொன்மேனி :

இங்கு டி.வி.எஸ். சிங்கர் தையல் இயந்திர ஊசித் தொழிற்சாலை இயங்குகிறது.

சாம்பல் நத்தம் :

ஞான சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த அனல் பறக்கும் வாதத்தில் சமணர் களுடைய ஏடு தீயில் எரிந்து சாம்பலான இடமே சாம்பல் நத்தம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. மதுரைக்குத் தெற்கே நெடுங்குளம் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் சமானத்தம் என்றும் வழங்கப்படுகிறது.

புல்லுத்து :

இயற்கைக் காட்சி நிறைந்த பகுதியாதலால், சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த இடம். இவ்வூரில் கோழிப்பண்ணை நடைபெறுகிறது. இது கவரிமான்-சோழவந்தான் சாலையில் இருக்கிறது.

சிலைமான் :

இவ்வூரின் ஒரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும் இருக்கிறது. மதுரை-மானாமதுரைச் சாலையிலுள்ள இவ்வூர் வைகைக் கரையில் அமைந்து தென்னை மரங்கள் மிகுந்துள்ளது. சிமெண்டு குழாய்த் தொழில், ஓடு செய்யும் தொழில், நூலாலை முதலியவற்றால் சிறப்புற்று விளங்குகிறது.

தோப்பூர் :

இவ்வூரினைச் சேர்ந்த ஆஸ்டின்பட்டியில் காசநோய் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு நூலாலைகளுக்குத் தேவைப்படும் பாபின்கள் செய்யப்படுகின்றன.

பாரபத்தி :

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. மீனாட்சி சொக்கலிங்க ஆலயம் இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கிறது. அருகிலுள்ள புதுக் குளத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. திருப்பரங்குன்றத்து முருகனை திருவிழாக் காலத்தில் இங்கு எடுத்து வருகிறார்கள்.

விளாச்சேரி :

இது பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர். திருப்பரங்குன்றத்திலிருந்து 3.கி.மீ. தொலைவில் உள்ளது.

நாகமலை புதுக்கோட்டை :

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியாலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாலும் இவ்வூர் வளர்ச்சி பெற்று விளங்குகிறது.

ஹார்வி பட்டி :

1963 முதல் ஹார்விபட்டியை தமிழக அரசு நகரியமாக அறிவித்துள்ளது. மதுரை கோட்ஸ் மில் ஊழியர்களுக்காக இது ஏற்படுத்தப்பட்டது. ஆலைக்கும் இவ்வூருக்கும் இடையே இரயில் வசதி செய்யப்ட்டுள்ளது.

உறங்காம்பட்டி :

மேலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வளமான ஊர். மாசி மாதத்தில் நடை பெறும் மஞ்சு விரட்டு விழா பெரும்புகழ் வாய்ந்தது. உறங்காதவன்பட்டி என்பது உறங்காம்பட்டி என அழைக்கப்படுகிறது.

மேலூர் நகரம் :

மேலூர் 1978 முதல் நகராட்சியாக விளங்கி வருகிறது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இது வட்டத் தலைநகராகவும் ஒன்றியத் தலைநகராகவும் சிறப்புறுகிறது. பெரியாற்று வாய்க்கால் பாசனத்தால் வளம் பெற்றுத் திகழ்கிறது. பல அரசு அலுவலகங்கள் இருப்பதாலும், வணிகச் சந்தை நடைபெறுவதாலும் மக்கள் போக்குவரத்து மிகுதி. இங்கு கல்யாண சுந்தரர்-கமாட்சியம்மன் கோவில் உள்ளது. பல தொழிலகங்கள், கூட்டுறவு நூலாலை, கோழிப்பண்ணை, கலைக் கல்லூரி ஆகியன உள்ளன. திங்கள் கிழமை தோறும் சந்தை கூடுகிறது. வியாழன்தோறும் கடைகளுக்கு
விடுமுறை.

சூரக்குண்டு :

நீலநிற கத்தரிக்காய்க்குப் பெயர் பெற்ற இவ்வூர் சின்ன சூரக்குண்டு, பெரிய சூரக்குண்டு என இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது.

சுக்காம்பட்டி :

புதுச் சுக்காம்பட்டி மேலூர் நகராட்சியில் உள்ளது. பழைய சுக்காம்பட்டி தனி ஊராட்சி மன்றம். கோடையில் கத்திரி பயிராகிறது. தென்னை வளம் மிகுதி. சுக்கான் மிகுதியாகக் கிடைக்கிறது.

அரிட்டாப்பட்டி :

மேலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ளது. மேலூருக்கும் அழகர் கோயிலுக்கும் இடையே உள்ள சிற்றுர். இங்குள்ள கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைக் குறிப்பிடுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் தமிழ் வரிவடிவம் எவ்வாறிருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. பெருமலை எனப்படும் தனியிடத்தில் குடவரைக் கோயில், நடுவயலில் ஒரே கல்லாலான தேர், இளமை நாயகி அம்மன் கோயில், இடைச்சி மண்டபம் என்னும் குடவரைக் கோயில் முதலியன உள்ளன.

அம்பலக்காரன்பட்டி :

வெள்ளையனை எதிர்த்த வீரவரலாறு இவ்வூருக்கு உண்டு. இங்குள்ள வல்லடியான் கோவில் புகழ்பெற்றது. இத்தெய்வத்தைப் பற்றி நாட்டுப் பாடல்கள் பல வழங்குகின்றன.

திருக்கானை :

இது பூலாம் பட்டிக்கு அருகேயுள்ள சிற்றுர். இங்குள்ள காராளன் கோவில் மிகப் பழமையானது. இக்கோவிலில் கல்யானை உருவம் ஒன்றுள்ளது. அதைத் திசை திருப்பி விட்டால், சற்றுநேரத்தில் மீண்டும் இருந்த நிலைக்கே திரும்பிவிடும் என்கின்றனர்.

அ. வல்லாளப்பட்டி :

அழகர் கோவில் வல்லாளப்பட்டி, பீமலூர் - அழகர் கோவில் வழியிலுள்ள சிறு நகரம். வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. அழகர் மலையைப் பிண்ணணியாகக் கொண்டு இயற்கை எழில் நிரம்பி நிற்கிறது. இதை ஒட்டியுள்ள தெற்குத்தெரு எனப்படும் சிற்றுரில் மண்பானை வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது.

வெள்ளலூர் :

தொன்மையான ஊர். சோழரது ஆட்சியில் சிறப்புற்றிருந்தது. கரும்பு வளம் மிகுந்தது. வெள்ளலூர் நாடு என்பது இதன் பழையபெயர். காட்டுக்குள் ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது.

நாவினிப்பட்டி :

மேலூரிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இவ்வூரில் நூண் அலை நிலையம் அமைந்துள்ளது. மங்கள சித்தி விநாயகர் கோயிலும், காசி விசுவநாதர் கோவிலும் இவ்வூரில் உள்ளன.

மருதூர் :

இவ்வூர் கந்தப்பட்டிக்குத் தென்கிழக்கே 6கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை பிற்காலப் பாண்டியர் ஆட்சியைச் சேர்ந்த கண்ணாழ்வார் கோயிலைக் கண்டுபிடித்துள்ளது.

தும்பைப்பட்டி :

மேலூரை அடுத்துள்ளது. காங்கிரஸ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கனின் சொந்த ஊர். இவ்வூரில் பாண்டியர் காலத்தில் பல போர்கள் நிகழ்ந்ததைக் குறிக்கும் வகையில் சாலக்கியப்பட்டி என்னும் சிற்றுர் உள்ளது.

சொக்கலிங்கபுரம் :

தென்னந்தோப்புகள் நிறைந்த அழகான ஊர். இங்கிருந்து சற்றுத் தொலைவில் தொழில் பேட்டை அமைக்கப்பட்டுளளது. சிவன் கோவில் ஒன்றுள்ளது.

கொட்டாம்பட்டி :

எல்லை காத்த வீரர்கள் கொட்டம் அடித்த இடம் என்பதால் கொட்டாம்பட்டி என வழங்குகிறது. இது மேலூருக்கு வடக்கே 22கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே பறம்பு மலை உள்ளது. பாலாற்றுக்கு அருகே உள்ளது. ஊராட்சி மன்ற ஒன்றிய அலுவலகம் உள்ளதால் இவ்வூர் வளர்ச்சி கண்டுள்ளது.

திருச்சுனை :

மதுரை-திருச்சி நெடுஞ்சாலைக்குச் சற்று தெற்கே கருங்காலக்குடிக்கு அருகே உள்ளது. அழகிய சுனை ஒன்று உள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலும், அதில் கல்வெட்டுகளும் உள்ளன. நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்ட பதினாறு கால் மண்டபமும் காணப்படுகின்றது.

கருங்காலக்குடி :

இது திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் அமைந்த பழைய வளமான ஊர். இவ்வூர் மலைகளில் கருங்கல் தகடு கிடைக்கிறது. சிறந்த வேலைபாட்டுக்குரிய கற்களும், கட்டிடங்களுக்குத் தேவைப்படும் கற்களும், சிகைகாய்ப்பொடி செய்ய உதவும் உசிலை இலையும் ஏற்றுமதியாகின்றன. ஊரின் குன்றின் மேலமைந்த திருச்சுனை சிவன் கோயில் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். இது பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர்களால் செப்பனிடப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கல்லறைப் படிவங்கள் உள்ளன. இங்கு சமண தீர்த்தங்கரர் உருவம் உள்ளது.

சமயநல்லூர் :

மதுரைக்கும் சோழவந்தானுக்கும் இடையில் அமைந்துள்ளது. இரயில் மற்றும் சாலை வசதிகள் பெற்றுள்ளது. டி.வி.எஸ். தொழிற்கூடமும், தொழிலாளர் குடியிருப்புகளும், கத்தோலிக்க தேவாலயமும், அதன் கல்வி நிலையமும் இவ்வூருக்குப் பெருமை சேர்க் கின்றன. ரோஜா மலர்கள் இங்கு ஏராளமாய் விளைவிக்கப்படுகின்றன. இவ்வூரருகே உள்ள டபேதார் என்னும் சிற்றுரில் திங்கட்கிழமைதோறும் சந்தை கூகிறது. இச் சந்தையில் தோல் வாணிபம் முக்கியமாய் நடைபெறுகிறது.

திருமங்கலம் :

சிறுநகரம். குண்டாற்றின் வடகரையிலும், மதுரைக்குத் தென்மேற்கிலும் அமைந்தது. மதுரை விருது நகர் இரயில் பாதையில் முக்கிய ஊராய்த் திகழ்கிறது. அரசு அலுவல கங்கள், கோவில்கள், பள்ளிகள் முதலியவற்றால் இவ்வூர் சிறப்புற்றிருக்கிறது.

கப்பலூர் :

மதுரையிலிருந்து 15கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 1960 இல் தியாகராசர் நூல் ஆலைத் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏராளமான தொழிலகங்கள் ஏற்பட்டு இப்போது கப்பலூர் மதுரையின் விரிவாகக் காணப்படுகின்றது. தொழிற்பேட்டை அமைந்துள்ளது. பூக்கள் அதிகமாக இங்கு விளைவிக்கப்படுகின்றன. சற்று மேடான பகுதியில் அமைந்துள்ள இவ்வூரைப் பார்த்தால் கப்பலின் மேல்தளம் போல் தோன்றும்.

கரடிக்கல் :

சோழவந்தான் சாலையில் 8கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றின் மீது கருப்பண்ணசாமி கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. குன்றின் உயரம் 150 அடி. கொய்யாத் தோட்டங்கள் மிகுந்த ஊர்.

செக்கானுரணி :

மதுரை இரயில் சந்திப்பிலிருந்து இவ்வூர் இரயில் நிலையம் 17கி.மீ. தொலைவில் உள்ளது. சனிக்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. மருத்துவமனை உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்காக இந்த ஊரில் மிகுதியாக இலுப்பைத் தேர்ப்புகள் பராமரிக்கப்பட்டன.

பல்கலை நகர் நகரியம் :

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கட்டிடங்கள் அமைந்த இப்பகுதிக்கு பல்கலை நகர் நகரியம் எனப் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. 1939 முதல் இது நகரியமாக இருக்கிறது.

வடக்கப்பட்டி :

ரெட்டியார்கள் அதிகமாக வாழும் ஊர். இவர்களில் பெரும்பாலோர் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் என்னும் பொதுப்பெயரில் தமிழகம், புதுச்சேரி ஆந்திர மாநிலங்களில் புலால் உணவு விடுதிகளை நடத்தி புகழ் பெற்று விளங்குகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊரில் கூடி முனியாண்டி சுவாமிக்கு விழா எடுக்கின்றனர்.

கல்லுப்பட்டி :

மதுரையிலிருந்து 39கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சிறு நகரத்தின் முழுப்பெயர் தேவங்குறிச்சிக் கல்லுப்பட்டி. காந்தி நிகேதன் ஆசிரமத்தால் இவ்வூர் புகழ் பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவுக்கும், செப்புப் பாத்திரங்கள், மண்பானை மற்றும் கதர்
உற்பத்திக்கும் பெயர் பெற்றது. செவ்வாய்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. மலை மீது அக்னீஸ்வரர் கோவிலும், சுப்ரமணியர் சுனையும் உள்ளன. மூன்றாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் திருவிழாவுக்கு எட்டு ஊர்த்தேர்கள் வந்து சேர்கின்றன. வேளாண்மையில் பின்தங்கியுள்ளது.

சிலைமலைப்பட்டி :

பித்தளைப் பாத்திரங்கள், மண்பானைகள் கூட்டுறவு அடிப்படையில் தயாரிக்கப் படுகின்றன. வெண்கல விளக்குகள் செய்யும் கலையைத் தெரிந்தவர்கள் பலருள்ளனர். வைகாசியில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

பேரையூர் :

பெயரே ஊர் என்பது பேரையூர் என மாறி வழங்குகிறது. இவ்வூர் சர்ப்டூர் சாலையில் கல்லுப்பட்டியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. செப்புக்குடங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. செங்கல், சுண்ணாம்புக் காளவாய்களும், கத்திரிக்காய் வேளாண்மையும் இப்பகுதியில் ஏராளம். சந்தன வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது.

சோழவந்தான் :

இது மதுரைக்கு வடமேற்கே 25கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை, இரயில் வசதிகள் பெற்றுள்ளது. வைகைக் கரையில் தென்னஞ் சோலையும் இயற்கை பேரெழிலும் அமையப் பெற்ற இவ்வூரினைக் கண்டு 'சோழன் உவந்தான்' என்னும் பெயர் ஏற்பட்டது. நெல் வேளாண்மையில் இவ்வூர் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. வைகைக் கரையில்  பிரளயநாத சுவாமி கோவில் எழுந்துள்ளது. ஜனக நாராயணப் பெருமாள் கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ளன. இவ்வூர் வரலாற்றைத் தெரிவிக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இவ்வூரைச் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. பெரும் புலவராக விளங்கிய அரசன் சண்முகனார் இவ்வூரினர்.

திருவேடகம் :

வைகையின் வடகிழக்குக் கரையில் சோழவந்தானுக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அழகான சிவன் கோயில் உள்ளது. சமணர்களுடன் வாதிட்டு, சம்பந்தர் எழுதி வைகையில் விட்ட ஏடு, பெருவெள்ளத்தை எதிர்த்து கரை சேர்ந்த இடம் என்னும் காரணத்தால் இது ஏடகம் எனப் பெயர் பெற்றது. இந்நிகழ்ச்சி ஆவணித் திங்களில் 'எதிரேறிய திருவிழா' வாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வூரில் சுவாமி
சித்பவனாந்தர் ஆசிரமமும் விவேகானந்தர் கல்லூரியும். தொழிற் பள்ளியும் உள்ளன.

வேளாண்மை :

வேளாண்மைக்குப் பெரிதும் உதவும் ஏரி, கண்மாய் போன்றவைகள் மாவட்டத்து எல்லைப் பகுதிகளில் மட்டுமே உள்ளன. வைகை, பெரியாறு ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும், அவற்றிலிருந்து நீர் பெறப்படும் கால்வாய்ப்பகுதிகளிலும் கிடைக்கும் பாசன வசதிகளால் நெல், கரும்பு, சோளம், வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டதில் காப்பி, தேயிலை, பூக்கள், கேக்கோ, ஏலக்காய், புகையிலை, பஞ்சு, வெற்றிலை, காய்கறி முதலியன மிகுதியாய் விளைகின்றன காரணத்தால் இவை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கும் பல மாநிலங்களுக்கும் தினசரி அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் ஏலக்காய் அதிகமாய் விளைந்து அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது.

வேளாண்மைக் கல்லூரி :

Agri Collageஒத்தக்கடை என்னும் ஊரருகே யானைமலையின் அடிவாரத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வேளாண்மை தொடர்பான பலவும் ஆராய்ச்சி செய்யப் படுகின்றன. இது இப்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையமாக இருந்து வருகிறது. நானுறு ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரிக் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், நூலகம், ஆய்வுக்கூடங்கள், கால்நடை மருத்துவப் பண்ணை, கோழிப்பண்ணை, பெரியாற்றுப் பாசனத்து மாதிரிப் பண்ணைகள், மண் பரிசோதனை நிலையம், நெல் மற்றும் திராட்சைப் பயிர் ஆராய்ச்சி நிலையம் முதலியன இயங்குகின்றன. இவை மதுரைமாவட்டத்தின் வேளாண் வளத் திற்குத் துணையாக விளங்குகின்றன.

மேலூர் கலப்பைகள் :

இங்கிலாந்து நவீன கலப்பை தயாரிக்கிற தொழில்நுட்பம் பர்மாவுக்கு வந்து, 1948 களின் இறுதியில் பர்மாவில் நவீன கலப்பைகளை தயாரித்த வி.எம்.தேவர், அங்கு பெற்ற அனுபவத்துடன் தன் சொந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்குத் திரும்பி, மேலூரில் கலப்பைத் தொழிற்சாலையை அமைத்தார். உழுவதற்கான கலப்பைகளையும், விதை விதைக்கும் கருவிகளையும், உரம் போடும் கருவிகளையும் தயாரிக்கத் தொடங் கினார். இப்போது மேலூரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலப்பைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. வி.எம் போஸ் உருவாக்கிய கலப்பைத் தொழிற்சாலையிலிருந்து வட மாநிலங்களுக்கு கூட கலப்பைகள் விநியோகமாகின்றன.

நுனியில் இரும்புக்கொழு பதித்த மரக்கலப்பை, முழுக்க இரும்பினாலான கலப்பை, இருபக்கம் உழுகிற மாதிரியான ராக்கெட் கலப்பைகள், தொலி புரட்டிகள் போன்ற பல கருவிகள் இவர்களது தனிச்சிறப்புகள். டீலக்ஸ், மாஸ்டர், வேண்ட் என்று மூன்று அளவுகளில் கலப்பைகளைத் தயாரிக்கிறார்கள். விதவிதமான பதினாறு வகை வடிவங் களில் கலப்பைக் கொழுக்கள் தயாராகின்றன. மேலூரிலிருந்து தமிழ்நாடு முழுக்க மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங் களுக்கும் வினியோகமாகின்றன. சர்வசாதரணமாக பல தொழிற்சாலைகளில் அதிகம் உருவாவது இருப்புக் கொழுதான்.

சிலத்தொழிற்சாலைகளில் தினமும் 2400 கொழுக்கள் வரை தயாராகின்றன. இந்தக் கொழுவின் உற்பத்தி மட்டும் வருஷத்திற்கு மூன்று கோடி ரூபாய். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ நான்கு கோடி ரூபாயிற்கும் மேல் விவசாய கருவிகள் இச்சிறு ஊரான மேலூரில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் விநியோகமாவது ஓர் ஆச்சர்யம்.

இதைப்போல் மேலூரில் கிணற்று உருளைகள் தயாரிக்கும் எட்டுத் தொழிற்சாலைகள் உள்ளன. உருளைகள் இங்கு தயாராகி கர்நாடகம், கோவா, ஆந்திரம் என்று பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உருளைகள் இங்கு மட்டும் உருவாவது ஒரு விசேஷம். இது மாதிரியே தோசைக்கல் உற்பத்தி யாவதும் மேலூரில்தான். ஒன்பது அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரையிலான அளவுகளில் தோசைக்கற்கள் உருவாகின்றன. மேலூர் தோசைக் கல்லுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளத்திற்கும் அனுப்பப்படுகின்றன.

மதுரை சுங்கடிப் புடவைகள் :

இந்தியா முழுவதும் பிரபலமான விலைமலிவான சுங்கடிப்புடவைகள் அதிகம் தயாராவது மதுரையில்தான். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் செளராஷ்டிர சமூகத்தினர். மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள சந்துக்களில் அநேக சுங்கடிப் புடவைத் தயாரிப்புக் கம்பெனிகள் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவர்கள் சுங்கடிபுடவை நெசவுத் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆறு கெஜம் உள்ள வெள்ளைத் துணியில் பென்சிலால் டிசைன் போடப்படுகிறது. பிறகு உடம்புக்கு ஒரு கலரும், பார்டருக்கு ஒரு கலரும் போட்டு காய வைத்து, முடிச்சுகளை அவிழ்த்தால் அந்த இடத்தில் சாயம் படாமல் வட்டங்கள் நிறைந்து போகின்றன. இப்படி ஒரு சேலையில் மட்டும் ஐந்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை முடிச்சுகள். அதற் கேற்றபடி வட்டங்கள். பிறகு விரித்தால் இரண்டு வண்ணங்கள் இறைத்த மாதிரியான சின்ன வட்டங்களுடன் சுங்கடிப் புடவை தயார். இதற்கு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை உட்கார்ந்து நுணுக்கமாக முடிச்சுப் போடுகிறார்கள் செளராஷ்டிரப் பெண்கள். இந்தச் சுங்கடிப் புடவைகள் ஆந்திரம், பெங்களூர், பம்பாய் என்று பல பகுதிகளுக்கும் போகின்றன.

தமிழக அரசு சுங்கடிப் புடவைத் தயாரிப்பை குடிசைத் தொழிலாக 1955 இலேயே அங்கீகரித்து விற்பனை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. சுங்கடிப் புடவைகள் வேக்ஸ் பிரிண்டிங் முறையிலும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையிலும் தற்போது பல பாணிகளில் தயாரிக்கப்படுகின்றன.

மதுரை மல்லிகை :

மல்லிகை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக விளைகிறது. மதுரை தெற்குத்தாலுகா, வடக்குத் தாலுகாவிலும், விருதுநகர் மாவட்டத்தில் கரியாபட்டி, சேவல்பட்டியிலிருந்து மதுரை விமானநிலையம் வரையிலுமுள்ள பகுதிகளிலும் மல்லிகை பயிரிடுவது முக்கியமான பயிர்த்தொழிலாகும். மதுரையைச் சுற்றி மல்லிகை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிராகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மதுரையைச் சுற்றிலும் மல்லிகை சாகுபடி நடக்கிறது. மதுரையில் மல்லிகைப்பூ வியாபாரத்திற்கென்று தனி மார்க்கெட் உள்ளது. இது தமிழ்நாட்டில் மற்ற பூ மார்க்கெட்டுகளை விட மிகப் பொரியதாகும்.

இங்கிருந்து சென்னை, ராமநாதபுரம், காரைக்குடி தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி என்று தமிழகத்தின் பல பகுதி களுக்கும், கேரளத்தின் பல பகுதிகளுக்கும், பம்பாய், பெங்களூர் மார்க்கெட்டிற்கும் மல்லிகைப்பூ போகிறது. இது தவிர விமானம் மூலம் மலேசியா, சிங்கப்பூர், லண்டன், மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மதுரை மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மல்லிகை வியாபாரம் நடக்கிறது.

தொழில் வளம் :

மதுரை கோட்ஸ் ஆலை :

கோவைக்கு அடுத்தபடியாக மதுரையை ஆலைகளின் நகரம் எனலாம். இதில் முதன்மை யாகத் திகழ்வது மதுரை கோட்ஸ் ஆலை. ஆண்ட்ரூ ஹார்வி, புராங்க் ஹார்வி சகோ தரர்கள் 1893 இல் மதுரையில் ஓர் ஆலையை அமைத்தனர். இதனால் இதை ஹார்வி ஆலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆலையில் 5,00,000 க்கும் மேற்பட்ட கதிர்களும், சில ஆயிரம் இயந்திரத்தறிகளும் உள்ளன. 80ஆம் எண் நூல்களும் தயாராகிறது. இந்த நூல்கள் மதுரைநூல், ஹார்வி நூல் என்னும் பெயர்களைத் தாங்கி அமோக விற்பனையாகின்றன. கண்ணைக்கவரும் வண்ணத் துணிகளையும், பருத்தி, டெரிலின், டெரிகாட்டன் வகைத் துணிகளையும் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆலையில் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆலைக்கு சற்றுத் தொலை வில் ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்புகள் இருக்கும் ஹார்வி நகர் உள்ளது.

மீனாட்சி ஆலை :

இது 1921 இல் பரவையில் தியாகராகச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை இந்தியாவிலேயே புதுமையானதும், உற்பத்தித் திறம் மிக்கது என்றும் புகழ்பெற்றதாகும். இங்கு உற்பத்தியாகும் நூல்களும், துணிகளும் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றன.

சீதாலட்சுமி ஆலை :

இதை ஆலைத் தொழிலில் சிறந்த அனுபவம் உடையவரான சி.எஸ். இராமாச்சாரி தோற்றுவித்தார். மதுரை மாநகரில் அமைந்துள்ள இவ்வாலையில் செயற்கை நார்ப்பட்டு நூல் தயாராகிறது.

மற்ற ஆலைகள் :

பாண்டியன் ஆலை, பாலகிருஷ்ணா ஆலை, ராஜா ஆலை, ஜஂ விசாலட்சி ஆலை, ஜஂ கோதண்டராமா ஆலை (நெசவு) ஸ்ரீ கோதண்டராமா ஆலை (நூல்), இராஜேஸ்வரி ஆலை, கூட்டுறவு நூல் ஆலை ஆகிய ஆலைகள் மதுரையிலும், பசுமலையில் மகாலட்சுமி ஆலையும் உள்ளன.

கழிவுப் பஞ்சாலைகள் :

குறைந்த எண்களில் தயாராகும் நூலை கழிவுப் பஞ்சுகளைக் கொண்டு தயாரிக் கின்றனர். இதைக் கொண்டு சமக்காளம், மாட்டுக்கயிறு போன்றவற்றைத் தாயாரிக் கின்றனர். இத்தொழில் பெருகி, கழிவுப் பஞ்சாலைகள் பல தோன்றியுள்ளன.

மின் ரசாயனத் தொழிற்சாலை :

இது மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில் பெயிண்ட் தயாரிக்க உதவும் ஒரு வகைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இத்தூள் இந்தியாவின் பல இடங்களில் உள்ள பெயிண்டு கம்பெனிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

தொழிற்பேட்டைகள் :

தமிழக அரசு மதுரையிலும், கப்பலூரிலும் இரு தொழிற்பேட்டைகளை கட்டியுள்ளது. மதுரைத் தொழிற்பேட்டையில் பஞ்சாலைகளுக்கு வேண்டிய கீயர், புல்லி, ஷாப்டு, புஷ், ஆர்போர் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. பாண்டியன் கெமிக்கல்ஸ் நிறுவனம் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இதைத் தமிழக அரசும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. சிறுதொழில் வளர்ச்சிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அச்சுத்தொழில் :

பொதுவாக அச்சுத்தொழிலும், சிறப்பாக வண்ண அச்சுத் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பெய்தி உள்ளன. இவைகளில் டி நோபிளி அச்சகமும், கூட்டுறவு அச்சகமும் சிறந்த பணியாற்றுகின்றன.

பிற தொழில்கள் :

கதர் உற்பத்தி, வெல்லம் காய்ச்சுதல், கருப்பட்டி உற்பத்தி ஆகியன நன்கு நடை பெறுகின்றன. பனங்கற்கண்டு உற்பத்தி கோழியூரிலும், பாகநத்தத்திலும் சிறு தொழில் களாக நடைபெறுகின்றன. திருமங்கலத்திற்கு அருகில் மறவங்குளத்தில் மேற்கு ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் மெட்டல் பவுடர் கம்பெனி அலுமினியத்தூள் தயாரிக்கிறது. இது பட்டாசுத் தயாரிப்புக்கும், பெயிண்டு தயாரிப்புக்கும் பயன்படும். மேலும் வெண்கலத்தூள், மக்னீசியம்தூள் ஆகியனவும் தயாராகின்றன. மேலூர் வட்டத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சிமெண்டு ஆலை அமைக்க வாய்ப்புள்ளது.

ஆலைகளைத் தவிர, வேறு பெரிய தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் இல்லாதது ஒரு பெருங்குறை. பொருள் வசதி உள்ளவர்களும், தொழில் அறிஞர்களும் ஒருங் கிணைந்து முன்வந்தால், பெருந்தொழில்களையும், சிறுதொழில்கள் மற்றும் கைவினைத் தொழில்களையும் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழிற்வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை அளிக்கும் சலுகைகளையும் கடனுதவிகளையும் பெற்று தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.றலாம்.தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்