நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 22, 2011

தினம் ஒரு துணுக்கு - " நமது மாவட்டம் -சிவகங்கை "

தலைநகரம் :
சிவகங்கை
பரப்பு :
4,050.8 ச.கி.மீ
மக்கள் 
தொகை :
1,150,753
எழுத்தறிவு :
745,735 (72.66%)
ஆண்கள் :
565,594
பெண்கள் :
585,159
மக்கள் நெருக்கம் :
1 ச.கீ.மீ - க்கு 275



வரலாறு:

சிவகங்கை மாவட்டம் பல நூற்றாண்டுகள் இராமநாதபுர மாவட்டத்துடன் இணைந்திருந்தது. எனவே இராமநாதபுர மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் சிவகங்கை மாவட்டத்திற்கும் பொருந்துவனவாகும்.

பொதுவிவரங்கள்
எல்லைகள்:

வடக்கில் புதுக்கோட்டை, தெற்கில் இராமநாதபுரம்; கிழக்கில் புதுக்கோட்டை, இராமநாதபுரம்; மேற்கில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சிவங்கை மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.


மழையளவு:
சராசரி 904.7 மி.மீ. மழை பெய்கிறது.

மருத்துவமனைகள்: 57
வங்கிகள்: 124.
காவல் நிலையங்கள்: 34 (காவலர்கள்-1108)
தபால் நிலையங்கள்: 448
தொலைபேசிகள்: 3700
பதிவுப் பெற்ற வாகனங்கள்: 11,602


வருவாய் நிர்வாகம்:

கோட்டங்கள்-2 (தேவக்கோட்டை, சிவகங்கை); வட்டங்கள்-6 (தேவக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி); வருவாய் கிராமங்கள்-497; வளர்ச்சிக் கோட்டங்கள்-2 (சிவகங்கை, தேவக்கோட்டை); ஊராட்சி ஒன்றியங்கள்-12. (சிவகங்கை, காளையார் கோவில், தேவக்கோட்டை, திருபத்தூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி, கல்லல், கண்ணங்குடி, திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, எஸ்.புதூர்).

உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள்-3 (சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை) பஞ்சாயத்துகள்-437; குக்கிராமங்கள் - 2,366.

சட்டசபைத் தொகுதிகள்:
5 சட்டசபை தொகுதிகள் (சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர்)

பாராளுமன்றத் தொகுதி: 1 தொகுதி (சிவகங்கை)

கல்வி:

பள்ளிகள்: துவக்கநிலை-957, நடுநிலை-150; உயர்நிலை-76; மேனிலை-45. மெட்ரிகுலேஷன்-8; கல்லூரிகள்-9 (அரசு ஆர்.டி.எம். கல்லூரி, சிவகங்கை; ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி, திருப்பத்தூர்; சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரி; பள்ளத்தூர்; டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி, இளையான்குடி; சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரி, தேவக்கோட்டை; அழகப்பா கலை மற்றும் பொறியியல் கல்லூரி, காரைக்குடி; உடற்பயிற்சிக் கல்லூரி, காரைக்குடி; இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி; அரசு கலைக் கல்லூரி, பூலாங்குறிச்சி); பல்கலைக்கழகம்- அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.

சாலை வழி:
சரளைப் பாதையின் நீளம்- 198 கி.மீ.
சரளையல்லாத பாதையின் நீளம் - 759 கி.மீ.
கச்சாப் பாதையின் நீளம் - 567 கி.மீ.
நல்ல சாலை வசதி - 498 கி.மீ.
இருப்புப்பாதையின் நீளம் - 115 கி.மீ.

வழிபாட்டிடங்கள்:

கண்ணத்தாள் கோவில், காளையார் கோவில், காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருகோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் குன்றக்குடி முருகன் கோவில் ஆகியன இம்மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களாகும்.

கண்ணாத்தாள் கோவில் :

 ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடைபெறுவதால் மக்கள் திரளாக கூடுகின்றனர். மருதுபாண்டியர் திருப்பணி செய்த காளையார் கோவிலில் மூன்று சிவன் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது இவ்வூரின் சிறப்பாகும். அவை காளீசர் கோவில், சோமேசுவரர் கோவில், சுந்தரேசுவரர் கோவில் ஆகியனவாகும். வைகாசியில் பிரமோற்சவ திருவிழாவும், தை மாதத்தில் காளிசுரருக்கு திருவிழாவும், ஆடி மாதத்தில் பூரம் திருவிழாவும் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பிள்ளையார்பட்டி :

பிள்ளையார்பட்டியிலுள்ள கற்பக விநாயகர் கோவில் தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். தலையில் சடையுடன் யோகநிலையில் காணப்படும். விநாயக இறையுருவில் வயிறு குறைவாக மெலிந்துள்ளது; வலது கையில் சிவலிங்கத்துடன் வலம்புரி விநாயகராக காட்சி தருகிறது. மாதச் சதுர்த்திகளிலும், ஆவணியின் வளர்பிறைச் சதுர்த்தியுடன் முடியும் பத்து நாட்களிலும் விழாக்கள் நிகழ்கின்றன.

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் :

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் வைணவக் கோவிலாகும். வைணவம் வட இந்தியாவெங்கும் பரவக காரணமாயிருந்த இராமானுஜர் இத்தலத்திற்கு வந்து உபதேசித்துள்ளார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும், கோட்டியூர் கலம்பகமும், பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களும், ஆழ்வார்கள் ஐவர் பாடிய 39 பாசுரங்களும் இத்தலத்தைச் சிறப்பிக்கின்றன. ராஜராஜன் காலத்து கல்வெட்டு உட்பட இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கு கருவறை மீதான அஷ்டாங்க விமானத்தின் நிழல் ஒருபோதும் தரையில் விழுவதில்லை. நரசிம்ம அவதாரம் உருவானது இத்தலத்தில்தான் என்று கூறப்படுகிறது. இச்செய்திக்கு ஆதாரமாக கோபுர வாயிலின் இரு பக்கத்திலும் பல சித்திரங்கள் வரையப் பட்டுள்ளன.

குன்றக்குடி முருகன் கோயில் :

மலை மீது அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவில் தமிழகமெங்கும் புகழ்பெற்றதாகும். மலையின் அமைப்பு மயில் போன்றுள்ளது. மலை மீது முருகன் கோவிலும், மலையின் கீழ் சிவன் கோயிலும், தோகை போன்று வடிவமைப்பு உள்ள இடத்தில் தோகையடி விநாயகர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் பாண்டியர் காலத்து மூன்று குடைவரைக் கோவில்களும், மலையிலேயே அமைக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும், குடைவரைச் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்ட கடவுளர் உருவங்களும் உள்ளன. வைகாசி, விசாகமும், பங்குனி உத்தரமும் இங்கு பெரியத் திருவிழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தோறும் திரளான பக்தர்கள் வருகின்றனர்.

காரைக்குடி :

நகரில் சிவன்கோவிலும், பெருமாள் கோவிலும், கிருஷ்ணன் கோவிலும் அமைந்துள்ளன. காட்டம்மன் கோவில் முகமதிய படையெடுப்பினால் அழிவுற்று மீண்டும் கட்டப்பட்டது. வைகாசி முதல் செவ்வாய் கிழமையன்று தேர்த்திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் நெற்குப்பைச் சிவன் கோவில் பத்தாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட கோவிலாகும். திருக்கோளக்குடி மலை மீது குடைவரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அதனருகே தான்தோன்றி ஈஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. மருந்தீசர் கோவிலில் ஆனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

சிவகாமி அம்மன் கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இப்பெரிய கோவிலில் உள்ள அலங்கார மண்டபமும் சுரங்கக் கிணறுகளும் காணத்தக்கவை. இக்கோவிலில் நடராசர் வலக்கையிலிருக்கும் உடுக்கை ஒலி தரவல்ல உலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது அரிய படைப்பாகும். சிங்கம்புணரி ஐயனார் கோவிலில் வைகாசியில் பத்துநாள் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு நேர்த்திக் கடனாக மாடுகள் விடப்படுகின்றன. முப்பது மைல் சுற்றுவட்டத்தில் வாழும் மக்கள் இக்கோவிலில் பாக்கு வைத்து, கோவில் மாடுகளை தத்தம் ஊர் மஞ்சுவிரட்டுக்கு அழைக்கிறார்கள். சோழர்களால் கட்டப்பட்ட சிங்கம்புணரி சிவன் கோவில் சிவபுரிப் பட்டியில் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி ஆள் உயரம் உடையது. சித்தி விநாயகர் சிலையும் அதே அளவினதாக உள்ளது. வள்ளல் பாரி மன்னன் ஆண்ட இடம் பிரான்மலையாகும். ஆண்டுக்கொருமுறை மாசி சிவராத்தி நாளில் பிரான்மலையில் பாரி வேட்டை எனும் நிகழ்வு நடந்து வருகிறது. பிரான்மலையை அடுத்த தனிக்குன்றில் மூன்று கோவில்கள் உள்ளன. பாடல் பெற்ற முக்கியமான பெரிய கோவில் அடிவாரத்திலுள்ளது. மலையில் புடைப்புச் சிற்பங்களாய் இறை உருவங்கள் அமைந்துள்ளன. சித்திரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திருக்கார்த்திகையன்று மலை மீது விளக்கு ஏற்றுவர். அதன் ஒளி 20 கி.மீ. சுற்றளவுக்குத் தெரியும். அமாவாசை தினங்களில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சோலையாண்டவர் கோவில் பள்ளத்தூரில் கொத்தடி என்னும் பகுதியில் உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இங்கு பூச்சொரித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரா பெளர்ணமியன்று மூன்று கி.மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றுரிலிருந்து மண்குதிரைகளைச் சுமந்து வந்து இக்கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது. திருப்பூவணநாதர் கோவிலில் பத்துநாள் விழா ஐப்பசி மாதத்தில் நடைபெறும். அம்பாள் கோலாட்டம் போடுவது கண்நிறைந்த காட்சியாகும். இத்தலத்துக்கு சிவப்பிரானே சித்தராக வந்ததாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. கருவூர்த்தேவரும் இவ்வூரைப் பற்றி எழுதியுள்ளார். இக்கோவிலில் உள்ள உற்சவர் உருவங்கள் நல்ல தங்கத்தால் ஆனவை. திருப்பூவணத்தில் உயிர்நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். திருப்பாச்சேத்தி சிவன் கோயில் நளமகாராஜாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு மருது சகோதரர்கள் மரகதப் பச்சையில் சிவலிங்கம் செய்து வழங்கியுள்ளனர். இன்றும் அதை வைத்து வழிபடுகின்றனர். தேவக்கோட்டையில் சேக்கிழாருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.

முக்கிய ஊர்கள்:

தேவக்கோட்டை:

தேவக்கோட்டை என்பது தேவர் கோட்டையைக் குறிக்கும். மதுரை இங்கிருந்து 60 மைல். பல நகரங்களுக்கும் பஸ் வசதி இருக்கிறது. சேவு.அ.அண்ணாமலைச் செட்டியார் கல்லூரியும், பி.எஸ்.எஸ். சோமசுந்தரம் செட்டியார் நன்கொடையால் அரசினர் நடத்தும் மருத்துவமனையும் உள்ளன. தேவக்கோட்டையில்தான் நகரத்தார் இனத்தவர் அதிகமாக வாழ்கிறார்கள். தேவக்கோட்டை ஜமீன்தார்கள் இராமேஸ்வரம் கோவிலுக்கு செய்யும் திருப்பணியால் அக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலர்களாக உள்ளனர். இங்கு வீடுகள் மிக பெரியனவாக உள்ளன. அரசியல் எழுச்சி இந்நகரில் மிகுந்திருந்ததால் ஒரு சாலைக்கு தியாகிகள் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சருகணி:

தேவக்கோட்டை, சிவகங்கை, திருவாடனைச் சாலைகள் கூடுமிடத்தில் இவ்வூர் உள்ளது. கத்தோலிக்கருக்குச் சருகணி ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது.

சங்கரபதிக் கோட்டை:

அமராவதிப்புதூருக்கு அருகே இவ்வூர் உள்ளது. சின்ன மருதுவும் பெரிய மருதுவும் இவ்வூரில் கோட்டைக் கட்டி வேட்டையாடியதாகக் கூறுவர். அவர்கள் வழிபட்ட கோவில் இன்றும் அரசு பராமரிப்பில் இருந்து வருகிறது.

காரைக்குடி:

காரைச்செடிகள் பெருகி இருந்ததால் இவ்வூர் காரைக்குடி என்னும் பெயர் பெற்றது. திருச்சி, மானாமதுரை, அறந்தாங்கி ஆகிய மூன்று திசைகளுக்குப் பிரிந்து செல்வதற்கான இரயில் சந்திப்பு நிலையம் உள்ளது. இதனாலும் காரைக்குடி கல்வித் துறையில் வளர்ச்சி பெற்றிருப்பதாலும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க நகரமாக விளங்கி வருகிறது. 1942 சுதந்திரப் போராட்டத்தில் பெயர் பெற்றுத் திகழ்ந்தது. வங்கிகள் இங்கு மிகுந்துள்ளதால், வியாபாரத் துறையிலும் முன்னணியில் திகழ்கிறது. பங்கு மார்க்கெட்டும் சிறப்பாக நடைபெறுகிறது. தங்கம், வெள்ளி, வைர வியாபாரமும் மிகுந்துள்ளது. இங்கு பழம்பெரும் வீடுகளும், நாகரிக வசதி வாய்ந்த அரண்மனை போன்ற கட்டிடங்களும் நிறைந்துள்ளன. தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. இங்கு ஒரு பெரியத் தொழிற்பேட்டையும் இயங்குகிறது. இந்நகரில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று, இறைவழிபாடும், இசைநிகழ்ச்சிகளும் சிறப்பாக
நடைபெறுகின்றன.

திருப்பத்தூர்:

காரைக்குடியில் இரயில் சந்திப்பிலிருந்து, 20 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. திருப்பத்தூர் வட்டத் தலைநகராயும், ஊராட்சி ஒன்றியத் தலைநகராயும் விளங்குகிறது. செட்டிநாட்டு ஊர்கள் சூழ்ந்துள்ளதால் வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது. குன்றக்குடி, பிரான்மலை, பிள்ளையார்பட்டி, திருக்கோட்டியூர் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் இவ்வூரைச் சுற்றியுள்ளன. எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி சாலை வசதி இருக்கின்றது. சனிக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அரசினர் மருத்துவமனையும் உள்ளது. இங்கு மருதுபாண்டியர் கட்டிய கோட்டை அழிந்து விட்டது. மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்டது இவ்வூரில்தான். சுவிடிஷ் மருத்துவமனைக்குள் இவர்களின் சமாதி இருக்கிறது. பெரிய மருது பாண்டியவர் விவசாயிகளுக்கென கட்டிய பெரிய கேணிகள் இவ்வூரைச் சுற்றிலும் உள்ளன. காராளன் கேணி என்று இவற்றை அழைப்பர்.

நெற்குப்பை:

இது ஒரு பேரூராட்சியாகும். தமிழக மாவட்டங்களைப் பற்றி சுமார் 15 நூல்கள் எழுதிய சோம. லெக்குமணச் செட்டியார் இவ்வூரைச் சேர்ந்தவராவார். இவ்வூர் மணிமுத்தாறின் கரையில் அமைந்து நீர்பாசனம் பெறுகிறது. திருவிழாக்கள் நிறைய நடைபெறுகின்றன. கல்வி வசதியும் மருத்துவ வசதியும் நிறைந்த இவ்வூர் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

கீழ்ச் சீவற்பட்டி:

செட்டிநாட்டின் பெரிய ஊர்களில் ஒன்று. பாடுவார் முத்தப்பச் செட்டியார் எனும் பெரும் புலவர் பிறந்த ஊர்.

சீறுகூடல்பட்டி:

வாலி கண்டபுரம் எனும் ஊருக்கு அருகில் இது உள்ளது. இது கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊர்.

இளையாத்தங்குடி:

காவிரி பூம்பட்டிணத்திலிருந்து நகரத்தார்கள் வெளியேறிய பொழுது, பாண்டிய மன்னர் அவர்களுக்கு அளித்த முதல் ஊர் இளையாத்தங்குடி எனக் கூறப்படுகிறது. நகரத்தார்களின் முதன்மையான முக்கியமான குலதெய்வக் கோவில் இங்குள்ளது. நகரத்தார்கள் இப்பகுதியில் கோயில் கட்டியும் குளம் வெட்டியும் பெரும் பொருள் செலவிட்டுள்ளனர்.

பூலாங்குறிச்சி:

நாயக்க மன்னர்களின் வேண்டுகோளை ஏற்று சேதுபதி மன்னர் இவ்வூர் மறவர்களைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி, குதுப்கான் படைகளை விரட்டியதாக வரலாறு கூறுகிறது.

திருக்கோளக்குடி:

இங்குள்ள கோயில் கல்வெட்டால் மதுரையில் நடைபெற்ற முஸ்லீம் ஆட்சியைப் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. இவ்வூர் கோயில்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.

வேலங்குடி:

காட்டு வளமும் மலைவளமும் உடைய இவ்வூர் வழியாகச் செல்லும் மதுரை-புதுக்கோட்டை சாலை ராணி மங்கம்மாளால் அமைக்கப் பட்டதாகும். நகரத்தார் வரலாறு பற்றிய பழமை யான கல்வெட்டு இவ்வூரில் உள்ளது.

பிள்ளையார்பட்டி:

இங்கு அமைந்துள்ள கற்பக வினாயகர் கோவில் தமிழ்நாட்டில் புகழ் பெற்றது. இவ்வூரின் பழைய பெயர் எருக்காட்டூர். மலையாள நாட்டு மருத்துவர்களால் நடத்தப்படும் நாராயண ஆசிரமம் பல நோய்களைத் தீர்த்து வைத்து பிரபலம் அடைந்துள்ளது. புறநானுற்றில் 397 ஆம் பாடலை எழுதிய தாயன் கண்ணனார் பிறந்த ஊர்.

திருக்கோட்டியூர்:

வைணவத் தலமான இவ்வூர் திருப்பத்தூருக்கு தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. நற்றிணை 21ஆம் பாடலை எழுதிய சங்கப் புலவரான நல்லாந்தையார் இவ்வூரைச் சேர்ந்தவர். சோழியர் என்ற வைணவ அந்தணர் இங்கு வாழ்கின்றனர். வைணவப் பெரியார் திருக்கோட்டியூர் நம்பி இவ்வினத்தினரே.

சிங்கம்புணரி:

மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேவக்கோட்டை முதலிய பெருநகரங்கள் இவ்வூருக்கு சுமார் 35 மைல் தொலைவில் உள்ளன. பருத்தி, தென்னை வேளாண்மையில் இவ்வூர் சிறப்புற்றுத் திகழ்கிறது. வேர்க்கடலை வணிகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்ததாக இவ்வூர் விளங்குகிறது. வியாழன்தோறும் சந்தை நடைபெறுகிறது. தச்சுத் தொழிற்சாலை, தென்னை நாற்றுப் பண்ணை, பனை ஓலையை கொண்டு பல்பொருள் செய்யும் நிலையங்கள், கடலை அரைக்கும் ஆலைகள், கயிறு பின்னும் தொழில் ஆகியவற்றால் இவ்வூர் பெயர் பெற்றுத் திகழ்கிறது.

பிரான்மலை:

திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இம்மலையில் அணி அணியாக தேன்கூடுகளைக் காணலாம். மாம்பழம், பலாப்பழம், சீத்தாப்பழம், காய்கறிகள் விளைகின்றன. அடிவாரத்தில் கம்பும், நெல்லும், நவதானியங்களும் பயிராகின்றன. மலையுச்சியிலுள்ள பீரங்கி ஊமைத்துரை காலத்தியது. மருதுபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை இருக்கிறது. பிரான்மலையில் பழமையான கல்வெட்டுகள், வெள்ளைப் பிள்ளையார், நீர்ச்சுணைகள், பீரங்கி மேடை, 57 தீர்த்தங்கள், புவியியல் துறை ஆய்வாளர் நிலையம், பொழுது விழுந்தான் சுனை, மஞ்சள் சுனை, காசிச் சுனை முதலியவற்றை கண்டு களிக்கலாம். வள்ளல் பாரி வாழ்ந்த பறம்பு மலை இதுவேயாகும். பாரி முல்லைக்கு தேர் கொடுத்து உதவியாக சொல்லப்படும் இடம், இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு கல்லாலான நான்கு தேர்க்கால்களும், ஒரு சப்பரமும், கருங்குண்டும் உள்ளன.

சாக்கோட்டை:

இது புதுவயலிலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ள சிற்றுர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வூரில் உள்ளது. வீரசேகரர்- உமையாம்பிகை ஆலயம் இவ்வூருக்கு சிறப்பு தருவதாய் அமைந்துள்ளது.

பள்ளத்தூர்:

இச்சிறுநகரம் காரைக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீட்டின் தரைமட்டம் அடுத்தடுத்த வீடுகளின் மாடிமட்டமாக இருக்கும். சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும், பெண்கள் உயர்நிலைப் பள்ளியும், பாத்திரத் தொழிற்சாலையும் பள்ளத்தூருக்குப் பெருமை சேர்க்கின்றன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிந்த ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் இவ்வூரினர். 1921 இல் பெரியார் ராமசாமி நாயக்கர் தலைமையில் இங்கு ஓர் அரசியல் மாநாடு நடைபெற்றது.

செட்டிநாடு:

1929 இல் செட்டிநாடு என்னும் இரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அதையடுத்து சில வீடுகளும் கோவிலும் கட்டப்பட்டன. ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் பிறப்பிடம் செட்டிநாடாகும். செட்டி நாட்டரசர் என்னும் சிறப்பை அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கும் பொருட்டு இத்தகையப் பணிகள் சிறந்து மேற்கொள்ளப்பட்டன. கால்நடைப் பண்ணையும், அண்ணாமலை தொழில் நிலையமும், ஜவஹர் மில் என்ற நூலாலையும் இவ்வூரில் சிறப்புற நடைபெறுகின்றன.

குன்றக்குடி:

செட்டிநாட்டின் பகுதிகளுக்கு எல்லையாக இது அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைமை மடம் இங்குள்ளது. பெரிய மருது பாண்டியரால் மலை மீது கோபுரமும், மண்டபமும் கட்டப்பட்டன. முருகனுக்குத் திருவிழா நாட்களில் அணிவிக்கப்படும் பொற்கவசம் சின்ன மருது பாண்டியரின் உபயமாகும். மலையைச் சுற்றி பக்தர்கள் தங்க சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.

சிவகங்கை:

சிவகங்கை ஒரு நகராட்சியாகும். கெளரி மகால் என்னும் பழைய அரண்மனை இங்குள்ளது. இந்த அரண்மனையில் அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் மண்டபமும், அதன் நான்கு மூலைகளிலும் யாளிச் சிற்பங்களும், மணிகூண்டும், அரசக் குடும்பத்தினரின் நீச்சல்குளமும் உள்ளன. இந்த அரண்மனைக்குள் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சின்னமருது இந்த அரண்மனையில்தான் அடைக்கலம் கொடுத்தார். மேலும் கோகலே மண்டபம், அரசர் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நீதிமன்றம், கத்தோலிக்க ஆலயம், ஏராளமான அரசு அலுவலகங்களும் இந்நகரில் உள்ளன.

இளையான்குடி:

தொழில் வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்துள்ள இவ்வூர் பரமக்குடியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் இந்த ஊரைச் சேர்ந்தவர். இந்நாயனார் பாண்டிய சிற்றரசர்களுள் ஒருவர். இங்கு இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள், நான்கு பள்ளி வாசல்கள், ஒரு தேவாலயம், வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முதலியன உள்ளன. வெற்றிலைக் கொடிக் கால்கள் இங்கு ஏராளம். பெரிய ஏரி இருப்பதால் இருபோகம் நெல் விளைகிறது.

காளையார் கோவில்:

மதுரையிலிருந்து 61 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இது மாணிக்கவாசகர் வருகை புரிந்த ஊராகும். சிங்கள படையை வென்ற வேங்கை மார்பன் ஆட்சி செய்த ஊர் இது. இடிபாடுகளுடன் பாண்டியன் கோட்டை இங்குள்ளது. காளீசுரர் சந்நிதியின் எதிரில் மருது பாண்டியரின் சமாதிக் கோவில் உள்ளது. பாண்டிய மன்னர்களின் நாணயச்சாலை இவ்வூரில் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. பல இசைப்புலவர்கள் காளையார் கோவிலில் தோன்றியுள்ளனர். அப்பர், சேக்கிழார், அருணகிரியார், குமரகுருபரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சித்தாந்த மடமும், வேதாந்த மடமும் உள்ளன.

நாட்டரசன் கோட்டை:

இது கவிச்சக்கரவர்த்தி கம்பன் சமாதி உள்ள ஊராகும். கம்பன் இங்குதான் உயிர் துறந்தார் என்பர். இங்கு ஆண்டுதோறும் கம்பன் விழா எடுக்கப்படுகிறது. கம்பன் குளம், கம்பன் ஊருணி, கம்பன் செய், கம்பன் நடுகல் முதலியனவும் உள்ளன. இதற்கு களவழிநாடு என்ற பெயரும் இருந்தது. கண்ணகிக்கு கோவில் உள்ளது. இந்த ஊர்த் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினருக்கு 'நாட்டரசன்' என்ற பட்டம் கூறி திருநீறு வழங்கப்படுகிறது.

பாகநேரி:

இது நாட்டார்களாலும் நகரத்தார்களாலும் புகழ் பெற்ற ஊர். சிவகங்கை வட்டத்திலுள்ள இவ்வூரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் காசி விசுவநாதன் செட்டியாரால் ஏற்படுத்தப்பட்ட பெரிய நூலகம் உள்ளது. இங்கு பல அரிய நூல்கள் உள்ளன.

மானாமதுரை:

இவ்வூரிலிருந்து மதுரை 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு இரயில் சந்திப்பு நிலையம். பல ஊர்களுக்கும் பஸ் வசதி உண்டு. இவ்வூரின் நடுவே வைகை ஆறு ஓடுகிறது. இராமேஸ்வரம் தீவை இவ்வூர் வழியாகச் சென்றடையலாம். 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மானவீரன் எனும் பாண்டியனால் இவ்வூர் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிராமணர்களும், கிருத்துவர்களும்,
முஸ்லீம்களும் நிறைய வாழுகின்றனர். ஆனந்தவல்லி அம்பாள் கோயில் வைகையின் மேல்கரையில் உள்ளது. மண்பாண்டம், ஓடு, செங்கல் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கடம் என்னும் வாத்திய இசைக் கருவிக்கு பெயர் பெற்ற ஊராகும்.

திருப்புவனம்:

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற இச்சிவத்தலம் தொன்று தொட்டு புகழ்பெற்றுத் திகழ்கிறது. இங்கிருந்து மதுரை 19 கி.மீ. மானாமதுரை 29 கி.மீ. பாண்டிய அரசர்க்குத் திருப்புவன மக்கள் நெல்லால் கோட்டை கட்டி, கதிரை எடுத்து முடிசூட்டி வந்தனராதலால் இவ்விடம் நெல்முடிக்கரை என்னும் பெயர் பெற்றது. செவ்வாய் கிழமைகளில் சந்தை கூடுகிறது. முதல் போகத்தில் நெல்லும், அடுத்த போகத்தில் கரும்பு அல்லது வாழை என்றும் மாறி மாறிப் பயிர் செய்கின்றனர். இந்த ஊர் நிலங்கள் மிகுந்த விலை மதிப்புடையவை. இங்கு கத்தோலிக்கர் தேவாலயம் ஒன்றும், பல மடங்களும் அலுவலகங்களும் உள்ளன.

திருப்பாச்சேத்தி:

திருபுவனத்திற்கு 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு சேரை மாநகர் என்ற இன்னொரு பெயரும் வழங்குகிறது. இரயில் நிலையம் உள்ளது. இது அரிவாள் உற்பத்திக்குச் சிறந்த இடமாகும். இவை அழகானதும், நீளமானதுமாகும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கத்தரிக்காய் முதலியன இங்கிருந்து மிகுதியாக ஏற்றுமதியாகின்றன.

புகழ்பெற்றோர்:

மருதுபாண்டியர், வேலுநாச்சியார், கணியன் பூங்குன்றனார், மாசாத்தியார், மாசாத்தனார் (சங்ககாலம்), பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்ப செட்டியார் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து வாழ்ந்து புகழ் பெற்றோர் ஆவார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் ஏகாதிபத்திய வெறியர்களான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி இறந்தனர். இப்போரில் ராணி வேலு நாச்சியார் காட்டிய வீர உணர்ச்சி அளப்பரியது.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி.க்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும் பிறகு இந்திய சுதந்திர படையின் தளபதியாய்த் தோன்றி நாடு விடுதலை பெற போராடியவர்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். மற்றும் தமிழ்க்கடல் ராய. சொ, சொற்பொழி வாளரும் எழுத்தாளருமான சா.கணேசன், பேராசிரியர் லெ. ப.கரு. ராமநாதன் செட்டியார், பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், தமிழிசை வளர்த்த செட்டி நாட்டரசர் ராஜா.சர். அண்ணாமலைச் செட்டியார், அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தராக விளங்கிய ராஜா. சர். முத்தையா செட்டியார், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார், எழுத்தாளர் தமிழ்வாணன், டி.ஐ. சைக்கிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எ.எம்.எம். அருணாசலம் செட்டியார், நாடு போற்றும் கவியோகி சுத்தானந்த பாரதி, கவிஞர் அப்துல்ரகுமான், வயலின் இசை வல்லுநர் குன்னக்குடி வைத்தியநாதன், சைவத் தமிழ் அறிஞர் குன்றக்குடி அடிகளார், எழுத்தாளரும் இயக்குனருமான கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் இம்மாவட்டத்தில் பிறந்து புகழ் பெற்றோராவர்.

புவிவளம்:

இம்மாவட்டத்தில் பூமிக்கடியில் பல கனிமங்கள்கிடைக்கின்றன.

சுண்ணாம்புக்கல்:

சிமெண்டுத் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கல் இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் கிடைக்கிறது. சுண்ணாம்புக்கற்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் கால்சியம் கார்பைடு ஆகியவற்றின் உற்பத்திக்கும் உதவுகின்றன.

பெட்ரோல்:

தேவக்கோட்டைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் பெட்ரோல் கிடைக்கலாமென்று கருதப்படுகிறது.

இரும்புக்கனி:

கானாடு காத்தான் பகுதியைச் சுற்றிலும் இரும்புக் கனிகள் சிறிதளவு உள்ளன.

நிலக்கரி:

காரைக்குடிக்கு அருகே 1963 இல் உயர்ந்த பழுப்பு நிலக்கரி கிடைத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஏனோ மேற்கொண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது.

பாறைகள்:

திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சியிலுள்ள காஞ்சாத்து மலைப்பகுதியில் 40 ச.கி.மீ. பரப்பளவுக்கு பாறைகள் உள்ளன. பாறைகளைக் குறித்து ஆய்வு செய்ய ஏற்ற இடம். வழுக்குப் பாறைகள் காண்பதற்கு அரிய காட்சியாகும்.

நீரூற்றுக் கிணறுகள்:

இக் கிணறுகள் காரைக்குடிப் பகுதியில் மிகுதியாக உள்ளன.

மஞ்சள் காவி:

சிவகங்கையில் காணப்படும் முட்காடுகள், காட்டூரணி போன்ற பகுதிகளில் வெள்ளைக் களிமண் இருக்கிறது. சிவகங்கை நகர் எல்லையில் பல லட்சம் டன் மஞ்சள் காவி கிடைக்கலாம் என்கின்றனர். இது பல வண்ணப் பெயிண்டுகள் தயாராக்கப் பயன்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் ஒரு வகை ஈயமும் பெயிண்டு தயாரிப்புக்கு முக்கியத் துணைப் பொருளாகும்.

கிரைபைட்:

உலகில் மிகவும் தரம் வாய்ந்த கிராபைட் கனிமம் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

களிமண்:

எஃகு ஆலைகளுக்குத் தேவைப்படும் ஒருவகைக் களிமண், நாட்டரசன் கோட்டையிலும், சிவகங்கைக்கு அருகே பழைய மாங்குடி, சங்கிலிப்பட்டி, புதுப்பட்டி, குசவனுடைப்பு முதலிய ஊர்களிலும் கிடைக்கிறது. இம்மண்ணில் தாராகும் செங்கற்கள் சூடு, உலோகக் கசடு ஆகியவற்றைத் தாங்கும் சக்தி பெற்றவை.

வேளாண்மை:

ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வேளாண்மைக்கு உதவுகின்றன. மொத்தப் பரப்பளவில் 1.04 லட்சம் ஹெக்டெர் நிலப்பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது. சிவகங்கை வட்டத்தில் வைகையும், பெரியாற்றுக்காலும், மானாமதுரை வட்டத்தில் வைகையும், தேவகோட்டை வட்டத்தில் வரிசலையாறும், திருப்பத்தூர் வட்டத்தில் பாலாறும், மணிமுத்தாறும், காரைக்குடி வட்டத்தில் குண்டாறும் மணிமுத்தாறும், உப்பாறும் பாய்ந்து உழவுத்தொழில் செழிப்புற உதவுகின்றன. ஆனால் பெரும்பாலும் இம்மாவட்டத்தில் மழையை நம்பியே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். நீர்ப்பாசனம் தேவைப்படும் பயிர்களான நெல், வாழை, கரும்பு, வேர்க்கடலை முதலியவற்றையும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு, கொள்ளு முதலியவற்றையும் பயிரிடுகின்றனர். ஏரி மற்றும் கிணற்றுப் பாசனம் நடைமுறையில் உள்ளது. நீர்ப்பாசனம் செய்யப்படும் நிகரப் பரப்பளவு 58,126 ஹெக்டெர் ஆகும். நெல் 10,991 ஹெக்டெரிலும், கரும்பும் கேழ்வரகும் 6008 ஹெக்டெரிலும், வேர்க்கடலை 10752 ஹெக்டெரிலும், கரும்பு 2584 ஹெக்டரிலும், பருத்தி 791 ஹெக்டெரிலும் விளைவிக்கப்படுகின்றன.

தொழிற்சாலைகள்:

கயிறு, பி.வி.சி. குழாய்கள், காகிதம், வேதிப் பொருட்கள், நைலான் சிப், சாம்பல் நூல், நவீன அரிசி ஆலைகள், அச்சகங்கள் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர ஆலைகளையும் சேர்த்து மொத்தம் 3117 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

கிராம மற்றும் குடிசைத் தொழில்கள்:

கைத்தறி நெசவு அலகுகள் - 5408
கதர் அலகுகள் - 989
பாய் நெசவு அலகுகள் - 302
கூடை முடைதல் - 207
பனை ஓலை முடைதல் - 307
பதநீர் இறக்குபவர்கள் - 968
பனைவெல்லம் தயாரிப்பு அலகுகள் - 723
மட்பாண்ட அலகுகள் - 862
செங்கல் சுண்ணாம்பு ஆலைகள் - 678
இரும்பு பட்டறைகள் - 366
தச்சு வேலை - 379
கயிற்றுத் தொழில் - 218
செருப்பு - 298
தோல் பதனிடுதல் - 989
தீப்பெட்டி அலகுகள் - 12
கைவினைப் பொருள் அலகுகள் - 117
பிற தொழில்கள் - 2080

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்